பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, 42 வருடங்களாக நிறைவேறாமல் பத்து முறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊழல் செய்திகள் மிகப்பெரிய அளவில் ஊடகங்களால் வெளிக்கொணரப்பட்டு அயல்நாடுகளிலும் சிரிப்பாய் சிரிக்கிறது இந்திய மானம்.
கடந்த ஐந்தாம் தேதியில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஊழலுக்கு எதிரான முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர் முன்வைக்கும் கோரிக்கை.
பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டுகள். யாதவ் மற்றும் இந்தியாவே அவருக்குப் பின்னால் இருப்பது போன்றொரு தோன்றத்தைக் காட்டுகிறது மீடியாக்கள். இதனிடையே புகுந்த சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்றார். உடனே மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது என்றும். கமிட்டித் தலைவரை முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.
உண்ணாவிரதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு பின்பு மீண்டும் தாமதப்படுத்தி இந்தியா ஊழலுக்கெதிரான ஒரு மிகப்பெரியதொரு எதிர்நடவடிக்கையை எடுத்துவிட்டதுபோலவும் இனி ஊழல் நடைபெறாது எனவும் பழைய ஊழலை மறக்கடித்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் தனது அரசாங்கத்தின் பெயரையும் காத்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இதை அமைத்துக்கொண்டார். போராடுபவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதை முக்கியத்துவத்தை உணராமல் அதை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் அரசியல் அறிவும் சாணக்கியத்தனமும் இல்லாமலா போய்விடும் இந்திய ஆட்சியாளர்களுக்கு.