தலையங்கம்
சட்டத்தின் துணைகொண்டே நாட்டின் ஒழுங்கமைப்பு நேர்க்கோடென செயல்படுகிறது என்று நம்பப்படுகிறது. அந்த நேர்க்கோடு சற்றே தடம் மாறினாலும் பிரச்சினைகளைத் துணிச்சலாக முன்னெடுத்து மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைப்பவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அண்மையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற சம்பவம் சனநாயகத்தின் மீதான நம்பிக்கை குறித்த சலனத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது.
கடந்த 25.4.2010 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழ்நாட்டின் முதல்வர் உரையைத் தொடங்கியபோது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் சுமார் பத்துபேர் கருப்புக்கொடியுடன் அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது காவல்துறையினர் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அங்கு பார்வையாளர்கள் பலர் எழுந்து காத்திருந்ததைப் போல ஆக்கோரஷமாகத் தாக்குதலில் ஈடுபட்டு சம்பவத்தைப் படம்பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும் தாக்கியிருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தொண்டர் களுக்கும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினருக்கும் இந்தச் சம்பவம் முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற எண்ணம் எப்படித் தோன்றாமல் போயிற்று? அது மட்டுமன்றி தனது கருத்தைப் பலமாகப் பதிவு செய்ய விரும்பிய தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர்கள் மீது அதிரடியாகப் பல பிரிவுகளில் வழக்குகள் தொடர்ந்து சிறையில் தள்ளியுள்ளது காவல்துறை.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட செய்தியைக் கூட ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்ற பெரும்பான்மை ஊடகங்களும் வெளியிட முன்வரவில்லை. பத்திரிகையாளர் சங்கங்களும் எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோசமான சூழ்நிலை பத்திரிகையாளர் மற்றும் மீடியாக்களில் பணிபுரிபவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இது சமூகக்கேடான செயலாகும். இந்த நிலை மாற வேண்டும்.
.......................
அரசின் நரித்தனங்கள்
நல்ல தம்பி
கடந்த ஏப்ரல் 16 அன்று இரவு 10.45 மணிக்கு மலேசிய நாட்டிலிருந்து விமானம் மூலம் மருத்துவச் சிகிச்சைக்காக பார்வதி அம்மாள் சென்னை வந்தார். ஆனால் வந்த விமானத்திலேயே புறப்படும் வரை காத்திருக்கச் செய்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
எவ்வளவு கொடிய செயலைச் செய்திருந்தாலும் குற்றவாளிக்கு மட்டுமே தண்டனை என்று சட்டம் சொல்கிறதே தவிர அவரின் பெற்றோருக்கும் சேர்த்தே தண்டனை என்று கூறவில்லை. பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு தண்டனை என்று சட்டமுள்ள தமிழகத்தில்தான் விடுதலைப் போராளியும் ஈழத்தமிழருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் மருத்துவச் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வந்து, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற கொடிய செயலும் நடந்துள்ளது. இது தமிழராகிய நம் அனைவரையும் எரிச்சல்படுத்திய நிகழ்வு. எத்தனை ஊழல்கள், அராஜகங்கள், கற்பழிப்புகள், கொலைகள் தினம் தினம் நடந்துக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் குற்றமற்றவர்களா என்ன? பயணத்திற்கு அனுமதித்து விசா வழங்கியது ஒரு குற்றம். பார்வதி அம்மையாரின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டது மற்றொரு குற்றம். அதைக் கேடயமாகப் பயன்படுத்தி பெரிய போராட்டமாக மாற்றாமல் பேச்சுவார்த்தையாலேயே சாதிக்கக் துடித்த முறை மற்றொரு குற்றம். (இது பிரபாகரன் கற்றுக் கொடுத்த பாடம் என்பார்கள்).
ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசும் அத்தனை கட்சிகளும் பார்வதி அம்மையாரை அனுமதிக்கச் சொல்லி ஏன் கூட்டாக முதல்வரை வலியுறுத்தவில்லை, நிர்பந்திக்கவில்லை? ஈகோ காரணமா? இல்லை தலைவர் தூக்கம் கெட்டுவிடும் என்ற நினைப்பா? இல்லை தலைவர் தவறாக ஏதும் நினைத்துக்கொள்வார் என்ற காரணமா?
‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெயர் பெற்ற தமிழ்நாட்டில்தான் இத்தகைய அவமதிப்பு ஒரு தமிழ்த் தாய்க்கு நிகழ்ந்திருக்கிறது. இது தமிழர் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்கும் செயல்.
2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் காரணமாகப் பல நாடுகளில் வசித்த ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பினர். அதையொட்டி திருச்சியில் வசித்து வந்த வேலுப்பிள்ளை--_ பார்வதி தம்பதியினர் இலங்கைக்குச் சென்றனர். அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு, இலங்கைச் சென்ற அவர்கள் மீண்டும் தமிழகம் வந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்ற மத்திய அரசு அவர்களுக்கு இந்தியாவில் நுழைய தடையாணை விதித்தது. அந்தத் தடையாணையால் தான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மையாரை தமிழகத்திற்குள் நுழைய மறுத்திருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.
80 வயது வயோதிகத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட ஒருவர் மருத்துவ சிகிச்சைக் காகத்தான் வருகிறார், அவர் பிரச்சாரத்திற்கோ ஆயுதங் களுடனே வரவில்லை. வாத நோய் தாக்கப்பட்டு அவஸ்தைப்படும் அவரைத் திருப்பி அனுப்பியிருப்பது என்பது மத்திய, மாநில அரசுகளின் ஈவு இரக்கமற்ற தன்மையையே காட்டுகிறது.
வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண்ணிலா பக்கவாத நோயுற்று வாடும் ஒரு முதியவரை அலைக் கழித்து, அல்லல்படுத்தி அழவைக்கிறோம் என்ற கேள்வி உறுத்துகிறது.
அயல் தேசமான பாகிஸ்தானி லிருந்தே சென்னை வந்து மருத்துவச் சிகிச்சை பெற்று உடல்நலத்துடன் நாடு திரும்புவதைப் பற்றி புகழ்ந்துகொள்ளும் நாம், தொப்புள்கொடி உறவான ஒரு தமிழ்த் தாய்க்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்திற்குள் அனுமதிக்காமல், அம்மையாரை அவஸ்தைகளுக்கு ஆட்படுத்தும் கொடுமையையும் தமிழ்நாட் டில்தானா நிகழ்த்த வேண்டும்.
முறையான விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பார்வதி அம்மாள் எந்தவிதக் காரணமும் இல்லாமல், விமானத்தை விட்டு இறங்கக்கூட அனுமதிக்கப் படாமல், திருப்பி அனுப்பப் பட்டதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அல்லது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 19 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவரும் நளினி, விடுதலைக்காக மேல்முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்வதிஅம்மையாரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதன் பொருட்டு கண்டனக் கணைகளால் தாக்குண்ட ஆளுங்கட்சியினர், மீண்டும் நளினியின் பிரச் சினையை கையிலெடுத்து பரபரப்பாக்கியுள்ளனர். அவர் சிறையில் செல்ஃபோன் வைத்திருந்ததாகக் கூறி மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி நாமே தொடர் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தால் வெறிபிடித்த ராஜபக்ஷேவின் மனநிலை எப்படி இருக்கும். அவரின் ராணுவம் தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கும் என்ற கேள்வியை இதைச் செயல்படுத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
.......................
தமிழனை வஞ்சிக்கும்
இந்திய சினிமா!
இந்திய சினிமா!
அக்னிகுஞ்சு
‘‘இலங்கை மிகப் பெரிய இதயம் கொண்ட நாடு... அவர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்’’ இப்படியாக இந்த நூற்றாண்டின் மிக அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருப்பவர் யார் தெரியுமா? இந்தி சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன்தான்.
பள்ளிக் குழந்தைகள் மேல் குண்டு போட்டுக் கொன்ற, தமிழச்சியின் கர்ப்பத்தில் இருக்கும் கரு கூட தமிழனாய்ப் பிறந்துவிடக்கூடாது என கொடூர எண்ணத்தில் பிள்ளைதாச்சி தமிழச்சிகளை பார்த்துப் பார்த்துக் கொன்ற, ஒரே நாளில் ஐம்பதாயிரம் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக கொன்று புதைத்துவிட்டு இன்று வரை அதை உலகத்தின் கண்களில் இருந்து மறைத்துக்கொள்ள முயற்சி செய்கின்ற....
இப்பேர்பட்ட ரத்தக் காட்டேரி ராஜபக்ஷேவின் இலங்கையைத்தான் ‘மிகப் பெரிய இதயம் கொண்ட நாடு’ எனச் சொல்லியிருக்கிறார் அமிதாப் பச்சன்.
அமிதாப் சிறந்த நடிகர். இதை அவராக பேசினாரா அல்லது தனது தொழில் புத்திப்படி யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை உச்சரித்திருக்கிறாரா என்றெல்லாம் கேள்விகள் கிளம்பின.
இந்த நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன், ‘இலங்கைக்கு போகக் கூடாது’ என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் இயக்குனர் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர். மும்பையிலுள்ள அமிதாப்பின் வீட்டுக்கே போய் தங்களது எதிர்ப்பை தெரிவித்த அவர்களிடம் ‘நான் தமிழர்களின் உணர்வைப் புரிந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார் அமிதாப். அதையே தனது பிளாக்கிலும் எழுதியிருக்கிறார்.
இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப் போடு இந்தியத் திரையுலகம் சேர்ந்து நடத்தும் மிகப் பெரிய வர்த்தகத் திருவிழாதான் இந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா. ஹாலிவுட்டுக்கு எப்படி ஆஸ்காரோ அப்படித்தான் இந்தியத் திரையுலகுக்கு இந்த விழா. இந்தியாவின் சந்தையையும், இந்திய அரசின் தார்மீக ஆதரவை வேண்டியும் பல வெளிநாடுகள் தங்கள் நாட்டில் இந்த விழாவை நடத்த போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் சென்ற வருடம் இந்த விழா இங்கிலாந்தில் நடந்தது. இதையடுத்து, அந்நாட்டின் குறிப்பிட்ட மாநிலத்தின் சுற்றுலா வருமானம் கணிசமாக அதிகரித்ததாம்.
இந்த நிலையில்தான்... சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் பல நாடுகள் நடத்த போட்டி போட இந்த வருடம் திடீரென இலங்கைக்கு கிடைத்திருக்கிறது இந்த வாய்ப்பு எப்படி என்பதுதான் கேள்வி?
கடந்த வருடம் மே 17, 18 தேதிகளில் பூமி உருண்டையில் எங்கும் நடக்காத வகையில் சுமார் ஐம்பதாயிரம் தமிழர்களை போர் என்ற போர்வையில் ரசாயன மற்றும் நவீன குண்டுகளைப் போட்டு பொசுக்கிக் கொன்றது இலங்கை. கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழர்கள் மீது சிங்களம் ஏவி வந்த கொடூர வன்முறை வெறியாட்டங்களின் உச்சகட்டமாக இந்த எம தாண்டவத்தை இந்தியா உட்பட உலக நாடுகளின் உதவியோடு ஆடி முடித்தார் ராஜபக்ஷே.
எத்தனை நாளைக்குத்தான் இந்த கொடூர மான ரத்தக்கறையை மறைக்க முடியும். பல மனித உரிமை அமைப்புகளாலும் இலங்கையின் போர்க் குற்றங்கள் சர்வதேச அரங்கில் அம்பலமாகி வருகின்றன. இதனால் உலக அளவில் கிடைக்க வேண்டிய பல பொருளாதார உதவிகள் இலங்கைக்குக் கிடைக்காமல் நழுவி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு கொடுத் திருந்த வரிச்சலுகையை ரத்து செய்தது இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.
தனது மனித உரிமை யற்ற கொடூர முகம் உலக அரங்குகளில் கிழிவதால் தான் இதுபோன்ற பொருளாதர உதவிகள் தடைபடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டுள்ள இலங்கை.... ‘நான் நல்லவன் தான். என் நாட்டில் எந்த மனித உரிமை மீறலும் நடக்கவில்லை’ என உலகத் திடம் நடித்து ஷோ காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நடிப்பை எங்கே கற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கைச் சரியாகக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
உலக அளவில் புகழ்பெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவைக் கொழும்பில் நடத்தினால் உலகத்தின் கவனம் தன் பக்கம் திரும்பும். அதன் மூலம் நமது போர்க் குற்றங்களை மறைத்து உலக நாடுகளின் உதவியைப் பெற்றுவிடலாம் என்பது இலங்கையின் கணக்கு. இலங்கையின் இந்த ஆசையை கேட்காமலேயே நிறைவேற்றியிருக்கிறது இந்தியா. அதன் விளைவுதான் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைக் கொழும்பில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் நடத்த இருக்கிறார்கள்.
இதன் விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டிருக்கும் அமிதாப் விழா ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக சமீபத்தில் இலங்கை சென்று ராஜபக்ஷேவை பார்த்துவிட்டுத்தான் ‘இலங்கை மிகப்பெரிய இதயம் கொண்ட நாடு’ என சொல்லியிருக்கிறார். இலங்கையில் மனித உரிமைகள் ஏதும் நடக்கவில்லை எனத் திரும்பத் திரும்பக் கூறும் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கும் அமிதாப்பின் வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைய தமிழ் திரைப்பட உலகத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்தான். அவர்களது பொருளாதார உதவிகளால்தான் தமிழ் நட்சத் திரங்களும், சினிமா அதிபர்களும் செல்வத்தில் கொழிக்க முடிகிறது. வெளிநாட்டு ரைட்ஸ் என பெரும் அளவுக்கு விற்று நிம்மதிப் பெருமூச்சு விட முடிகிறது.
இந்தி சினிமாக்காரர்கள் தான் இந்திய அரசின் எடுபிடியாக மாறி கொழும்புக்கு காவடி தூக்குகிறார்கள். ஆனால் ராமேஸ்வரம் வரை போய் போராட்டம் எல்லாம் நடத்திய தமிழ் சினிமாக்காரர்களுக்கு எங்கே போயிற்று இன உணர்வு. இன்னும் சொல்லப் போனால் இந்தி சினிமா உலகின் டாப் டென் ஒளிப் பதிவாளர்களில் எட்டு பேர் தமிழர்கள்தான். இசை மூலம் இந்தியாவுக்கு ஆஸ்கர் மாலை சூட்டிய ஏ.ஆர்.ரகுமான்கூட தமிழர்தான். அவர்களாவது ஈழத்தமிழர்களின் அவலம் பற்றி பாலிவுட்காரர்களிடம் எடுத்துக் கூறி இந்த விழாவைத் தடுக்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு உணர்த்த போர்க்காட்சிகளை வெளியிட்டுப் பல தமிழர்களைக் கைது செய்த துரோகத்தையும் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்ததைத் தடுக்காமல் இந்திய அரசுக்குத் துணைபோனது போன்ற பழிபாவத்தை சுமந்துக்கொண்டிருக்கிறது அரசு. அந்த பாவத்தின் மேல் இன்னொரு பாவமாக இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளிப் பட்டியலிருந்து விடுவிக்கும் முயற்சியில்தான் இந்த விழாவும் நடக்கிறது. இதற்கும் இந்தியா காரணமாக இருந்தால் நம் தேசத்தில் பிறந்ததால் காந்திக்குத்தான் அவப்பெயர்!
.........................
தி.மு.க.வின் கொடி பறக்கிறதா?
அய்ந்தாம் முறையாக தி.மு.க. கட்சி ஆட்சியில் அமர்ந்து நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றன. ஒரு தனிநபர் கட்சியின் மூலம் முதல்வராக அய்ந்து முறை ஆட்சியில் அமர்ந்து கோலோச்சுவது நினைப்பதற்கரிய காரியம். அதையும் சாதித்திருப்பது தி.மு.க.வின் தலைவர் கலைஞரையே சாரும். கடந்த நான்கு ஆண்டுகளையும் விட இந்த முறை ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி அதன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது கட்சி. அதை நிரூபிக்கும் வகையில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் தொடர் வெற்றிகள் அறிவிக்கின்றன. தி.மு.க. அரசு வழங்கும் பல சலுகைகள் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகவே உள்ளன. அச் சலுகைகளையும் கட்சிக்கு குற்றச்சாட்டுகளாகத் தொடரும் நெருக்கடி களையும் பற்றிய ஒரு கண்ணோட்டம். சலுகைகளாக...
- விவசாயிகளுக்கான கூட்டுறவு சங்கக் கடன் ரூபாய் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் வழங்கி அவர்களின் பஞ்சத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
- சத்துணவுடன் வாரத்திற்கு மூன்று முட்டை வழங்கியது.
- நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என வழங்கி எளியோருக்கு வரப்பிரசாதமாய் விளங்கியது.
- பெரியாரின் கொள்கைகளான சாதி ஒழிப்பு, சமூக நீதிகளை அடைவதற்கு ஏந்திய ஆயுதமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்தியது. அதோடு உயர்சாதி ஆதிக்கத்தைக் கருவறுத்து, தமிழை அர்ச்சனை மொழியாக்கியதோடு சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கியது.
- • பெண்கள் நலனில் அக்கறை கொண்டு ஏற்கெனவே சொத்துரிமை வழங்கியது தி.மு.க.அரசுதான். இப்பொழுதும் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண் களுக்கு உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி ஊக்கப்படுத்துதல் என பெண்களுக்கு சலுகைகள் நீள்கின்றன.
- ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் திட்டமாகிய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியது.
- தம் காலத்திற்குப் பிறகு தான் வாழ்ந்த வீடு எதிர்கால சந்ததிக்கும் உதவும் வகையில் மருத்துவமனையாகச் செயல்பட ஆவன செய்தது.
- இலவசக் கலர் டி.வி.யை வீட்டுக்கு வீடு வழங்கியதோடு இலவச கேஸ் இணைப்பு அடுப்புடன் வழங்கி வருவது.
- ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நிரந்தரப்படுத்தியது.
- இருபத்தியோரு லட்சம் குடிசைகளை நிரந்தரக் குடியிருப்புகளாக மாற்றும் திட்டம்.
- திருநங்கைகள் நலவாரியம் உள்ளிட்ட அதிகப்படியான நலவாரியங் களைத் தோற்று வித்தது. அதேபோல் அருந்ததியருக்கு, கிறித்துவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.
- மாற்றுத்திறனாளிகளுக்குத் தனித்துறையை ஏற்படுத்தியது.
- போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க முக்கியப் பெருநகரங்களில் மேம்பாலங்கள் அமைத்தது.
- குடிநீர் தட்டுப் பாட்டைப் போக்க பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக் கியது.
- நீண்டகாலமாக சவாலாக இருந்த பாப் பாப்பட்டி, கீரிப்பட்டித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது.
- பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஒரு புறமிருந்தாலும் தி.மு.க. அரசைக் கண்டித்து குற்றச் சாட்டுகளாக, மக்களை யோசிக்க விடாமல் இலவச சலுகைகளை வழங்கி வாக்கு வங்கியைத் தக்கவைக்க உபயோகிக்கும் தந்திரங்கள், கண்கட்டு வித்தைகள்தாம் அவை என்னும் குற்றச்சாட்டுகளையும் தாங்கியே தி.மு.க. அரசு செயல்படுகிறது. அவ்விதக் குற்றச்சாட்டுகள் பலரிடையேயும் எழும் பாமலில்லை.
- அந்த விதத்தில் அரசுக்குத் தொடரும் நெருக்கடிகள்...
- இலங்கைப் பிரச்சினையில் தலையிடாமல் தமிழுணர்வுடைய பலரிடையேயும் காழ்ப் புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மின்சாரத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கச் செய்து அனைத்து தரப்பு மக்களிடமும் அரசைப் பற்றிய எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது.
- காவல்துறையை அரசியல்வாதிகளின் பந்தோபஸ்துக்காக பயன்படுத்துவதனால் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாமல் வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பது.
- விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமான பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசில் அங்கம் வகித்தும்கூட பெயரளவில் எதிர்ப்பது மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணமுடியாமல் திக்கித் திணறுகிறது அரசு.
- தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பது.
- தமிழக மக்களை டாஸ்மாக் மூலம் நிரந்தர குடிகாரர்களாக மாற்றி அரசுக்கு அதிகப்படியான வருமானத்தை ஈட்டுவதன் மூலம் குடும்பப் பெண்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானது.
- மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு திடீர்ப்பதவி, உயர்பதவிகள் வழங்குவதன் மூலம் நீண்ட காலமாக கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களிடையே உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தி.மு.க. அரசுக்குப் பல்வேறு தரப்பு மக்களிடையேயும் இருந்து மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சமாளித்து ஆட்சியை நடத்துவது தி.மு.க. அரசுக்கு கைவரப் பெற்ற உபாயமாக கலைஞரின் நீண்டகால அரசியல் பக்குவம் கைகொடுக்கிறது. எனினும் கட்சிக்குள்ளேயே தம் பிள்ளைகள் மூலம் பிளவு ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்ளப் போகிறது தி.மு.க. என்பது கேள்விக் குறியே.
.....................
நேர்காணல்
பேராசிரியர் கல்யாணி
பேராசிரியர் கல்யாணி என்னும் பெயர் ஆசிரியர் பணிக்கே அடையாளமாய் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு மாணவர்களும், சமூகமும் சிறப்படைய வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தையே வாழ்க்கை நெறியாக கொண்டவர் பேரா. கல்யாணி. அரசு, காவல்துறை, உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் என எவற்றையும் விட்டுவிடாமல் சமூக நலன் கருதி எதிர்த்துப் போராடியவர். அவர் ஆசிரியர் பணியை விட்டு விலகி 15 ஆண்டுகளாகியும், மனித உரிமைக்காக்கவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இன்றைக்கும் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இவரின் முன் முயற்சியில், தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக திண்டிவனத்தைச் சேர்ந்த உரோசனை என்னும் இடத்தில் ‘தாய் தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி’ என்கிற பள்ளியை நிருவகித்து வருகிறார். புற்றீசலாய் வளர்ந்து வரும் ஆங்கிலப் பள்ளிகளின் காரணமாக நம் தமிழ்நாட்டு மழலைச் செல்வங்கள் தாய்மொழியான தமிழைக் கற்காமல் வேற்று மொழியை கற்றுக்கொள்வதைக் கண்டு மனம் பொறுக்காமல் கடந்த 2000ஆம் ஆண்டு 25 மாணவர்களுடன் இந்தப் தமிழ்வழிப் பள்ளியைத் தொடங்கினார் பேரா. கல்யாணி. இன்றைக்கு 125 மாணவர்கள் என்று வளர்ச்சி யடைந்து, திண்டிவனத்தில் மக்களால் குறிப்பிடத்தக்க அளவில் அங்கீ காரத்தைப் பெற்றிருக்கிறது.
திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து கொள்ளாமல் தனது வாழ்நாளை சமூக நலனுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பேரா.கல்யாணி. அவர்களுடன் தமிழ்நாட்டின் இன்றைய கல்விச் சூழல் பற்றிய ஒரு சிறப்பு நேர்முகம்.
தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிகள் இவ்வளவு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்ன?
ஆங்கில மோகம் என்பது பண்பாட்டு ரீதியா ஒரு சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலம் பேசுகிறவர்தான் அறிவாளி என்பதான முட்டாள்தனமான சிந்தனை உருவாகி இருக்கிறது. இந்த ஆங்கில மோகம் என்பது இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. என்ன காரணம் என்றால், இந்திக்கு எதிரான போராட்டம் இங்குதான் தொடங்கியது. அப்பொழுது இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தைத்தான் முன் வைத்தார்கள். தமிழை அல்ல. தற்பொழுது கூட பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் இந்தியில் பேசுகிறார் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுக்கவில்லை என்று தான் தமிழ்நாட்டு உறுப் பினர்கள் கேட்கிறார்கள். தமிழில் மொழிபெயர்ப்பு கொடுக்கவில்லை என்றோ தமிழில் பேச வேண்டும் என்றோ கேட்கவில்லை. ஆக, தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கில ஆதரவாக போய்விட்டது.
தமிழ்நாட்டில் எவனால பணம் கட்ட முடிகிறதோ அவனெல்லாம் இங்கிலீஷ் மீடியத்துல கொண்டு போய்தான் பிள்ளையைச் சேர்த்து விடுகிறான். இதற்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது. மக்களிடம் உருவாகியுள்ள ஆங்கில மோகம்தான் காரணம். அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. ஆசிரியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், சம்பளம் வாங்குவதற்கு மட்டும் அரசு பள்ளி, உன் பிள்ளை படிப்பதற்கு மெட்ரிக்குலேசன் பள்ளி என்றால் என்ன கணக்கு. இங்குள்ள ஆசிரியர்கள் மாதிரி மடத்தனமான புத்தியும் மட்டமான சிந்தனையும் வேற எங்கேயும் கிடையாது.
ஒரு குழந்தை தொடக்கக் கல்வியை எப்படி ஆங்கிலத்தில் புரிஞ்சுகிட்டு படிக்கும். அறிவியல் ரீதியா எந்த வகையில் சரியானது? உலகத்தில் தாய் மொழியைத் தவிர்த்து இன்னொரு மொழியில் படிப்பதை எங்காவது பார்த்ததுண்டா? எந்த கல்வியாளராவது சொல்லியிருக்காங்களா?
ஆங்கில அறிவு என்பது வேறு, பாட அறிவு என்பது வேறு. சிறந்த பொறியாளரா இருப்பதற்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ரஷியாவில் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசத் தெரியாததைத் தாழ்வு மனப்பான்மையா பார்க்கப்படுது. ஒரு மாணவனை மனிதனாக மாற்றுவதற்கு தமிழ் இலக்கியம் போதும்.
கல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார்?
மைய அரசில் இருந்து பார்த்தீர்கள் என்றால் கல்விக் கொள்கைகளை கட்சிகள் தீர்மானிப்பதில்லை. காங்கிரஸ் பேரியக்கமோ, பாரதிய ஜனதா கட்சியோ தங்களது பொதுக்குழுவில் இதுபற்றி விவாதிப்பதில்லை. தமிழ்நாட்டில் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும், பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமோ, அண்ணா திமுகவோ தங்களது பொதுக்குழுவில் விவாதிப்பதில்லை. நம்ம மக்களுக்கு கல்வி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது திட்டமாவது வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை.
ஆனால், எல்லா கட்சியை சேர்ந்தவர் களும், கல்லூரிகள் நடத்துகிறார்கள். இவர்கள் கல்விக் கொள்கையை வகுப்பதில்லை. மாறாக அந்த கொள்கையை பயன்படுத்தி எப்படி கொள்ளையடிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்விக் கொள்கை என்பது அதிகார வர்க்கத்தினரால் தீர்மானிக்கப்படுகிறது. இங்கே சுயேட்சையான அதிகார வர்க்கம் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. அவர்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது. பிஜேபி ஆட்சிக் காலத்தில் கல்வியைக் காவிமயமாக்கினார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கொஞ்சமா காவிமயமாகி இருக்குது அதுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாமே ஒன்றுதான்.
செயல் வழிக் கற்றல் என்கிற பாடத்திட்டம் எந்தளவுக்கு மாணவர்களுக்கு பயன் தரும்?
இது வரவேற்க்கக் கூடிய அம்சம். இதை வரவேற்று மாநாடெல்லாம் போட்டிருக்கிறோம். ஆசிரியர் சங்கங்கள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால், கல்வி யில் அக்கறை உள்ளவர்கள், புதிய ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள். இவர்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள். இதுவரை கற்பித்தல் முறையில் மாற்றமே கொண்டு வரவில்லை. இந்த செயல்வழிக் கற்றல் என்பதில் குழந்தைகளே கற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான். பிள்ளைகளும் ஈடுபாடா கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர் மய்யக் கல்வி குழந்தைகள் மய்யக் கல்வியாக மாறி இருக்கிறது.
ஆசிரியர்களில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் கல்வியில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் பாடம் நடத்தாமல் ஓபி அடிப்பார்கள். அதிகாரிகள் மிரட்டினால் பாடம் நடத்துவார்கள். இன்னொரு பிரிவினர் எதையும் ஈடுபாடோடு பாடம் நடத்துவார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால் செயல்வழிக் கற்றல் என்கிற முறையை ஆதரிப்பதோடு ஒரு கோரிக்கையை முன் வைப்பதுதான். அது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற முறையை கொண்டு வர வேண்டும் என்பதுதான். அப்பொழுதுதான் இந்த கல்வி முறை சிறப்பாக இருக்கும்.
பொதுக்கல்வி முறையால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது?
கல்வி என்பது சென்ட்ரலைஸ்டு ஆகும்போது கல்வித்தரம் மோசமாகுது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியோ, பாலிடெக்னிக் கல்லூரியோ தொடங்கு வதற்கு தமிழ்நாட்டில் அனுமதி வாங்கத் தேவையில்லை. டில்லியில் உள்ள கிமிசிஜிணி (கிறீறீ மிஸீபீவீணீ சிஷீuஸீநீவீறீ திஷீக்ஷீ ஜிமீநீலீஸீவீநீணீறீ ணிபீuநீணீtவீஷீஸீ) யில் அனுமதி வாங்கினால் போதுமானது. ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் அந்தக் கல்வி நிறுவனங்கள் சரியாகச் செயல் படவில்லை, மோசடி யில் ஈடுபடுகிறது என்று புகார் வந்தால் உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இன்றைக்குப் பல ஆசிரியர்களும் தனிப் பயிற்சி எடுக்கிறார்களே?
டியூசன் என்பதே கல்வி ரீதியாகவே சமூகக் கெடுதி. எப்படி என்றால் ஒரு மாணவன் என்பவன் இயல்பாகவே கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். காலப்போக்கில் மாணவனாகவே கற்றுக்கொள்ள வேண்டும். மாணவன் தானாகவே கற்றுக் கொள்ள முயற்சிப்பதற்கு முன்னாலேயே டியூசன் என்கிற முறையில் ரெடிமேடா சொல்வதனால் சொந்தமா சிந்திக்கின்ற திறன் குறைகிறது. தனிப் பயிற்சி என்பது சமூகக் கேடு என்பதை வலியுறுத்தி மாநாடெல்லாம் நடத்தி யிருக்கிறோம்.
லெக்சர் பண்ணி மாணவர்களை ஈர்ப்பதற்கு முதலில் ஆசிரியருக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். அதற்கு முதலில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த பணிக்கு வரவேண்டும். கல்வியைப் பொறுத்தவரை வியாபாரமயமாகிவிட்டது. ‘வீக்லி டெஸ்ட்’ என்று வைக்கிறார்கள், அது கூடாது. ‘சென் பர்சென்ட்’ ரிசல்ட் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் உலகம் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை.
இந்த மாதிரி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தனித்திறமை இல்லா மலேயே வளர்க்கப்படு கிறார்கள். இதனால் வாழ்க்கையில் போட்டி போட முடியாமல், மனத்திடம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நல்ல மாணவர்களை உருவாக்குவது என்றால், நல்ல மனிதர்களை உருவாக்குவது, நல்ல சிந்தனையாளர்களை உருவாக்குவது. அப்படித்தான் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது பணிப் பாதுகாப்பு, சம்பளம் ஆகியவற்றில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. எந்த ஆசிரியரும் டியூசன் எடுப்பது தவறு என்றோ, தமிழ்வழிக் கல்விதான் வேண்டும் என்றோ போராடியதே இல்லையே. எந்த ஆசிரியர் சங்கமும் தனிப்பயிற்சிக்கு எதிராக செயல்பட்டதே கிடையாது. அரசு பள்ளியில் கல்லூரியில் 50 ஆயிரம், 60 ஆயிரம் என்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு வகுப்பில் நடத்தாமல் வீட்டில் தனிப்பயிற்சி நடத்தினால் திட்டாமல் என்ன செய்வது?
சமச்சீர் கல்வி என்பதை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. அது எந்த வகையில் சிறப்பாக இருக்கும்?
சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் சமமான கல்வியாகவும், தரமான கல்வியாகவும் இருக்க வேண்டும் என்று கொண்டு வருகிறார்கள். இது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. ‘முத்துக்குமரன் கமிட்டி’ பரிந்துரைத்த பாடத்திட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் பள்ளிக் கல்வி தமிழ்வழியில்தான் இருக்க வேண்டும் என்பதை மட்டும் விட்டுவிட்டார்கள். இதற்குக் காரணம் கலைஞர் சரியில்லை என்று சொல்ல முடியாது. மக்களோட கருத்தாக்கம் என்னவென்றால் எல்லா பாடத்திட்டத்தையும் தமிழில் கொண்டு வந்தா சிஙிஷிணி கூட போவதற்கு தயாராக இருக்கிறார்கள். நமது பெற்றோர்கள் ஆங்கிலத்தில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.
அப்படி மாறிப் போவதற்கானக் காரணம் என்ன?
தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக எந்த இயக்கங்களோ கட்சிகளோ பெரிய அணி திரட்டவில்லை. இதனால் நாளைக்கு எந்த அரசாங்கம் வந்தாலும் கொண்டு வர முடியாது. தமிழ்நாட்டில் 85 விழுக்காட்டு மக்கள் தமிழில்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன்னா இவர்களால் ஆங்கிலக் கல்விக்கு பணம் கட்ட முடியவில்லை. பணம் இருந்தால் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். இயல்பாகவே ஆங்கில வழிக் கல்விக்கான மோகம் அதிகமாக இருக்கிறது. ஆக, தமிழ்வழிக் கல்விக்கான பிரச்சாரம் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா இயக்கங்களுக்கும் இருக்கிறது.
நேர்முகம்: சகா. சசிக்குமார்
..........................
2011ல் அ.தி.மு.க. வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்
திருமங்கலம் தொகுதி உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் அ.தி.மு.க. கடந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியை மீறி டெபாசிட்டையே இழந்துள்ளது அக்கட்சியினரிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் கட்சியின் நிலைப்பாடு பற்றிய கேள்வியையே எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் இரு பிரதானக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. வளர்ச்சி எதை நோக்கிப் போகிறது என்ற எண்ணம் தோன்றாமலில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியின் வளர்ச்சி பின்னோக்கிய சரிவை நோக்கிப் போவது என்பது அரசியலுக்கு நல்லதல்ல.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்று எம்ஜி.ஆரின் மனைவி ஷானகிக்கும் ஷெயலலிதாவுக்கும் போட்டி நடந்த நேரத்தை சாதகமாகப் பயன்படுத்தி தி.மு.க. பத்தாண்டுகளுக்குப் பிறகு 1989இல் ஆட்சியைப் பிடித்தது. 1990இல் தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1991இல் ஷெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ராஜீவ்காந்தி படுகொலை அனுதாபத்தில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது. கட்சியின் வளர்ச்சி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு சற்றே கூடியது என்றே கூறலாம். காரணம் 1991க்குப் பிறகு இரண்டு முறை ஆட்சியை எட்டியுள்ளது. அதற்கும் பின்னான காலங்களிலும் கூட சட்டசபையில் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. ஆனாலும் 2004க்குப் பிறகான கட்சியின் நடவடிக்கைகள் எதிர்கால நிலையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கட்சியினரும் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களும் அ.தி.மு.க.வின் வெற்றிக்குக் கீழ்க்காணும் பல்வேறு ஆலோசனைகளைக் கூறினார்கள். இதைப் பின்பற்றிச் செயல்பட்டால் வரப்போகும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே வெற்றி உறுதியாகும் என்பது சாத்தியமே.
தன்னம்பிக்கை மிக்கவரான ஜெயலலிதா, வெற்றியை நோக்கிய பயணங்களான போராட்டங்களை மட்டுமே ஆயுதமாகக் கொள்ள வேண்டும். பேச்சை மட்டுமே அல்ல. பெண்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் பிரதானமாகக் கொண்டால் அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
கட்சி சீட் அரசியலைத் தவிர்த்து ஏழை, எளிய மக்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரச்சினைகளைக் களைய ஈடுபாடு கொண்டால்தான் எளிய முறையில் தொடர்பு கொள்ளக்கூடிய மக்கள் சக்தியைப் பெற முடியும்.
அ.தி.மு.க கட்சியினர் ஆங்காங்கே கூட்டாக அணி மாறுவதை தடுக்க தமிழ்நாட்டினை மண்டலமாக பிரித்து கட்சிக்காக அலுவலக கட்டிடத்தை கட்ட வேண்டும். கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று குறைகேட்டு உரையாற்றுவதை வழக்கமாக்க வேண்டும்.
அடிமட்ட தொண்டர்களை உற்சாகப்படுத்த கழகம், தொண்டர்கள், அவர்களது குடும்பங்கள் பங்கேற்கும் அளவிற்கு கலை மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நடத்தி பரிசு, ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு உதவித்தொகையையும் வழங்க வேண்டும். (மாவட்ட, வட்டம் தோறும்). இதனால் தேர்தலின் போது தேர்தல் பணியை ஆத்மார்த்தமாக மேற்கொள்வார்கள்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க வேண்டும். இது எம்.ஜி.ஆர் மூலம் பெரும் பலன் கிடைக்கும். மாட்டுக்கார வேலன், நாடோடி மன்னன், இதயக் கனி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற மெகா ஹிட் படங்களை தேர்தலுக்கு முன்பு மீண்டும் மீண்டும் திரையிட வேண்டும். குறிப்பாக தமிழகக் கிராமங்களில் பெரும்பான்மையாக நிகழும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தி.மு.க-வின் குடும்ப சர்ச்சைகளையும் அரசின் குறைபாடுகளையும் கையிலெடுத்து விளக்க கூட்டங்களை ஆங்காங்கே நிகழ்த்த வேண்டும்.
அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களின் வட்டத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளை, பூசல்களை நீக்க அவர்களில் சிலருக்கு இரண்டாம் கட்ட கட்சிப் பொறுப்புகளை வழங்கலாம்.
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இலங்கை விவகாரத்தில் தி.மு.க.வின் மீது மறைமுக கோபத்தில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, தே.மு.தி.க ஏனைய சிறுகட்சிகளை வளைப்பதனால் வெற்றி எளிதில் சாத்தியம். இதற்கு தனது கடினமான அணுகுமுறையை மாற்ற வேண்டும்.
தனது மீடியாவான ஜெயா டி.வியை மற்ற வெற்றிகரமான மீடியாக்களுக்கு இணையாக மிகத்தரமான நிகழ்ச்சிகளை வழங்குவது அ.தி.மு.க.விற்கு பக்க பலமாக இருக்கும். அது தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைப்பதற்கும் தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கும் உதவும்.
ஆரோக்கியமான ஆலோசகர்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும். தேர்தல் சமயங்களில் தி.மு.க.வின் அதிரடி நடவடிக்கைகளை கண்டுணரவும் அதன் எதிர் நடவடிக் கைகளை எதிர்கொள்ள தனி யாக ஒரு துறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய பலமான பத்திரிக்கை துறை யுடனும், நிருபர்களுடனான கட்சி தொடர்பு களையும் அணுசரிக்க வேண்டும்.
கோயில் கும்பாபிஷேகம் மற்றும் முக்கிய பொது நிகழ்ச்சிகளை தலைமை ஏற்றோ அல்லது பொறுப்பு ஏற்றோ நடத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். இரண்டாம் கட்டமாக சினிமாத்துறையில் தி.மு.க. வாரிசு களின் வளர்ச்சி அ.தி.மு.க-பலவீனத்தை கூட்டும். அதனால் தயாரிப்பு மற்றும் முக்கிய பணிகளில் தனது தரப்பு பல ஆட்களை மறைமுகமாக இருக்க வேண்டும்.
ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும்போது வழிநெடுகிலும் உள்ள கிராம மக்களைச் சந்திக்க வேண்டும். கட்யினரைத் தோல்வி தொய்வடையச் செய்யாமல் உற்சாகப்படுத்த வேண்டும்.
தேர்தல் சமய தி.மு.க.வின் அணுகு முறையையும் இனாம்களையும் பணம் கொடுப்பதையும் ஆதாரத்துடன் தகவல் களை திரட்டி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நெருக்கடி கொடுத்து முக்கிய இடங்களில் வீடியோ பதிவுகளுடன் தேர்தல் நடத்த வற்புறுத்த வேண்டும்.
தனக்கு பக்க பலமாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தி லுள்ள எண்ணற்ற அமைப்புகளை பிரிவு களை தன் பக்கம் இழுப்பது. தலித் அமைப்பு பிரிவு களை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க ஏதுவாக இருக்கும்.
அரசியல் வாரிசை அல்லது 2ம் கட்ட தலைமையை அறிவிக்க வேண்டும். சும்மா ஒரு பரபரப்புக்காக...
கிராமங்களிலும், மைய நகரங்களிலும் அ.தி.மு.க ஒட்டுகள் அதிகம் உள்ளன. மற்ற இடங்களில் உள்ள வாக்காளர்களை கவர பயனடைய பல சலுகைகளை வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்/அறிவிக்க வேண்டும்.
பெண்கள் அதிகமான தேர்தலில் நிறுத் தினால் வெற்றி வாய்ப்பு குறையும்.
கணக்கில்லாமல் பணத்தை வாரி இறைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கேற்ப பணம்+மக்கள் ஆதரவுள்ளவர்களைவே வேட்பாளர் களாக நிறுத்த வேண்டும். வழக்கம் போல் இல்லாமல் மிக அதிகப்படியான அளவிற்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
தேர்தலுக்கான திட்டமிடலை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். அதைச் செம்மையாக வழிநடத்தும் தலைவர்களைப் பொறுப் பாளர்களாக நியமிக்க வேண்டும்.
.......................
தொடர்
மாவேயிஸ்ட் பாதையில் ஒரு பயணம்
அருந்ததிராய்
சொற்செறிவுடைய, தட்டச்சு செய்யப்பட்ட காகிதத்துடனான கவர் ஒன்று என் வீட்டு கதவின் கீழ் நழுவி என்னை வந்தடைந்தது. அதுவே இந்தியாவின் மாபெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் உடனான என் சந்திப்பை உறுதிபடுத்தியது. நான் இதற்காகவே பல மாதங்களாக காத்திருந்தேன். அவர்கள் குறுப்பிட்டிருந்த ஏதேனும் இரு நாட்களில், நான்கு வேளைகளில் நான் சட்டிஸ்கர் மாநில தான்தேவாபாவில் உள்ள தான்தேஸ்வரியம்மா ஆலயத்தில் இருக்க வேண்டும். இது மோசமான வானிலை, பஞ்சர், சாலை மறியல், போக்குவரத்து வேலை நிறுத்தம் மற்றும் அதிர்ஷ்டமின்மை ஆகிய வற்றின் அடிப்படையில்தான் தேதி, நேரம் இவ்வாறு விரிவாக வழங்கப்பட்டிருந்தது. அந்த காகிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “எழுத்தாளரிடம் புகைப்பட கருவி, நெற்றியில் பொட்டு மற்றும் தேங்காய் ஒன்று இருக்க வேண்டும். சந்திப்பவர் தலையில் தொப்பி அணிந்திருப்பார். கையில் அவுடலுக் ஹிந்தி இதழும் சில வாழைப் பழங்களும் வைத்திருப்பார். கடவுச்சொல் : நமஸ்கார் குருஜி.”
நமஸ்கார் குருஜி. எனக்கு வியப்பாக இருந்தது என்னை சந்திக்க இருப்பவர் ஒரு ஆடவனை எதிர்பார்த்து காத்திருப்பாரோ, அப்ப நான் ஒரு மீசையை தருவிக்க வேண்டும்.
தானதேவாபாவை பல ரூபங்களில் வர்ணிக்கலாம். அது முரண்களின் நிலம். இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு மாநில எல்லை அமைந்துள்ள நகரம் அது. ஒரு போரின் மையப்பகுதி. அது ஒரு தலை கீழ், உள்ளே வெளியே நகரம்.
தான்தேவாபாவில் காவல்துறையினர் சாதாரண உடை அணிந்திருப்க்ஷிர்கள், போராளிகள் சீறுடை அணிந்திருப்பார்கள். சிறைச்சாலை கண்காணிப்பாளர் சிறையில் இருப்பார். கைதிகள் அனைவரும் சுதந்திரமாக இருப்பர் (இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழைய நகர சிறையிலிருந்து முன்னூறு பேர் தப்பி ஓடிவிட்டனர்.) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் காவல் நிலையத்தில் உள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அனைவரும் கடைவீதியில் உரைநிகழ்த்துகிறார்கள்.
இந்திராவதி நதியின் அக்கரையில் உள்ள நிலப்பகுதி அனைத்தும் மாவோயிஸ்டு களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை காவல்துறையினர் பாகிஸ்தான் என்று அழைக்கிறார்கள். அங்குள்ள கிராமங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால்காடுகள் மக்களால் நிரம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டிய குழந்தைகள் எல்லாம் காடுகளில் துள்ளி ஓடுகிறார்கள். அங்கிருந்த கிராம பள்ளிகள் எல்லாம் ஒன்று தகர்க்கப்பட்டு விட்டன. ஒரு குவியலாய் கிடக்கிறது அல்லது காவல்துறையினரால் நிரம்பி உள்ளது. இந்த காடுகளில் பெருக்கெடுக்கும் ஒரு யுத்தத்தால் இந்திய அரசு பெருமை கொள்ளவும் செய்கிறது. வெட்கி தலை மறைத்தும் கொள்கிறது. பச்சை வேட்டை நடவடிக்கை என இதனை அழைக்கும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இப்படி ஒரு யுத்தம் நடைபெறவில்லை என மறுக்கவும் செய்கிறார் (போரின் தலைமை அதிகாரி) மேலும் இது ஊடகங்கள் உருவாக்கும் ஒரு பிம்பம் மட்டுமே என்கிறார். மறுக்கும் போதும் இதற்கு ஏராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான துருப்புகளும் இந்த நடவடிக்கைக்கு என அணிதிரட்டப்படுகிறது. இந்த போர் நாடகம் இந்தியாவின் மத்திய பகுதி வனங்களில் நடைபெறுகிற போதிலும், இது நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
பேய்கள் சிலருக்க மேலே வட்டமிடும் ஆவியாகவும் அல்லது சிலருக்கு இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். அப்படியயனில் அந்த பேயின் நேர் எதிரானது தான்இன்னு வனங்களை கிழித்துச் செல்லும் நான்கு வழிச் சாலைகள். அது நமக்கு வரப்போவதை முன் அறிவிக்கும் கட்டியக்காரனே.
காடுகளில் எதிர்ப்புணர்வுடன் அணி திரட்டுபவர்கள் சகல வழிகளிலும் முற்றிலும் வேறான சமனற்றவர்களாகவே இருக்கிறார்கள். பணம், ஆயுதங்கள், ஊடகங்களின் பலத்துடனும் ஒரு வளரும் வல்லரசின் இறுமாப்புடன் பெரும் ராணுவப் படை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் மரபான ஆயுதங்களுடன் சாமானிய கிராமமக்கள். மாவோயிஸ்டுகளின் பின்னணியில் அருமையாக அணிதிரட்டப்பட்ட கொரில்லா போர் படை, அது ஆயுத எதிர்ப்பின் நெடிய வன்முறையான வரலாறுடையது. மாவோயிஸ்டுகளும் இந்த துணை ராணுவப்படைகளும் ஒன்றுக்கு ஒன்று எதிராக ஏற்கனவே பல முறை சந்தித்துக் கொண்டவர்களே. 50களில் தெலுங்கானாவில், 60ண்70களில் மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில், அதன்பின் 80களில் ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரம் தொடங்கி இன்று வரை அது தொடர்ந்து வந்துள்ளது. இருசாராரும் தங்களின் யுத்திகஃ, தந்திரங்களை நன்கு அறிந்த வைத்துள்ளன. பல சமயங்களில் மாவோயிஸ்டுகள் கவிழ்த்தப்பட்டு விட்டது போலவும், அவர்கள் முற்றாக அப்புறப்படுத்தப்பட்டதாகவே தோன்றியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் மறைவிலிருந்து மீண்டும் வெளிப்பட்டவர்களாக, அதிகப்படையான ஒருங்கிணைப்புடன், கூடுதல் திண்டத்துடன் முன்பைவிட அதிகப்படியான செல்வாக்கு செலுத்துபவர்களாகவே அணிதிரண்டுள்ளன. இன்று கனிம வளங்கள் மிகுதியான சத்தீஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய நிலப்பரப்புகளில் மீண்டும் ஆட்சி எதிர்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த நிலப்பரப்பு தான் கோடிக்கணக்கான இந்திய பழங்குடியினரின் பூர்வீக நத்தமாகவும், பன்னாட்டு உலகின் சொர்க்க பூமியாகவும் திகழ்கிறது.
காடுகளில் நடக்கும் போர் இந்திய அரசும், மாவோயிஸ்டுகள் ஆகிய இரு சாரார் மத்தியில் நடக்கிறது என்று தாராளவாத மனோபாவத்துடன் புரிந்து கொள்வது சுலபமானது. மாவோயிஸ்டுகள் தேர்தலை மோசடி என்றும், பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்றும், இநதிய அரசை அப்புறப்படுத்துவது தங்கள் லட்சியமென்றும் வெளிப்படையாகவே அறிவித்தவர்கள். மத்திய இந்தியாவின் காடுகளில் வசிக்கும் பழங்குடியினரின் எதிர்ப்புணர்வின் வரலாறு நீண்ட நெடியது. அது மாவோயிஸ்டுவுக்கும் பிந்தயது என்பதை மறதிக்கு உட்படுத்துவது சௌகரியமானது. ஹோ, ஓரான், கோள், சந்தல், முண்டாக்கள், கோண்டுகள் என இந்த பழங்குடிகள் பல முறை வெள்ளையர்கள், ஜமீன்தார்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை செய்துள்ளனர். இந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டன. ஆனால் அவர்கள் முற்றாக கைப்பற்றப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்றபின் உருவான மாபெரும் கிளர்ச்சியில் பழங்குடியினர்தான் முன்னணியில் இருந்தனர். அதனை மாவோயிஸ்டு என கூட அழைக்கலாம். மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் தான் அது நிகழ்ந்தது. (அதிலிருந்து தான் நக்சலைட் என்கிற வார்த்தை புழக்கத்திற்கு வந்தது ண் இப்பொழுது மாவோயிஸ்டு என்றும் அது மாறியுள்ளது? அது முதல் பழங்குடியினரின் எழுச்சிகளும் நக்சல்பாரி அரசியலும் பிரிக்க இயலாது இணையாக மாறிப் போனது.
இந்திய அரசால் தொடர்ந்து திட்ட மிட்டு தனிமைபடுத்தப்பட்டு, விளிம்புக்கு தள்ளப்பட்ட ஒரு பெரும் கூட்டம் தான்இன்று கிளர்ச்சியின் மரபை தனதாக்கி அணிதிரண்டு நிற்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடிநாதமான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அந்த நாள் பழங்குடி மக்களுக்கு அவலமான நாள். காலனிய கொள்கையை அப்படியே பின்பற்றி அது இந்திய அரசை பழங்குடியினரின் பூர்வீக நிலங்களுக்கு பாதுகாவலாக அறிவித்துக் கொண்டது. ஒரே இரவில் பழங்குடியினரை தங்கள்சொந்த நிலங்களில் உரிமையற்றவர்களாக அறிவித்து நிற்கதியில் ஆழ்த்தியது. காடுகளின் வளங்களுடனான மரபான உரிமையை ரத்து செய்து, இயல்பான வாழ்வியல் செயல்களை கூட அது கிரிமினலாக மாற்றியது. வாக்குச் சீட்டை கையில் கொடுத்து அதற்கு மாற்றாக அது வாழ்வுரிமையை, தன்மானத்தை பறித்துக் கொண்டது.
அவர்களின் வாழ்வுரிமையை பறித்து, கொடிய வகையில் நிலத்துரிமையை நிர்மூலமாக்கி அரசு அவர்களின் வறுமையை அவர்களுக்கு எதிராகவே பாவிக்க தொடங்கியது. ஒவ்வொரு முறையும் பெரும் மக்கள் கூட்டத்தை இடம் பெயரச் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ண் அதாவது பெரிய அணை, கனிம சுரங்கம், பெரும் பாசனத் திட்டம் ண் அரசு உடன் பழங்குடியினரை மைய நீரோட்டத்திற்கு அழைத்து வருவது அல்லத நவீன வளர்ச்சியின் பலன்களை அவர்களுக்கு வழங்குவது என்கிற சொற்றொடர்களை பேசத் தொடங்கும். (அதுவும் 3 கோடி பேர் பெரிய அணை திட்டங்களால் மட்டும்) உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள கோடிக்கணக் கானவர்களில் பெரும் பகுதியானவர்கள் பழங்குடியினர். அரசாங்கம் பழங்குடியினரின் நலன் குறித்து பேசத் தொடங்கினால் அது கவலை கொள்ள வேண்டிய நேரமே.
கடைசியாக அப்படிக்ஷின ஒரு விவரனையை வழங்கியவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ண் அவர் பழங்குடியின் அருங்காட்சியாக கலாச்சாரத்தில் வாழ்வதை விரும்பவில்லையாம். ஆனால் இனறு அவர் ஆவலுடன் பேசும் பழங்குடியினரின் நலன் அவர் ஏற்கனவே பல பெரும் கனிம நிறுவனங் களின் கார்போரேட் வழக்கறிஞராக பணி புரிந்தபோது இருந்ததாக தெரியவில்லை. அதனால் அவரது இந்த புதிய ஆர்வத்தின அடிப்படையை பரிசோதிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களை பல பன்னாட்டு நிறுவனங் களுடன் கையயழுத்திட்டுள்ளது. அவை இரும்பாலைகள், மின் திட்டங்கள், அலுமினிய சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள், சுரங்கங்கள் என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. அந்த ஒப்பந்தங்கள் உண்மையாகவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உருமாற பழங்குடியினர் அங்கிருந்து நகர்த்தப்பட வேண்டும்.
அதனால் தான் இந்த போர் :
ஜனநாயக நாடு என பிரகடனம் செய்து கொண்ட ஒரு தேசம் தன் எல்லைகளுள் ஒரு போரை அறிவித்துக் கொள்கிறபோது, அந்த போர் எப்படி காட்சியளிக்கும்? எதிர்ப்பு அங்கு தாக்கு பிடிக்குமா? தாக்கு பிடிக்க வேண்டுமா? மாவோயிஸ்டுகள் யார்? அவர்கள் பழங்குடியினர் மீது காலாவதியான ஒரு தத்துவத்தை சுமத்தும் சூனியவாதிகளா? வெற்று வாக்குறுதிகளை பழங்குடியினர் மீது சுமத்துபவர்களா? கடந்த கால அனுபவங்களிலிருந்து ஏதேனும் பாடங்களை அவர்கள் கற்றுள்ளார்களா? ஆயுதப் போராட்டம் ஜனநாயகத்துக்கு புறம்பானதா? இல்லை பழங்குடியினர் இந்திய அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடுவே நடக்கும் போரில் மாட்டிக் கொண்டவர்கள் என்கிற வாதம் துல்லியமானதா? மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியினர் வேறு ருறு வகையான தன்மைகள், தேவைகள் உடையவர்களா? அவர்களின் நலன்கள் சங்கமிக்கிறதா? அவர்கள் பரஸ்பரம் ஏதேனும் கற்றுள்ளார்களா? ஒருவரை ஒருவர் மாற்றியுள்ளார்களா?
நான் கிளம்புவதற்கு ஒரு நாள் என் அம்மா துக்கச் சடவில் என்னை அழைத்துக் கூறினால், நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன், நம் நாட்டுக்கு தேவை ஒரு புரட்சி.
இந்திய காவல்துறையைச் சேர்ந்த 30 உயர் அதிகாரிகளுக்கு எதிரிகளை கொள்வது குறித்த பயிற்சிகளை இஸ்ரேலின் மோஸாத் அளித்து வருகிறது என இணையதளத்தில் ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. அப்பொழுது தான் மாவோயிஸ்டு அமைப்பை தலை இல்லாது ஆக்க இயலும். இஸ்ரேலிலிருந்து பல புதிய தளவாடங்கள் வாங்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றது: தொலை தூர லேசர் காண் கருவிகள், வெப்ப உருவகக் கருவிகள், அளில்லா விமானங்கள் இவை எல்லாம் அமெரிக்க படைகளில் உள்ள பிரபாக் கருவிகள். ஏழைகளுக்கு எதிராக உபயோகிக்க பொருத்தமான கருவிகள்.
ராய்பூரிலிருந்து தான்தேவாடா செல்ல ஏறக்குறைய 10 மணி நேரம் ஆகிறது. அது மாவோயிஸ்டு நோய்வாய்பட்ட பகுதியின் வழியாக செல்கிறது. இவை போகிற போக்கில் பிரயோகிக்கப்படுகிற வார்த்தைகள் அல்ல. நோய்வாய்பட்ட தாக்குதலுக்கு ஆட்பட்ட என்பது நோயை, பூச்சியை குறிக்கும் சொற்கள். பூச்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்புறப் படுத்தப்பட வேண்டும். இப்படியாக மெல்ல ஊர்ந்து இனப்படுகொலையின் மொழி நம் சொற்தொகுதியை வந்தடைந்துள்ளது.
நெடுஞ்சாலையை பாதுகாக்கும் பொருட்டு காடுகளின் இருபக்கங்களிலும் பெரும் பகுதியை பாதுகாப்பு படைகள் தங்கள் வசப்படுத்தியுள்ளன. இத தாதாக்களின் ராஜ்ஜியம். சகோதரர்கள் காம்ரேடுகள் ராய்பூர் ஊரின் விளிம்பில் ஒரு மிகப்பெரும் விளம்பர வலகை வேதாந்தா (நம் உள்துறை ஒரு காலத்தில் பணியாற்றிய நிறுவனம்) புற்றுநேய் மருத்துவமனை உள்ளதை எடுத்துரைக் கிறது. வேதாந்த நிறுவனம் ஒரிசாவின் பாக்சைட் கனிமத்தை வெட்டி எடுக்கிறது. அந்த ஊரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு நிதி உதவி செய்கிறது. இப்படியான கேடற்ற வழிகளில் தான் இந்த கனிம நிறுவனங்கள் நம் கற்பனைகளில் வந்து அமருகின்றன: நம் மீது கரிசனம் கொள்ள வந்துள்ள மிருதுவான பூதங்கள். இதன் பெயர்தான் பன்னாட்டு சமூகப் பொறுப்பு ண்ண் இது பன்னாட்ட நிறுவனங்களுக்கு நம் தொன்மம் சார்ந்த திரைப்படங்களில் நடித்த என்.டி.ஆரின் வேடத்தை அளிக்கிறது. அவர் ஒரே திரைப்படத்தில் வரும் அத்தனை வேடங்களிலும் நடிப்பார். நல்லவர், தீயவர், வல்லவர் என. இந்த பன்னாட்ட சமூக பொறுப்பு தான் இந்த கனிம வளத்துறையின் பொருளாதாரத்தை கச்சிதமாக இந்தியாவில் குறித்த தருகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் கர்நாடகாவிலிருந்து வெளியான லோகாயுதா அறிக்கையின்படி அங்கு வெட்டி எடுக்கப்படும் ஒவ்வொரு டன் இரும்புத் தாதுக்கு அந்த தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ரூ.27அய் செலுத்துகிறது. அந்த நிறுவனத்திற்கு கிடைப்பதோ ரூ.5000. பாக்சைட், அலுமினியம் துறை சார் கணக்கும் இன்னும் படு மோசமாக உள்ளது. நாம் ஒரு பகல் திருட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அது பல ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்புடையது. இந்த தொகை தேர்தலை, அரசாங்கத்தை, நீதிபதிகளை நாளிதழ்களை, தொலைக்காட்சி சேனலை, தொண்டு நிறுவனங்களை, தொண்டு நிதி நிறுவனங்களை எல்லா விலைக்கும் வாங்க போதுமானது. அங்கும் இங்கும் உள்ள புற்றுநோய் மருத்துவமனை எதற்காக உள்ளது?
சத்திஸ்கர் அரசு கையயழுத்திட்டுள்ள மிக நீண்ட பட்டியலில் வேதாந்தாவின் பெயரை நான் எங்கும் காணவில்லை. ஆனால் புற்று நோய் மருத்துவமனை அங்கு உள்ளது என்றால் அங்கு அருகில் மிகப் பெரும் பாக்சைட் மலை இருக்கிறது என்று மட்டும் என்னால் யூகிக்க முடிகிறது.
தொடரும்...
....................
விமர்சனம்
சிதிலங்களால்
சுழித்தோடும் தெரு
சுழித்தோடும் தெரு
செந்தமிழ் மாரி
செறிவுடன் புனையப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பு எளிதில் உள் நுழைவ தற்கான அத்தனை நல்வரவேற்பையும் வழங்குகிறது எனில் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் அதற்கேயுரிய தனித்துவமான கருத்து அடையாளங்களுடன் பளிச்சிடுவதையே காண முடிகிறது.
பா. சரவணகுமாரின் ‘நாணயக் காரத் தெருவில் சந்தித்த நண்பனின் காதலி’ என்னும் இத்தொகுப்பு அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்புதானா என்ற கேள்வி எழ முடியாதபடி அவரின் எழுத்து நடையும் இலக்கிய வழித்தடமும் விளையாடியிருக்கிறது என்றே கூறலாம்.
தொகுப்பிலுள்ள முதல் கதையான ’ரத்தம்’ கதையின் முடிவு இதயமுள்ள யாவரையும் ஒரு கணமேனும் கலங்கச் செய்யாமல் விடுபட நேராது. கதை சொல்லப்பட்ட விதத்தில் பருவமெய்தாத இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு மன அவஸ்தையையும் புடம் போட்டுக் காட்டும் ஆசிரியர் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளைக்கூட கைக்கொண்டு படிக்கும் நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறார்.
அதேபோல் ‘தையல்’ என்னும் கதையில் வரும் வேலாயுதம் வறுமைப் போராட்டத்தோடு படித்து முன்னுக்குயர நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வான் என்பது உறுதியே.
‘வெந்தனால் வேகாது’ என்னும் கதையில் குறிப்பிட்டிருக்கும் சாதிப் பிரிவினையால் ஏற்படும் சண்டை, சச்சரவு மற்றும் தீ வைத்துக் கொளுத்துதல் போன்றவற்றைக் கூறும்போது ‘உண்மையான அன்பைத் தீ வைத்துக் கொளுத்திவிட முடியாது’ என்று இளம்பிராயத்து நண்பனுக்குத் தம் நட்புக் கணங்களின் மூலம் நினைவுபடுத்துவது சாதியம் பேசித் திரியும் ஒவ்வொரு சமூக அங்கத்தினருக்கும் ஏற்படுத்தும் அன்பின் வழியாகவே தோன்றுகிறது.
மக்கள் இயக்குனர் வி. சேகர் முன்னுரையில் கூறியிருப்பதைப் போல் இப் படைப்பு படிப்பவர்களின் கருத்தில் செழுமையையும் எழுத்தில் செறிவையும் தந்து தரத்தை உயர்த்துவதாகவே உள்ளது என்பதில் எவ்வித அய்யமுமில்லை.
நாணயக்காரத் தெருவில் சந்தித்த நண்பனின் காதலி; ஆசிரியர். பா.சரவணகுமரன்; வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. விலை. ரூ.50
...................
சர்ச்சை
‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை குறித்தான சர்ச்சையாகப் பல இணையங்களிலும் இதழ்களிலும் மிகக் கடுமையாக எதிர்வினைகளாக வந்துக்கொண்டிருக்கின்றன. லீனா மணிமேகலை பதில் கூறாமல் எதிர் தரப்பை பேசவிட்டுக்கொண்டிருப்பது சிறப்பாக இருக்காது. அது அவரின் மீது ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும். அதனால் பலர் தொடுக்கும் கேள்விகளுக்கு சமூக பொறுப்புடன் பதில் சொன்னால் பெண்ணியம், கவிதை குறித்தான அவரின் நிலைப்பாடு என்னவென்று புரியும்.
ம.க.இ.க.வினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் சில கேள்விகளை முன்வைத்தார்கள். லீனா மணிமேகலையின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். 1 வார முடிவில் நேரம் இல்லை என்ற பதில் வந்தது.
லீனா மணிமேகலை தனது தரப்பை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர் கவிதைகளைப் புத்தகமாக்கி பொதுவில் விற்பனை செய்துள்ளார். கவிதைகள் பொதுவிற்கு வந்துவிட்டன. மறு பதிப்பு முயற்சியில் வேறு இருக்கிறார். அதனால் எதிர்வினைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். கேள்விக்குண்டான விளக்கத்தை தருவதே சிறந்ததாக இருக்கும்.
கவிதைக் குறித்தான எதிர்வினைக் கேள்விகள்
ம.க.இ.கவினரின் கேள்விகள் :
- உபரி, மயிர் தொடர்பான அந்தக் கவிதையின் விளக்கமும் பொருளும் என்ன என்று விளக்க வேண்டும்.
- உங்களது இந்தக் கருத்தை தொடரா
- கவோ, கட்டுரையாகவோ விவாத மேடைக்குக் கொண்டு செல்லாமல் கவிதையின் வாயிலாக வெளியிடப் பட்டதன் காரணம் என்ன?
- உலகப் புகழ்பெற்ற, உலகமே மதிக்கக் கூடிய காரல் மார்க்ஸ், மாவோ, லெனின் மற்றும் ஸ்டாலின் போன்ற தலைவர்களை ஆணாதிக்க பிரதி நிதிகளாகக் காட்டியிருப்பது ஏன்?
- உலக நிகழ்வுகள், போராட்டங்கள், மாவோயிஸ்டுகள், போராளிகள், புரட்சிக்காரர்கள், அகிம்சாவாதிகள் எல்லோரும் பெண்களை சிதைப்ப வர்கள் என்று கூறியுள்ளதன் காரணம் என்ன? விளக்கம் தருக.
- உலகில் எல்லாமே பெண்ணை சிதைப்ப தாக உள்ள ஆணாதிக்கம் என்கிறீர்கள். நீங்கள் சார்ந்துள்ள சினிமாத்துறையில் உள்ள பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் பற்றி மட்டும் ஏன் எந்தக் கருத்தும் கூற வில்லை?
- 6. உதவி இயக்குநர் தீபக் என்ற தொழி லாளியைத் தாக்கியது படைப்பாளியின் உரிமை என்கிறீர்கள். ஷோபாசக்தி தாக்கியதை ஆதரித்து இணையத்தில் வெளியிட்டிருந்தீர்கள் எனும்போது, தொழிலாளர்களுக்கும் அதே சுதந்திரம் உண்டா? இல்லையா?
- இலங்கைத் தமிழர் ஒருவர் நடத்தி வந்த இரண்டு எடிட்டிங் ஸ்டுடியோவை அபகரித் தது எந்த சுதந்திரத்தின் அடிப்படையில்? என்ன நியாயம்?
- 8. 15.04.2010 அன்று கூட்டப்பட்ட கூட்டத்திற்கு ம.க.இ.க. மற்றும் வினவு விமர்சனத்திற்கு எதிரான என்று ஏன் பிரகடனப்படுத்தவில்லை, இந்த நேர்மை யற்ற தனத்திற்குக் காரணம் என்ன?
- இந்து மக்கள் கட்சிக்கு மட்டும் எதிர்ப் பான கூட்டம் என்றால் கீழே எங்கள் லேபிளை ஏன் போட்டிருந் தீர்கள்?
- எழுதுவதோ, வெளியிடுவதோ உங்கள் உரிமை எனில், விமர்சனம் செய்வது எங்கள் உரிமை. அதற்கான விளக்கம் கேட்பது எங்கள் உரிமை. பதில் கிடைக்கும்வரை தொடர்ந்து எழுதுவது எப்படித் தாக்குதலாகும்?
- தனிமனிதத் தாக்குதல் என்று சொன்னால், நாங்கள் உங்கள் மீது கொடுத்த தனிமனிதத் தாக்குதல் என்ன?
- 12. ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதிபோல் ஆணாதிக்கத்தைப் பற்றி எழுதியதாக சொல்லிக்கொள்ளும் நீங்கள், பெண்கள், குடும்பத்தார் படிக்க முடியாத கவிதையை எழுதி உள்ளீர்களே. இதுதான் பெண்ணி யமா? இவ்வாறு பெண்களைக் கேவலப் படுத்தலாமா?
- எல்லோரும் பெண் பொறுக்கிகள் என்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சி.பி.ஐ., சி.பி.ம். கட்சிகளில் பெண் பொறுக்கிகள் யார்? யார்? உங்கள் சினிமாத்துறையிலும் யாரெல்லாம் பொறுக்கிகள்?
- 15.04.2010 அன்று நீங்கள் கூட்டிய கூட்டத் தின் உண்மையான நோக்கம் என்ன?
- இந்து மக்கள் கட்சியும் ம.க.இ.க.வும் ஒன்றா? விளக்குங்கள்.
- உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி மான நஷ்ட வழக்கு போடப் போவதாக சொன்னீர்களே, நாங்கள் ஏற்று வழி நடத்திச் செல்லும் கம்யூனிசக் கொள்கைகளை, சித்தாந்தங்களைக் கொச்சைப்படுத்தியதற்கு நாங்கள் உங்கள் மீது வழக்கு தொடுக்கலாமா? விளக்குங்கள்.
- காரல் மார்க்ஸ், புஷ் இருவரும் ஒன்றா? ஜிகாதியும் மாவோயிஸம் இரண்டும் ஒன்றா? விளக்கம் தேவை.
- கேரளாவில் எழுத்தாளர் பால் சக்காரியா மீதான தாக்குதல் சரியா?
- டி. கண்ணன் (இந்து மக்கள் கட்சி) அவர்களின் கேள்விகள்
- இப்படி ஆபாசமாக மதங்களையும், தலைவர்களையும் எழுதுவதுதான் கருத்து சுதந்திரம் என்றால் இன்னும் கருத்து சுதந்திரத்தின் எல்லை எவ்வளவு இருக்கிறது என்பதை வரையறுத்துக் கூற வேண்டும்.
- ஆபாசப் படங்களை வெளியிட்டு விற்பனை செய்வது ஒரு வகை? வார்த்தைகளால் எழுதி விற்பனை செய்வது ஒருவகை? உங்களின் வியாபார உத்திக்கு நாட்டின் கலாச்சாரத்தையா சீரழிப்பது?
கருத்துரிமைக்காக எழுந்த ஆதரவுக் குரல்
அ. மார்க்ஸ், எழுத்தாளர்
எழுத்தாளர் என்ற முறையில் லீனா மணிமேகலைக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே படைப்புரிமை கருத்து சுதந்திரம் இருக்கிறது. அந்த கருத்துக்கு உடன்படாதவர்கள் அல்லது எதிர்கருத்துடையவர்கள் அதேபோல் எழுத்தின் மூலமே தங்களது விமர்சனத்தையோ எதிர்கருத்தையோ முன்வைக்க வேண்டும். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதோ மிரட்டுவதோ உண்மையான ஜனநாயகமாகாது. அதே போல ஒருவரது படைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்பதோ காவல் துறையிடம் புகார் அளித்துத் தடை செய்யக்கோருவதோ எழுத்து சுதந்திரத் திற்கு எதிரானதாகும். இது கண்டனத்திற்குரியது.
ஓவியா, சமூகஆர்வலர்
பெண் உணர்வுகள் எழுதக்கூடாத விஷயமல்ல. பெண்கள் தங்கள் உடல் மொழிகளை முன்வைத்து எழுதும்போது மட்டும் அதிர்ச்சி அலைகளை சமூகம் வெளியிடுகிறது. பெண் உடலும் கருப்பையும் ஆணுக்கே சொந்தமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்ப்பதுதான் கவிதை.
ரஜினி, வழக்கறிஞர்
அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் அத்து மீறல்களைக் கொண்டிருப்பதில் தவறில்லை. பெண்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எல்லா வற்றையும் தாண்டி கருத்து சுதந்திரத்தைக் காக்க முதலில் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.
சுகுமாரன், மனித உரிமை இயக்கம்
எழுதுவது ஒருவரது தனிமனித உரிமை. இதை எதிர்ப்பது என்பது கூடாது. ஜனநாயக ரீதியில் விமர்சிப்பது விமர்சிப்பவர்களின் உரிமை. ஆகவே அவரவர் தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.
........................
வேண்டுதல் வேண்டாமை
கோவன் மகன்
அப்பாடா கடந்த ஒன்ற மாசமா நடந்திட்டு இருந்த நாடகம் ஒரு வழியா முடிஞ்சிருச்சுங்க. இதுக்கு முன்னால இந்த நாடகத்த ரெண்டு தடவ நடத்தியிருக்காங்க. இப்ப நடந்து முடிஞ்சது அந்த நாடகங்களோட மூணாவது பாகம். ஏற்கனவே நடத்திய நாடகத்துக்கு கிடைச்ச வருமானத்தவிட அதிகமான வருமானமும்; வரவேற்பும் இப்ப கிடைச்சிருக்குங்கறதுல இதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ரொம்பவும் சந்தோசந்தான்.
சாதாரணமா நாமா பாக்குற நாடகத்துக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன வித்தியாம்னா சராசரி நாடகங்கள் எல்லாம் ஏதாவது கலையரங்குல நடக்கும். இல்லீனா, டிவியில சீரியல்ன்ற பேருல ஒளிபரப்புவாங்க. ஆனா, இந்த மெகா நாடகம் மட்டும் மைதானத்துல அதாங்க கிரவுண்ட்ல நடக்குது. இந்த நாடகத்தப் பாக்குற பைத்தியங்க மன்னிக்கோணும் ரசிகருங்க இந்தியாவுல (மட்டும்) அதிகங்கறதனால, கலையரங்குல எடம் பத்தாதுனு மைதானத்துல நடத்தறாங்க. இந்த நாடகத்தின் தயாரிப்பாளர் எதிர்பார்த்த மாதிரியே ஏகப்பட்ட கூட்டம். பல பேத்துக்கு டிக்கிட்டே கிடைக்கிலீனா பாத்துக்கோங்க.
அதனால, நேரடியா பாக்க கொடுத்து வைக்காதவிங்களுக்கு நல்ல வாய்ப்பா தொலைக்காட்சிலேயும் காட்டுனாங்கன்னா எந்தளவுக்கு இந்த நாடகத்துக்கு மதிப்பு இருக்கும்னு நீங்களே ரோசன பண்ணிக்கோங்க. அட இவ்ளோ நேரமா அந்த நாடகத்தோட பேரு என்னான்னு சொல்லல பாருங்க. அய்பிஎல் டொண்ட்டி 20 (மிறிலி. ஜி20) என்கிற இந்த நாடகத்து நடிகருங்க ஒவ்வொருத்தரும் கிரிக்கெட் வீரருங்க கணக்கா என்னமா ஆக்டிங் குடுக்கறாங்க. பந்த அடிக்கற மாதிரியே அவுட்டாகறது, ஜெயிக்கற மாதிரி வந்து தோக்கறது, தோக்கற மாதிரியே ஜெயிக்கறதும் அப்பப்பா.... சொல்லும் போதே நமக்கு கண்ணக் கட்டுதே. அந்த கிரவுண்டுல அவிங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
ஆனா, சும்மா சொல்லக் கூடாதுங்க. அவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சாலும் அதுக்கு தகுந்த கூலிய கோடியில வாங்கியிருக்காங்கன்னு தெரிஞ்ச பின்னால நமக்குப் பெருமை தாங்க. அதே மாதிரி இந்த நாடகத்த தயாரிச்ச மோசடி மன்னன் அய்யய்யோ மன்னிச்சிடுங்க லலித் மோடி அண்ணன் ரசிகருங்க எதிர்பார்க்கற மாதிரியும், பைனான்சியருங்க மனங்குளிர்ற மாதிரியும் ரொம்பவுந்தான் சிரமப்ப்பட்டிருக்காரு. அதுக்கு, பலனா அவருக்கும் ஓரளவுக்கு லாபம் கிடைச்சிருக்கு.
இது பொறுக்க முடியாதா அவரோட பார்ட்னருங்க சிலரு தங்களுக்கு லாபத்துல பங்கு தரலைன்னு கோவிச்சுக்கிட்டு அந்த நாடகக் கம்பெனியிலிருந்தே அவர துரத்திட்டாங்க படுபாவிங்க. இருந்தாலும் அய்பிஎல் நாடகக் கம்பெனியின் மற்ற பார்ட்னருங்க சில பேரு இந்த மோசடிக்கு (நாக்குதாங்க கொளறுது) மோடிக்கு ஆதரவாத்தான் இருக்காங்க.
அவிங்கள்ல ரொம்ப முக்கியமானவரு இந்தியக் குடிமக்களோட தாகத்த தீக்கறதுக்காவே ‘தண்ணி’ கம்பெனி நடத்திட்டு இருக்கற விஜய் கொள்ளையாவும் (அடச்சே... என்னடாது இப்படி டங்க் சிலிப்பாகுது) விஜய் மல்லையாவும், சமூக சேவகிகங்க ஷில்பா ஷெட்டியும், ப்ரீத்தி ஜிந்தாவும்னு நெறையப் பேரு லலித் மோடிக்கு ஆதரவா இருக்காங்க. எப்படியோ இந்த அய்பிஎல்ங்கற நாடகக் கம்பெனி நல்லபடியா நடந்து மேலும் சிறப்பான நாடகங்களை நடத்துனா பரவாயில்லினு நெனைக்கிறேன். ஏன்னா, இந்த நாடகம் அரங்ககேற்றத்தின் மூலமா கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடிக்கு மேல் புழங்குது.
இந்த வருமானத்துக் குத்தான் பல உச்சிக்குடுமிங்க கையில துர்ப்பைப் புல்லுக்குப் பதிலா கிரிக்கெட் மட்டைய வச்சுகிட்டு அந்த ஆட்டுஆட்றாங்க. குறிப்பா டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, கும்பளேன்னு அத்தனை பூணூல்களும் (அடக்கருமமே என்னத்துக்குத்தான் இப்படி ஸ்லிப்பாகுதுன்னு தெரியலியே) பிளேயர்களும் இந்த அய்பிஎல் மாதிரியான நாடகத்த நம்பித்தான் கெடக்கறாங்க. அவா ‘நம்ம வாயில மண்ணள்ளி போடற மாதிரி, ‘அவா’ வாயில்லேயும் மண்ணள்ளி போட்றாதீங்க அது ரொம்ப ‘பாவம்’....!
ரொம்ப நாளா பயன்படுத்திட்டு இருக்கற என்னோட பழய செல் பேசிய அதுதாங்க மொபைல மாத்திட்டு புதுசா ஒன்னு வாங்கலாம்னு நெனச்சேன். செல்போனுக் கடக்காரங்க ஒவ்வொருத்தரும் கொடுக்கற விளம்பரத்தப் பாத்தா நமக்கு முழி பிதுங்குது ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்னு ஒரு பக்கம் விளம்பரம். இன்னொரு பக்கத்துல சிம்கார்டு இலவசம்னு ஏகப்பட்டது ஏங்கண்ணுல பட்டுச்சு. நமக்குத் தேவை நல்ல செல்போனு அத எங்க வாங்கறதுன்னு யோசிச்சப்பத்தான் ரவுசு ரமேசு வந்தான். ‘என்னப்பா ஒரே ரோசனைய இருக்கறாப்ல இருக்குது. என்ன விசயம்’னு ரொம்ப அக்கறைய கேட்டான். நானும் விசித்த சொன்னேன். சும்மாவே அவனுக்கு ஏகப்பட குசும்பு. இந்த செல்போன் வாங்கறதப் பத்தி சொன்னதும் கொஞ்சம் கூடுதலாவே ஆரம்பிச்சுட்டான்.
‘ஏனப்பா இதுக்குப் போயி யாராவது இவ்ளோ யோசன பண்ணுவாங்களா.... கௌம்புப்பா’ ன்னு அதிரடியா சொன்னான்.நானும் ‘அடதென்னப்பா திடீர்னு கௌம்புனா எங்க போறது’ ன்னு கேட்டேன்.
“நல்ல செல்போனை வெல கொறச்சலா உள்ளூர் மட்டுமில்லாம, வெளிநாட்டுக்கும் பேசற மாதிரி வசதியோட வேலூர்ல கிடைக்கும் சீக்கிரம் கௌம்புப்பா’’னு அவசரப்படுத்தினான். என்னடாது சென்னையில இல்லாத புது மாடல் வேலூர்ல மட்டும் எப்படி இருக்கும்னு. இதையே அவங்கிட்டையும் கேட்டேன்.
அதுக்கு அவஞ்சொல்றான் “அடப் போடா போக்கத்தவனே ஒரு வாரமா வேலூர்ல புது டெக்னாலஜி கொண்ட செல்போனு இருக்குன்னு சட்டமன்றத்துலேயே பேசிக்கறாங்க உனக்குத் தெரியலியே’ன்னு திட்றான். எனக்கு இன்னும் ஆவலாச்சு, ‘ஏன்டா வேலூர்ல புது செல்போனு கெடைக்கறதப் பத்தியெல்லாமா சட்டமன்றத்துல பேசிக்கு வாங்க’’னு கேட்டுகிட்டே நானும், அவனும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துட்டோம். அப்ப மீண்டும் கேட்«ன். ‘ஏம்பா புது செல்போனு வாங்கப் போறமே வேலூர்ல எந்த இடத்துலேன்னு விசாரிச்சிட்டியா...? அந்த இடம் உனக்கு தெரியுமா...-? என்று கேட்டேன். ‘நீ உம் பேர கோவன் மகன்னு வெச்சகிட்டதுக்கு ‘கோமுட்டி தலையன்’னு வெச்சிருக்கலாம். வேலூர்ல புது செல்போனுங்க கூரு கட்டி விக்கற எடம் வேலூர் சென்ட்ரல் ஜெயில்னு தமிழ்நாட்டு மக்கள்ல பல பேருக்கு தெரியும். உனக்கு இன்னும் தெரியலியே’ன்னு தலைல அடிச்சு கிட்டான்.
அதக் கேட்டதும் யாரோ எங்காதுல வெடிகுண்டத் தூக்கிப் போட்டா மாதிரி இருந்துச்சு. ஆனாஅவன் சிரிச்சுகிட்டே ‘வேலூர் ஜெயில்லதான் செல்போனுங்க ரொம்ப சீப்பா கெடைக்கும். தீர்ந்து போறதுக்குள்ள சீக்கிரம் போய் வாங்கலாம் வாடா’ன்னு சொன்னாம் பாருங்க எனக்குத் தலையே சுத்த ஆரம்பிச்சது. ‘ஜெயில்ல எப்படிடா செல்போனு கெடைக்கும்’னு கேட்டேன்.
“பத்தொன்பது வருசமா ஜெயில்ல ஆயுள் கைதியா வெச்சிருக்காங்களே நளினி அவிங்களுக்கு திடீர்னு ஒரு செல்போன் கெடச்சதுன்னும், அதுமூலிமா லண்டன், கனடான்னு பல வெளிநாடுகளுக்குப் பேசியிருக்காங்கன்னு சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டு புடுச்சு சொல்லியிருக்காரு’ங்கறான்.
‘கைதிகளுக்கு செல்போனு ஈஸியா கெடைக்கற அளவுக்கு ஜெயில்ல செல்போன் விக்கறவிங்க யாருப்பா?’னு நானும் உடமா கேட்டேன் அப்பத்தான் ஆகா இவன் நம்மள ஏதோ வில்லங்கத்துலான் மாட்டிவிடப்போறன்னு நெனச்சுட்டு கழிப்பறை போறதாச் சொல்லிட்டு காம்பவுண்ட எட்டி குதிச்சு அவங்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன். அப்ப எனக்கொரு யோசன வந்தது. என்னமோஅந்தம்மா ரொம்ப ஆபாத்தானவிங்கன்னும் அவிங்கள வெளிய விட்ட சட்டையோ பாவடையோ கிழிஞ்சிரும்னு சொல்லி 19 வருசமா அடச்சு வெச்சு தீவிரமா கண்காணிக்கற விங்களுக்கு தெரியமா நளினிக்கு செல்போன கொடுத்த புண்ணியவான் யாராயிருக்கும்? ஒருவேள கண்டுபுடுச்சவிங்களே வெளையாட்டுத்தானமா ஒளிச்சுவெச்சுருபாங்களோ? என்னமோபோங்க இதெல்லாம் தமிழினத் தலைவருக்குத்தான் தெரியுமோ என்னவோ?
...............................
ஐ.பி.எல். ஜி 20ல் ரெண்டஸ்வன் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனம் ரூ. 1530 கோடிக்கு கொச்சி அணியை ஏலத்தில் எடுத்தது. சசி தரூர் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது காதலி சுனந்தா புஷ்கருக்கு ‘ஸ்வெட்டி ஈக்விட்டி’ என்னும் சேவைப் பங்குகளான ரூ. 70 கோடியைக் கிடைக்கச் செய்துள்ளார். இது சசி தரூரைப் பதவி இழக்க வைக்கும் அளவுக்கும் சுனந்தாவை சேவைப் பங்குகளைத் திரும்ப கொடுக்குமளவுக்கும் நிர்பந்தித்திருக்கிறது என்றால் நெருப்பில்லாமல் புகையுமா?
ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகே ஐ.பி.எல். ஜி 20-இல் கலந்துகொள்ள தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மார்ச், 2010இல் தொடங்கப்பட்ட ரெண்டவஸ் நிறுவனம் இதில் கலந்துகொள்ள எப்படி அனுமதியளித்தார்கள் என்னும் கேள்வி எழுந்தது. அதோடு அந்த சேவைப் பங்கு என்பது 15 (சுமார் 5 கோடி) சதவீதத்தைத் தாண்டினாலே மத்திய அரசின் ஒப்புதலோடுதான் கொடுக்கப்பட வேண்டும் என்பது நியதி. நிபந்தனைகள் இவ்வாறு இருக்கையில் எந்தவித சம்பந்தமும் இல்லாத சுனந்தாவுக்கு அளிக்கப்பட்டிருப்பது என்றால் சசி தரூரின் பதவிச் செல்வாக்கினால் மட்டுமே. பிரதமரின் தலையீட்டினால் மட்டுமே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 26 அன்று முடிவடைந்த ஐ.பி.எல். ஜி 20 பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டு ஓய்ந்துள்ளது. இறுதிப் போட்டி முடிந்த சில நிமிடங்களில் அவற்றின் தலைவரான லலித் மோடி மீது சர்ச்சையை கிளம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது சிரயு அமன் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ப்ரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள்தான் என எந்த முறையான ஆவணமும் இல்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. பல நூறு கோடிகளை முன்வைத்து ஏலமிடப்படும் ஐ.பி.எல். ஜி 20 போட்டி முறையற்று நடப்பது சமூக அளவில் வெறுக்கத்தக்கதாகவே உள்ளது.
.....................
சாமியார்களின்
பாலியல் தேடல்கள்
பாலியல் தேடல்கள்
சகா. சசிக்குமார்
கொலை_கொள்ளை_கற்பழிப்பு_மோசடி போன்றவைகள் ஆன்மீக சேவை புரிபவர் களின் அடையாளமாக இருந்து வருகிறது. அவற்றின் பலனாக சிறைத் தண்டனைகளையும், வழக்குகளையும் சந்திப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்த வரிசையில் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்தா, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்குமாய் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரன், பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த கோயில் அர்ச்சகன் தேவநாதன் என்கிற பட்டியலில் பல்வேறு காவிகளும் இணைந்தவண்ணமாய் இருக்கின்றனர்.
அந்த காம’கோடிகளில் தற்பொழுதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியவர்கள் நித்யானந்தா மற்றும் கல்கி விஜயகுமார். ஆழமான ஊடுருவும் பார்வை, அமைதியான பேச்சு, யோகா, தியானம், மனஅமைதி என்பவற்றில் நிபுணத்துவம் ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு, காசு பொறுக்கி ஊடகங்களின் துணையோடு பிரபலமடையும் இந்த சாமியார்களின் குறிக்கோள் பணம் பண்ணுவது மட்டுமே.
அடுத்த இலக்கு பெண்களுடனான பாலியல் தொடர்பு. இவர்களின் ஆன்மீக சித்து விளையாட்டை உண்மையென நம்பி அகப்பட்டுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது வேதனையானதாக இருக்கிறது.
இந்த சமூக இழிநிலையை கண்டிப்பதற்கோ, சாமியார்களின் அடவடிகளைத் தண்டிப்பதற்கோ ஆட்சியாளர்கள் முனைப்போடு இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால், காஞ்சி சங்கராச்சாரி இப்பொழுது தனது குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோயில் கருவறையிலேயே அருவருக்கத்தக்க முறையில் களியாட்டம் போட்ட தேவநாதன் பினையில் வெளிவந்து சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறான்.
இவர்கள் மீது ஆரம்பத்தில் ஆத்திரப்படும் மக்கள் தங்களது ஞாபக மறதியின் காரணமாக மறந்துவிட்டு வாய்முடி மவுனிகளாகவே இருந்து கொண்டு அடுத்த சாமியாரை நாடிச் செல்கிறார்கள். அதற்குக் காரணம் இந்தியாவின் தலைமை அமைச்சர் முதற்கொண்டு குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், நீதியரசர்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் என்று எல்லா பிரபலங்களும அனைத்து சாமியார்களின் கால்களில் விழுந்து கிடக்கும் மூட பக்தர்களாக இருப்பதுதான்.
அதனால்தான் அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கு இழந்தாலும் மதத்தின் கலாச்சாரக் காவலர்கள் புதிய சாமியார்களை களமிறக்குவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நமது நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழகியிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ‘காமகேடி காவிகள்’. ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளில் பெண்கள் சிக்கி சீரழிவதற்கானக் காரணங்களை அறிவதற்கும், அவற்றில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை உளவியல் மருத்துவர் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களின் கருத்து நம்மை சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.
ஷாலினி, உளவியல் மருத்துவர்
இயல்பாகவே பெண் களுக்கு ஒரு இயலாமை ஒரு பலவீனம் இருக்கிறது. நம்மைப் பாதுகாக்க யாருமில்லை, தனக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை என்கிற நினைப்புதான் காரணம். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை தனக்கு ஆறுதல் சொல்லவோ, பாதுகாக்கவோ யாராவது கிடைத்தால் அவருக்காக எதையும் செய்வதற்குத் தயாராகத்தான் இருக் கிறார்கள். இந்த பலவீனம் பெண்களுக்கு ஏன் இருக்கிறது என்றால், சுயகவுரவம், சுயசார்பு இல்லாதபோது மற்றவர்களை சார்ந்து வாழும் நிர்பந்தத்தில் தள்ளப்படும்போது இந்த மனஅழுத்த நிலைக்கு வந்து விடுகிறார்கள். பெண்களின் இந்த மன அழுத்தத்தைச் சாமியார் போன்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பகடை காய்களாக்கிவிடுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதுபோல் சாமியார்கள் மட்டுமல்ல அதிகாரத்தில உள்ள பல ஆண்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி அல்லது ஒரு துறைத்தலைவர் அல்லது மருத்துவர்கள் என்று யார் வேண்டுமானாலும் பெண்களை தரக் குறைவாக நடத்துவதோ மானபங்கம் செய்வதோ அல்லது பாலியல் வன்முறை செய்வதோ அல்லது அவர்களை ஏமாற்றி அவர்களின் ஒத்துழைப்போடு செயல்படுவதோ நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் என்ன கவனிக்க வேண்டியது என்றால் பெண்களிடம் அதிகாரம் இல்லை ஆண்களிடம் இருக்கு என்பதுதான். அதிகாரம் இருப் பதனால்தான் ஆண்களிடம் பெண்கள் பணிந்து போய் விடுகிறார்கள்.
இப்ப பார்த்தீர்கள் என்றால் உச்சத்தில் இருக்கற எந்த நடிகையும் ‘அந்த’ சாமியாரிடம் போய் விழவில்லை. யாருக்கு தோல்வியோ, யாருக்கு வாழ்க்கையில் விரக்தியோ அவர்கள்தான் போய்விழுகிறார்கள். பெண்களுடையே பலவீனமே இதுதான் என்கிறபோது பெண்களுக்கு அதிகாரத்தை வழக்குவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு ஏன் அதிகாரம் இல்லையென்றால் அது மாதிரியான சமூகச் சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமூகச் சூழலில் இருந்து மாறுபட்டு பெண்களுக்கு கொஞ்சமேனும் அதிகாரம் வழங்கப்படும் என்றால் இந்த மாதிரி சிக்கல்கள் வராது.
சாமியார்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே இருக்கும் பொழுது வாழக்கையில் இதற்குப்பிறகு என்ன என்கிற முயற்சியில் இறங்கி விடு கிறார்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித் தார்கள் என்றால் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் எல்லாம் கட்டி விடுகிறார்கள். மாறாக சிற்றின்பத்தில் அடுத்தது என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தார்கள் என்றால் அது அவர்களுக்கே பிரச்சனையாக மாறிவிடுகிறது. அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்பவர்தான் துறவி. ஆனால் எதையுமே துறக்காமல் அந்த சிஸ்டத்தையே ஏமாற்றுவதால் பொது மக்களுக்கு அவர்கள் மீது கோபம் வந்து விடுகிறது.
சாமியார்கள் பிரம்மச்சரியத்தை நம்பி எல்லாம் வலியுறுத்த வில்லை. அது அவர்களுடைய தொழில் என்ன சொன்ன பொழப்பு ஓடும், என்ன கதை சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதை எல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். அதைப் பின்பற்றுகிறார்கள், இல்லையா என்பதைத் தெரிந்து சொள்ள வேண்டியதுப் பொதுமக்களாகிய நம்ம கடமை. மதம் சார்பா என்ன சொன் னாலும் நம்ம மக்கள் நம்பிவிடுவார்கள். அது எந்த மதமாக இருந்தாலும், அங்க போனால் அது நடக்கும், இங்க போனால் இது கிடைக்கும் என்று சொன்னால் எவ்வளவு செலவழிச்சும் அதை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்தளவுக்க மூடநம்பிக்கைகள் வளர்ந்திருப்பதைத் தடுப்பதற்கு நாம என்ன செய்திருக்கிறோம் என்கிற கேள்விதான் எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாமியார் மாட்டுகிறார். ஆனால் பாலியல் கல்வியை நாம இன்னும் தெளிவடையவில்லை என்றால், பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவில்லை என்றால் நாம இன்னும் பிற்போக்குத் தனமாகத்தான் இருக்கிறோம் என்பது உறுதியாகிறது.
பேராசிரியர் பழனி
தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்திடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். உழைப்பால் உயர வேண்டும் என்கிற தன் நம்பிக்கை பெற வேண்டும். பெண்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் மருத்து வரைத்தான் நாடிச்செல்ல வேண்டுமே ஒழிய சாமியார்களை நோக்கி ஓடக்கூடாது. அப்படி சாமியார்களை தேடிப்போகும்போது பெண்களின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அடிமையாக்குகிறார்கள். எதையும் அறிவு ரீதியா ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
பேராசிரியர்
ராச. பாண்டியன்
தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி
இறை நம்பிக்கை உள்ளவர் களிடம் கூட குறிப்பிட்ட கடவு ளால்தான் லாபம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அந்தக் கடவுளை கும்பிடுகிறப் போக்கு அதிகரித்துள்ளது. பக்தர்களிடம் நிறைந்துள்ள இந்த லாப நோக்கம்தான் கோயிலில் உள்ள மூலவரை விட்டுவிட்டு நவக்கிரகங்களைக் கும்பிடுவதும், அந்த நவக்கிர கங்களுக்கு முன்னால் நிற்கின்ற சாமியார்களை நோக்கிப் போய் பலனடைய நினைக்க வைக்கிறது. மக்கள் சாமியார்களை நம்பி எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் பல சாமியார்கள் உருவாகிவிடுகிறார்கள். இன்னைக்கு இருக்கிற அத்தனை சாமியார்களும் இல்லறதுக்கு போகாமலேயே இளமையிலேயே துறவறத்துக்கு போய் விடு கிறார்கள். பாலூக்கம் என்பது இயல்பாக வரக்கூடிய ஒன்று. பாலூக்கத்திற்கு ஈடுகொடுக்க வில்லை என்றால் தவறான வழிக்குதான் போகச் சொல்லும். நம்முடைய பகுத்தறிவு நெறியையும், திருக்குறள் வாழ்வியல் முறையையும் பின்பற்றி வாழ்வதாக இருந்தால் இப்படிப்பட்ட சிக்கல்கள் வராது.
முனைவர். ஜெயலட்சுமி
இணைப் பேராசிரியர்,
மாநிலக் கல்லூரி
பெண்களுக்கு கடவுள் என்பது ஆழமான நம்பிக்கை. எல்லாமே தனக்கு சுலபமா கிடைக்க வேண்டும் என்கிற சுயநலப்போக்கும் அவர்களிடம் இருக்கிறது. பெண்கள் சாமி வந்து ஆடுவது என்பது கூட உளவியல் ரீதியா தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளவும் அல்லது தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்தான். தங்கள் பிரச்சனைகளை சாமியார்களிடம் போய் சொன்னால் தீர்வு கிடைக்கும்னு நம்புகிறார்கள். இன்னொன்று சாமியார்களுடைய தோற்றமும் பெண்கள் ஏமாந்து போவதற்குக் காரணமாக இருக்கிறது. பெண்ணிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாலே தன்னை மதிக்கிறார்கள் என்பது அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. இவைகள்தான் பெண்கள் சாமியார்களிடம் அடிமையாவதற்குக் காரணமாக அமைகிறது.
காஞ்சி மாமல்லன்,
பொதுச் செயலாளர்
அறிவுச்சுடர் அம்பேத்கர் மாமன்றம்
மதம் என்பது ஆண்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த மதத்தைக் கட்டிக் காப்பாற்றும் வேலையை பெண்கள்தான் செய் கிறார்கள். அதனால்தான் பெண்கள் அதிகமாக மதச் சடங்குகளில் ஈடுபடுவதும், சாமியார்களை நம்பி படையெடுப்பதும். இந்து மதத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுபடாது என்று தெரிந்து கொண்ட சாமியார்கள் புத்த மதத்தில் உள்ள கருத்துகளை எடுத்துக்கொண்டு இந்து மதத்தின் கருத்துக்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது ஆதிசங்கரர் காலத்தில் இருந்தேத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி புத்த நெறியில் இருந்து திருடப்பட்டதுதான் ‘யோகா’. இது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. இந்து சாமியார்கள் யோகா செய்வதை மிகப்பெரிய முதலீடாகக் கொண்டு மோசடி செய்து வருகிறார்கள். இந்த மோசடி சாமியார்களிடம் ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
...................
முயற்சி வெல்லும்
இசையமைப்பாளர் ஆர்.டி. மோகன்சிங்
‘முத்திரை பதிப்பதே இலட்சியம், முயன்றால் வெற்றி நிச்சயம்’ இந்த வரிகளுக்கு சாட்சியாய் விளங்கும் இலட்சிய மனிதர் இசையமைப்பாளர் ஆர்.டி. மோகன்சிங். சஹாராவில் அமர்ந்தாலும் சஹானா பாடும் இசைக்காதல் இவருடையது. திசைகள் தேடி கண்களிலும் இதயத்திலும் சுமந்து கொண்டி ருப்பது ஓர்உன்னதமான திரைக்கனவை! கனவு சுமப்பவன் தன் கண்களை நம்பினால் கனவு நனவாகும். தன்னை நம்பினால் கனவு நனவாகும். இதோ, தன்னம்பிக்கையோடு போராடிய மோகன்சிங் தன் பல்லாண்டு கனவைப் பலவலிகள் கடந்து இன்று நனவாக்கியுள்ளார்.
‘தைரியம்’ என்ற அதிரடித் திரைப்படத்தில் இசையமைப் பாளராகக் களம் கண்டிருக்கும் மோகன்சிங் அப்படத்தின் தலைப்பைத் தன் உழைப்பில் காட்டி வருகிறார்.
அந்த உழைப்பாளியுடன் ஓர் உரையாடல்...
வணக்கம். தங்கள் இசைப்பயணத்தின் அடித்தளம் குறித்துக் குறிப்பிடுங்கள்.
சிறுவயதிலேயே இசை மீது எனக்குக் காதல் உண்டானது. இளமையில் நான் வறுமையில் வாடினாலும் இசையார்வம் என்னை உற்சாகத்துடன் இயங்க வைத்தது. அப்போதெல்லாம் மேடைநாடகங்கள் மிகப் பிரபலம். ஆதலால் நாடகம் நடக்கும் இடங்களுக்குச் சென்று அங்கு இசைக்கப்படும் கருவிகளில் என் விரல் பதித்துக் கலையார்வத்தை வளர்த்துக் கொண்டேன்.
தாங்கள் எந்தெந்த நாடகக் குழுக்களில் பணியாற்றி யிருக்கிறீர்கள்?
ஒய்.ஜி.பி. நாடகக்குழு, மௌலி, விசு நாடகக் குழுக்களில் இணைந்து நான் பணி புரிந்திருக்கிறேன். மிகவும் புகழ்பெற்ற மனோரமாவின் ‘மியுசியோரமா’ இசைக் குழுவில் தலைமைப் பொறுப்பு வகித்த அனுபவமும் உண்டு.
நாடகப் பணி அனுபவத்திற்கும் திரையுலக அறிமுகத்திற்குமிடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டது குறித்து....
ஆம். அந்த இடைவெளி இன்னல் நிறைந்தது. ஆனாலும் நான் மன உறுதியை இழக்கவில்லை. உழைப்பை முதலீடு செய்து தொடர்ந்து போராடி என் கனவை நிறைவேற்றப் பாடுபட்டேன்.
முதல் திரைப்படம்....
கடும் போராட்டத்திற்கு பின்னர் இயக்குநர் & நடிகர் குமரன் அவர்களின் தைரியம் திரைப்படத்தில் இசையமைப்பளராகப் பணியாற்றினேன். அந்தப் படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தைரியம் திரைப்படத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்...
என் அருமைச் சகோதரர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் தைரியம் திரைப்படத்தில் ஒரு கானாப் பாடலைப் பாடினார். பாடலுக்கான அவரது பாராட்டு மழை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னணிப் பாடகர் எஸ்..பி.பி அதே திரைப்படத்தில் ‘ஹேப்பி நியு இயர்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடலைப் பற்றி பிரபல வார இதழொன்றில் அவர் குறிப்பிட்டுச் சொன்னது எனக்கு நெகிழ்ச்சியான அனுபவம். முன்னோடிக் கலைஞர்களின் வாழ்த்துக்கள் என்னை வழி நடத்தும்.
தற்போது பணியாற்றி வரும் திரைப்படங்கள்...
இயக்குநர் எஸ்.என். பிரசாத்தின் கை வண்ணத்தில் உருவாகும் நேர்த்தியான கதைக் களத்திற்குத் தற்சமயம் இசைப் பொறுப்பேற்றுள்ளேன். தொடர்ந்து, இயக்குநர் பழனியின் ‘எங்க ஊரு சோழ வந்தான்’ திரைப்படத்திற்கும் இயக்குநர் கோபியின் ‘கோலி’ திரைப்படத்திற்கும் இயக்குநர் கருணாநிதியின் ‘சித்திரைத் திருவிழா’ திரைப்படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறேன். அனைத்துமே சிறப்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள்.
இசைத்துறையில் தங்களை இடையறாது ஊக்குவித்தவர்கள்...
பெருமதிப்பிற்குரிய அன்பு அன்னை மனோரமா அவர்கள் என்னைப் பாது காத்து என் இசையார்வத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தியவர். இயக்குநர் & நடிகர் குமரன் அவர்கள் என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவரது இதயம் போற்றத்தக்கது! இவர்களே என்னை எப்போதும் ஊக்குவிப்பவர்கள்.
தங்களின் எதிர்கால இலக்கு?
உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இசையில் எனக்கான பணியைத் திறம்படச் செய்ய வேண்டும். தடைகள் பல கண்டுள்ளேன். ஆனாலும்.. என் முயற்சி வெல்லும்! (குரலில் உறுதி தொனிக்கிறது)
சந்திப்பு: கார்க்கோ
.....................
திரை
தி ருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் என். சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்திருக்கும் படம் ‘பையா’. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என்ற கனமான படங்களுக்குப் பிறகு கார்த்தி பக்கா மசாலாப் படக் கதாநாயகனாக வலம் வந்திருக்கும் படம், அவருக்கு இன்னொரு முகத்தையும் தந்திருக்கிறது. ஹீரோயின் தமன்னா.
இளையோரை வசீகரப்படுத்தி மீண்டும் பார்க்கத் தூண்டும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான டூயட் பாடல்கள் (கதாநாயகியின் அரைகுறை ஆடையேற்பு), அடுத்தடுத்து இடம்பெறும் இயற்கையழகு என லிங்குசாமி கலக்கிய ஒரு மசாலா கலவையே இப்படம். சரி கதையைக் கூறுங்கள் என்றுதானே கேட்கிறீர்கள். ம்.... கதை... கேட்கக் கூடாத கேள்வி. படம் பார்த்தோமா, என்ஜாய்மெண்ட் இருந்ததா அதைத்தான் பார்க்க வேண்டும் என்கிறது படம்.
தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பெண்ணுடன் பெங்களூருவிலிருந்து மும்பை செல்ல வாய்த்த இளைஞன், வழியில் எதிர்பாராத சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்ன என்பதைத்தான் தேடியிருக்கிறார் லிங்குசாமி.
கார்த்தி புதுவிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் இரண்டு படங்களைவிடக் கலர் கலரான டீ -ஷர்ட், ஜீன்ஸ் என கலர்புல்லாக வலம் வருகிறார். நடிப்பிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அசத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். உதாரண மாக தமன்னாவை அவரது வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டுப் பிரியும்போது காதலுணர்வை யெல்லாம் தேக்கி ஃபோனில் பேசுவார் பாருங் கள், கொள்ளை கொண்டுவிடுகிறார். சூர்யாதான் குரல் கொடுத்தாரோ என்ற எண்ணத்தையும் இந்த இடத்தில் ஏற்படுத்துவதைத் தடுக்க முடியாது..
லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்குத் தடையாகி விடுவானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு.
தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்று தெரிகின்றபோது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே தடாலென்று கீழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டர் கலகலக்கிறது.
கோடையின் தாக்கத்தைத் தணிக்கும் அழகு தென்றலாக (கவர்ச்சி) தமன்னாவை இரண்டரை மணிநேரம் உலவ விட்டிருக் கிறார்கள். கார்த்திக், விஜய்ன்னு அவங்க மார்கெட் ஏறிக்கிட்டிருப்பதை “அடடா மழைடா அட மழைடா” பாடல் தமன்னா காட்டில் அடைமழை என்பதைக் காட்டுகிறதோ என்றுதான் தோன்றுகிறது.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக வலம் வந்து சுவாரசியம் கூட்டி யிருக்கிறது இப்பயணத்தில் இடம்பெறும் கருப்புநிறக் கார்.
இசை யுவன் ஷங்கர் ராஜா. வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரே ஒரு சோகப் பாடலையும் பாடி மனதில் நிற்கிறார். பாடல் வரிகள் முணுமுணுக்க வைக் கின்றன. மீண்டும் ந.முத்துக்குமாருக்கு ஓர் பெயர் சொல்லும் படம். காட்சிக்கேற்றவாறு மாறுவதில் மதியின் கைதேர்ந்த ஒளிப் பதிவு இப்படத்தை அழகுபடுத்துகிறது.
மற்றபடி, கோடையில் இளைப்பாறக் கிடைத்த நிழல்தான் இப்படம்.
.............


No comments:
Post a Comment