பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, 42 வருடங்களாக நிறைவேறாமல் பத்து முறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊழல் செய்திகள் மிகப்பெரிய அளவில் ஊடகங்களால் வெளிக்கொணரப்பட்டு அயல்நாடுகளிலும் சிரிப்பாய் சிரிக்கிறது இந்திய மானம்.
கடந்த ஐந்தாம் தேதியில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஊழலுக்கு எதிரான முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர் முன்வைக்கும் கோரிக்கை.
பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டுகள். யாதவ் மற்றும் இந்தியாவே அவருக்குப் பின்னால் இருப்பது போன்றொரு தோன்றத்தைக் காட்டுகிறது மீடியாக்கள். இதனிடையே புகுந்த சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்றார். உடனே மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது என்றும். கமிட்டித் தலைவரை முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.
உண்ணாவிரதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு பின்பு மீண்டும் தாமதப்படுத்தி இந்தியா ஊழலுக்கெதிரான ஒரு மிகப்பெரியதொரு எதிர்நடவடிக்கையை எடுத்துவிட்டதுபோலவும் இனி ஊழல் நடைபெறாது எனவும் பழைய ஊழலை மறக்கடித்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் தனது அரசாங்கத்தின் பெயரையும் காத்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இதை அமைத்துக்கொண்டார். போராடுபவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதை முக்கியத்துவத்தை உணராமல் அதை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் அரசியல் அறிவும் சாணக்கியத்தனமும் இல்லாமலா போய்விடும் இந்திய ஆட்சியாளர்களுக்கு.
இன்றைய தமிழகம்
மாத இருமுறை இதழாக வெளி வருகிறது. சமூகத்தில் அரசியல் மற்றும் அதிகார மையத்தின் தவறுகளை வெளிப்படுத்தும் இதழ்.
Monday, April 11, 2011
Saturday, May 29, 2010
ஏப்ரல் 16-30, 2010
தலையங்கம்
இன்றைய தமிழகம் இனி உங்களுக்காக...
எண்ணற்ற பத்திரிகைகள் தமிழகத்தில் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே வளர்கின்றது. அவற்றில் துரதிருஷ்டமாகச் சில துதிபாடிகளாகவும் மாறிவிடுகின்றன.
இவ்வாறான நேரத்தில் ஒளியேற்றும் தீச்சுடர்போல், நேர்கொண்ட பார்வையோடு, நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெஞ்சோடு மக்களை நோக்கி ஒரு புதிய உதயத்தின் கடினப் பயணம்தான் ‘இன்றைய தமிழகத்தின்’ நோக்கம். இனி இது மக்களோடு கலந்து மக்களுக்காகப் பேசும்.
இன்று பிறக்கும் ‘இன்றைய தமிழகம்’ வளர்ச்சி அடைய உங்களின் பேராதரவை நாடுகிறோம்.
கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளும், அதைத் தொடர்ந்து வரும் விமர்சனங்களும், அதோடு திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள்கள் காணாமல் போனதும் இன்றைய கல்வியின் தரத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.
அரசு மறுதேர்வு வைப்பது மட்டுமே ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கு வழி வகுக்காது. அனைத்துத் துறையிலும் உலகச் சூழலோடு போட்டி போடும் நாம், இதுபோன்ற கவனக்குறைவுகளை சரி செய்து, கல்வியின் தரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தையே நிர்ணயிக்கக் கூடிய அடிப்படை அமைப்பான கல்வியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை நம் கல்வித்துறை ஏற்படுத்தவேண்டும். அதற்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தகுந்த இளைய சமுதாயத்தை உருவாக்க முன்வர வேண்டும்.
.......................................
கட்டுரை
ஜெயிக்கப் போவது யாரு
நல்லதம்பி
கோடிக்கணக்காகப் பணம் போட்டு எடுத்த படங்கள் எல்லாம் பார்க்க நாதியில்லாமல் அநாதையாய் தியேட்டரில் அல்லாடும் காலத்தில் சாமியார் நித்தி யானந்தா தமிழ் நடிகையுடன் கூடிக் குலவும் கொஞ்சல் காட்சிகள் சன் டிவி உபயோகத்தில் தமிழக மக்களின் வரவேற்பறையில் பலப்பல காட்சிகளைக் கண்டுவிட்டது. சரச சாமியார் நித்தியானந்தா போல் எத்தனையெத்தனை சாமியார்கள் இப்படி கையும் களவுமாக மாட்டினாலும் சாமியார் பின்னால் போகும் கூட்டம் திருந்தவா போகிறது? பணம் கொட்டிக் கொழிக்கும் தொழில் சாமியார் தொழில். சுத்தமான காவியுடை. முகத்தில் மந்தகாசப் புன்னகை. வசியப்படுத்தும் வசீகர மொழி. வேறென்ன வேண்டும்? சாமியார்கள் காட்டில் மழைதான். சில சமயங்களில் அல்ல, பல சமயங்களில் இந்த சாமியார்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. மகாநதி திரைப்படத்தில் ‘‘எப்படி ஒரு நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குது?’’ன்னு கதாநாயகன் ஆதங்கப்படுவதுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.
எப்படிப் பெண்கள் மிகச் சரியாக ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு ஏமாறுகிறார்களோ? ஆச்சரியமாக இருக்கிறது. தெரியாமல் ஏமாறுகிறார்களா, தெரிந்தே ஏமாறுகிறார்களா. ஒரு சாமியார் மாட்டிக்கொண்டால் தொடர்ந்து புகார்களை வாரியிறைக்கும் பெண்கள் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முகம் மழித்த சாமியார்கள், மொத்தத்தையும் அறுத்துக் கொண்டவர்கள் எனச் சமூகம் இன்னமும் நம்புகிறதா? பொதுவாக ஆன்மிகத்தில் அதிகப்படியான நாட்டம் கொண்டவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து இத்தகைய தடுமாற்றங்களுக்கு பின்னணிக் காரணமாக இருக்கலாமோ? கோவிலுக்குப் போகிறேன், சாமியாரைப் பார்க்கப் போகிறேன் எனும்போது யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரப்போவதில்லை என்பது ஒரு கவசமாக இருக்கிறதா? சொத்துகளை வாரிக்குவிப்பவன், சுகத்தில் மூழ்கித் திளைப்பவன் எப்படி முற்றும் துறக்க முடியும்? அவன் எப்படி நமது கஷ்டங்களை தீர்க்க முடியும்? ஆண்களோ பெண்களோ ஏதோவொரு எதிர்ப்பார்ப்போடு தானே சாமியார்களை நாடுகின்றனர். உண்மையான சாமியார்கள் இருக்கும் இடமே யாருக்கும் தெரியப் போவ தில்லை. நித்தியைப் போன்றவர்கள் இன்னும் எவ்வளவு பேர் உள்ளனர்? கூட்டத்தைச் சேர்க்கும் எல்லாச் சாமியார்களுமே ஒருவகையான அயோக்கியர்கள்தாம். மக்கள் விழித்துக் கொள் ளாதவரை இத்தகு சாமியார்கள் கதவைத் திறந்து கொண்டேதான் இருப்பார்கள்.
சாமியார்களின், பெண்களின் பாலியல் வேட்கைகளில் எந்தத் தப்புமில்லை. ஆனால் போலியான வேஷங்கள் எதற்காக... யாரை ஏமாற்ற... நம் சமூகத்தின் போலியான முகம் தொடர்ந்து பல வகைகளில் பொதுச் சபையில் கிழிந்து தொங்குகிறது. இதைப் போன்ற விஷயங்களில் புலனாய்வுப் பத்திரிகை களின் பங்கு மகத்தானது. கிளுகிளுப்பான காட்சி களை வழவழப்பாக வண்ணப்பக்கங்களில்
வாரி இறைத்துத் தம் கல்லாவை நிரப்பிக் கொள்ளும். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் நமது வரவேற்பறையில் பலான காட்சிகள் அரங்கேறுவதைப் பற்றி நமக்கு எந்த வருத்தமும் வரப்போவதில்லை. வடுமாங்காய் போன்ற பாடல்களை ஒலிக்க விட்டு குழந்தைகள் ஆடுவதை ரசிக்கும் தவறை நம்மில் யார் செய்யவில்லை? பாலியல் ரீதியான நமது போலித்தனங்கள் களையப் பட வேண்டியதை நாம் உணரப்போவது எப்போது? அதுவரை இதைப் போன்ற சாமியார் களின் கதை நமது ரகசிய ஆசைகளுக்குத் தீனி யாகவே வீசப்படுகிறது.
நித்தி மீது பாய்கிறார் கள். கைது செய்யச் சொல்லிக் கூப்பாடு போடுகிறார்கள். சட்டப் படி அவர் எந்தத் தவறும் செய்ததாகத் தெரிய வில்லை. அவருக்குப் பிடித்த பெண்ணோடு தனியறையில் அந்தப் பெண்ணின் விருப்பத் தோடு இருப்பதில் என்ன பிழை? தனது உடம் பானது அவருக்கான காணிக்கை என ரஞ்சிதா நினைத்திருக்கலாம். இது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களது அந்தரங் கத்தைப் படம் பிடித்து அதை அரங்கேற்றியது ஒரு வகையான ஊடக வன்முறை. ரஞ்சிதா வுக்கும் நித்திக்குமான காதல் கலந்த காம விளையாட்டை கடை பரப்பி தனது டி.ஆர்.பி.யை உயர்த்திக்கொண்டது சன் டிவி. தமிழ்க் கலாச்சாரம் பறிபோய்விட்டதாகப் பதறுகிறார்கள். அப்படியொன்று இருக் கிறதா என்ன? காமத்தை ஒழுக்கம் சார்ந்து பார்ப்பதால் வரும் பிழை இது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி ஏமாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு குறித்து அவர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். சமூகமல்ல.
.......................................
தி.மு.க.வின் சவால் வெற்றி!
பென்னாகரம் இடைத்தேர்தலின் முடிவு கடந்த மார்ச் 31 அன்று அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் வெற்றியை எய்திய இன்பசேகரனின் வாக்குகள் 77,687. அவருக்குப் பின்பு இரண்டாவதாக வந்த பா.ம.க. வேட்பாளர் தமிழ்க்குமரனைவிட 36,402 வாக்குகள் அதிகம்.தொடர்ந்து திருமங்கலம், திருச்செந்து£ர்... இதோ பென்னாகரம் என அடுத்தடுத்து தி.மு.க. வெற்றி வாகையைச் சூடியதோடு எதிர்க்கட்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டேயிருக்கிறது. தி.மு.க.கட்சியின் வளர்ச்சி கூடிக்கொண்டே போகிறது.
அ.தி.மு.க வேட்பாளர் அன்பழகன் பெற்றிருக்கும் வாக்குகள் 26,778. டெபாசிட் டையே இழந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் தோல்விக் கான காரணங்களையும் தம் சரிவிற்கான காரணங்களையும் ஆராய்ந்து கட்சிப் பணிகளை முடுக்கி வருகிறது அ.தி.மு.க.
இத்தொகுதியில் பா.ம.க. வேட்பாளரான ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் முற்றிலும் சாதி மக்கள் கணக்கைக் கொண்டு அவர்களின் ஆதரவை மட்டுமே எடுத்துக்கொண்டு தேர்தலில் நிறுத்தப்பட்டார். எனினும் சாதியின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் மீறி தி.மு.க.வே மீண்டும் வென்றுள்ளது என்பது தமிழக அரசியலில் மற்ற கட்சிகளைவிட தி.மு.க.வின் சமத்துவப் பண்பையே நிலைநிறுத்துவதாக உள்ளது.
தேர்தல் கமிஷனின் தீவிர கண்காணிப்பு, கெடுபிடிகள் மட்டுமன்றி பா.ம.க.வின் அதீத தேர்தல் பணிகளையும் மீறி வெற்றியை ஈட்டியிருக்கிறது தி.மு.க. அக் கட்சியின் சீரிய மக்கள் பணியே வெற்றிக்கு முழுக்காரணம் என்பது இவ் வெற்றி அறிவிக்கிறது.
அய்ந்தாம் முறையாக 2006ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அதனை யொட்டியும் அதன் பிறகும் அறிவித்த திட்டங்களும் சலுகைகளும் ஏராளம் என்பதோடு விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு குறைபாடுகளையும் மக்கள் கருத்தில் கொள்கிறார்கள். ஆனாலும் சமச்சீர் கல்வி, பழைய நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி படித்தோரிடையேயும், உயிரைக் காக்கும் கலைஞர் காப்பீடுத் திட்டம், பாமரரிடையேயும் நல்வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதோடு அடித்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு, இலவச கலர் டிவி, 1 ரூபாய் அரிசி, மலிவு விலை மளிகைப் பொருட்கள் என அவர்களை எளிதில் போய்ச்சேரும் சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது தி.மு.க. அரசு. இது பலவகைகளில் உதவி புரிந்து வெற்றி எய்தி கட்சியின் வளர்ச்சியையும் வருங்காலத்தின் நிலையையும் தெள்ளென விளக்குகின்றதைப் போல் தெரிகின்றன.
பென்னாகரம் இடைத்தேர்தலின் வேட்பாளரான இன்பசேகரனின் வெற்றி தி.மு.க. வுக்குக் கிடைத்த வெற்றிக்கனி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆட்சி மீதுள்ள கனவையும் நம்பிக்கையையும் பின்னுக்குத் தள்ளி அவநம்பிக்கையையும் பயத்தையும் ஏற்படுத்தி யுள்ள துருப்புச் சீட்டு என்பதையே இவ்வெற்றி மீண்டும் அறிவிக்கிறது.
.......................................
அன்பழகன் பட்ஜெட்
தமிழக பட்ஜெட்டை புதிய சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பேரா. அன்பழகன் 2010-11ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய, புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையை 130 நிமிடம் படித்தார்.
‘‘மாற்றுத்திறன் கொண்டவர்கள் நலத்திற்கென தனித்துறை தொடங்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்’’
‘‘யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ள நோயாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும்.’’
‘‘தேனியில் ரூ.10 கோடி செலவில் சிறப்பு அரசு மனநல மருத்துவமனை கட்டப்படும்’’ ஆகிய அறிவிப்புகளையும் அமைச்சர் அன்பழகன் தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.
2010-11-ம் நிதியாண்டில் வரிகள் உள்ளிட்ட இனங்களின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாய் ரூ.63,092 கோடியாக இருக்கும். மொத்தச் செலவு ரூ.66,488 கோடியாகும்.
வணிகச் சின்னம் இடப்பட்ட காபித் தூள் (உடனடி காபித்தூள் தவிர), பெயிண்ட் பிரஷ், வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், கத்தி, கத்திரிக்கோல், கையில் பயன்படுத்தும் ஊசிகள், கொக்கிகள்-பட்டன்கள் போன்ற தையல் பொருள்கள், வணிகச் சின்னம் இடப்பட்ட உடனடி உணவுப் பொருள்கள் (மாவு, பொடி மற்றும் ஈர மாவு உள்பட) ஆகிய பொருள்கள் மீது இப்போதுள்ள 12.5 சதவீத வரி, 4 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.176 கோடியாகும். இத்துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதல் விலை உயர்வு, பதநீர் கொள்முதல் உயர்வு, ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தொடர்ந்து குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை ஊக்குவிக்க, வரும் நிதி ஆண்டில் ரூ.2,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பயிர்க்கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.அரசின் 2010-11 பட்ஜெட் தமிழகத்தை அழிவுப்பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.
செல்வி. ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
தமிழக அரசின் பட்ஜெட்டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது.
டாக்டர். ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர்
நிதிநிலை அறிக்கையில் சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும், மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. சில பொருள்களின் மீது வரிகளை நீக்கியும், குறைத்தும் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒரு மாயாஜாலத்தைப் போல் உள்ளது. உண்மையில் விலைவாசி குறைந்தபாடில்லை.
கேப்டன். விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர்
....................
மீண்டும் பிரபாகரன்!
அக்கினிக் குஞ்சு
‘‘கண்ணுக்கு வெற்றிடமாகத் தோன்றும்... ஆனால் அதைக் காற்று நிச்சயம் நிரப்பும்’’ சீனப் புரட்சியாளன் மாவோவின் புரட்சி மொழிகள் தமிழ் ஈழ மக்களின் நம்பிக்கை மொழியாக இப்போது உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி ஒரே நாளில் ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொத்தாகக் கொன்ற கொடிய சிங்களர்கள்... புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என ஓர் உடலைக் காட்டினார்கள். அதன் பிறகு பிரபாகரனின் குடும்பத்தினர்.... புலிகள் இயக்கத்தின் புலனாய்வுக் கட்டளைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உட்பட புலிகளின் முக்கியத் தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகப் பல தகவல்களைப் பரப்பிவந்தது சிங்கள அரசு.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்றால்... அதற்கான இறப்புச் சான்றிதழைத் தா என இலங்கையிடம் கேட்டது இந்தியா. சில கோடிகள் மக்கள் தொகையே கொண்ட சுண்டைக்காய் தீவு இலங்கை... ஆசியாவின் வல்லரசான இந்தியாவின் கேள்விக்கு இன்னும் பதில் அளித்துக்கொண்டிருக்கிறது. ‘இன்னும் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைக்கவில்லை’ என உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற சி.பி.ஐ.யின் இயக்குனர் சொல்கிறார்.
ஆனால்... ஓரிரு நாளிலேயே அரக்கப் பறக்க யார் மீதுள்ள விசுவாசத்தைக் காட்டும் விதமாகவோ, இதை மறுத்தார் மத்திய உள்துறை அமைச்சர். ஆனால்... மீண்டும், ‘பிரபாகரன் மரணச் சான்றிதழ் வரவில்லை’ என உண்மையை உடைத்திருக்கிறார் சி.பி.ஐ. இயக்குனர்.
இந்த நிலையிலேதான்... சிங்கள, இந்திய கூட்டுச் சதிகளைத் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே... புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸின் ‘வான்ட்டடு’ அறிவிப்பு.
ஆமாம்... சில தினங்களுக்கு முன் இன்டர் போல் வெளியிட்ட ரெட் அலர்ட் தேடுதல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுக் கட்டளைத் தலைவர் பொட்டுஅம்மானைப் பல குற்றங்ளுக்காகத் தேடுகிறோம் என அறிவித்துள்ளது. இதுமட்டுமல்ல... பொட்டு அம்மானோடு சார்லஸ், நவரத்னம் ஆகியவர்களையும் தேடுவதாக இப்போது அறிவித்திருக்கிறது இன்டர்போல்.
உடனே அவசர அவசரமாக பதைத்துப் போன சிங்கள அரசு... ‘ஐயோ பொட்டு அம்மான் தன் மனைவியோடு வயிற்றில் குண்டு கட்டி வெடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தேடுகிறோம் என அறிவிக்காதீர்கள்’ என கெஞ்சிக்கொண்டிருக்கிறது. ஆனால்... அதை இன்டர்போல் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?
‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தான்’’ என்று பழமொழி சொல்வார்கள். அப்படியென்றால் ராஜபக்ஷேயின் வாயால் முட்டாள் என வர்ணிக்கப்பட்ட பொன்சேகாவின் தலைமையில் இருந்த சிங்கள ராணுவமும் முட்டாள் ராணுவம்தானே? கெட்டிக்க்காரன் புளுகுக்கே ஆயுள் கொஞ்ச நாள்தான் என்னும்போது முட்டாள்களின் புளுகுக்கு எத்தனை நாள்? அதுதான் இப்போது ஒவ்வொன்றாய் உடைந்துவருகிறது.
இன்டர்போலின் தேடுதல் அறிவிப்புப்படி பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற உண்மையைவிடப் பல மடங்கு உறுதியாக பிரபாகரன் இருக்கிறார் என்பதையும் இதுவே சொல்லிவிடுகிறது. எனவே இந்த விஷயத்தில் சிங்கள, இந்திய கூட்டுச் சதியை இன்டர்போலின் அறிவிப்பு பொய்யாக்கியிருக்கிறது.
மேலும், இன்டர்போலால் தேடப்படுவோர் பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் சார்லஸ் என்ற பெயர், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனிதானா என்ற கேள்வியும் இப்போது கிளம்பியிருக்கிறது. ஏனென்றால் சார்லஸின் அங்க அடையாளமாக குண்டான உடம்பு வாகு கொண்டவர் என குறிப்பிட்டிருக்கிறது இன்டர்போல்.
ஏற்கெனவே இறப்புச் சான்றிதழ் விவகாரத்தில் தடுமாறும் இலங்கை அரசு, இன்டர்போலின் அறிவிப்பின் மூலம் மேலும் தள்ளாடிப் போயிருக்கிறது. அதற்கு நேர்மாறாக தமிழ் இனத்துக்கு புதிய நம்பிக்கைக் காத்திருக்கிறது! என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இதற்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கின்றன இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள். சிங்கள ராணுவம் அம்பாறை பகுதியில் பல மாதங்களாக முற்றுகையிட்டு பொட்டு அம்மானைப் பார்த்தீர்களா என்று நேரடியாகவே பல பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழ் இளைஞர்களைக் குறிவைத்து காலை முதல் மாலை வரை நடக்கிறதாம் இந்த விசாரணை.
ஆக... சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாக பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என தெரிவித்தாலும்.... தங்களது புலனாய்வுத் துறையினர் மூலம் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொட்டுன் அம்மான் இருக்கிறார் என்றால் பிரபாகரனும் இருக்கிறார் என்பது சிங்கள ராணுவத்துக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த மாவீரர் தினமான நவம்பர் 27 அன்று பிரபாகரன் வருவார் என உலகம் முழுதும் தமிழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வரவில்லை. அதே நேரம் இப்போது சிங்களர்களோ... போர் முடிந்த ஒரு வருட நிறைவான மே 18 அன்று பிரபாகரன் உலகத் தமிழர்களிடையே வருவார் என கருதுகிறார்கள்.
இந்த விரக்தியில்தான் கிளிநொச்சி, வன்னிப் பகுதிகளில் உள்ள புலிகளின் மாவீரர் நினைவுச் சின்னங்கள், தமிழ்க் கோயில்கள் உட்பட தமிழர் களின் பிரதேசங்களை முற்றிலும் சிங்களமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிங்களர்கள்.
இதற்கு உதவி செய்வதோடு தமிழர் இருந்த பகுதிகளில் புத்தர் கோயில்களைத் திறந்துவைத்து வருவது யார் தெரியுமா? ஈழத் தமிழர்களாலும், தமிழகத் தமிழர்களாலும், உலகத் தமிழர்களாலும்... துரோகி, கருங்காலி என அழைக்கப்படும் கருணாதான்.
ஆக நவம்பர் 27ஐ தமிழர்கள் மட்டும் எதிர்பார்க்க... வரப் போகும் மே 18ஐ தமிழர்கள் ஆர்வத்தோடும் சிங்களர்கள் அச்சத்தோடும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
..............................
பெரியார்தாசன் அப்துல்லா ஆனது ஏன்?
ஒரு மதவாதி இன்னொரு மதவாதி ஆவதில் ஆச்சரியமில்லை. பத்தாயிரம் ரூபாய் பணம், ஐம்பது பேரை மதம் மாற்றினால் ஒரு வீடு இலவசம் என இன்றும் மதமாற்ற ஆஃபர்கள் தமிழ்நாட்டில் நடந்துவருகின்றன. பொருளாதாரத்துக்கு ஆசைப்பட்டும், மூளைச் சலவைகளில் முடங்கிப் போயும் பல சராசரி மனிதர்கள் மதம் மாறி வருகிறார்கள். ஆனால்... தனது பெயரில் கூட தன்னை இதுவரை கடவுள் மறுப்பாளராகவே காட்டி வந்த பெரியார்தாசன் திடீரென அப்துல்லா ஆனதில் பல தரப்புக்கும் சந்தேகம், அதிருப்தி, சலசலப்பு. அதுவும் இங்கே எத்தனையோ மசூதிகளும், உலமாக்களும் இருக்க... சவுதி அரேபியா போய் மதம் மாறியிருக்கிறார் மனிதர். இதுபற்றி அவரே இணையங்களிலும், பத்திரிகைகளிலும் விளக்கமும் அளித்திருக்கிறார்.
‘‘பத்து வருடமாகக் குரானை படித்து வருகிறேன். மற்ற மத வேதங்களில் எல்லாம்... கடவுள் சொல்வதாக யாரோ சொல்வது போல இருக்கிறது. ஆனால்.... குரான் மட்டும்தான் கடவுளே நம்மிடம் பேசுவதாக இருக்கிறது. நான் தேடிய ஒரே கடவுள் அல்லாதான்னு நம்பி சேர்ந்துவிட்டேன்’’ என குமுதம் இதழில் விளக்கம் கொடுத்திருக்கும் பெரியார்தாசன்... கூடவே, ‘‘முஸ்லீம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க முயற்சி எடுப்பேன். தர்கா வழிபாடு, சந்தனக்கூடு போன்றவற்றை எதிர்ப்பேன்’’ என்றும் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
அப்துல்லா இப்படி மாய்ந்து மாய்ந்து விளக்கம் கொடுத்தாலும்... அவர் மூன்று திசைகளில் இருந்து கடுமையாகக் கண்டிக்கப்படுகிறார். அவர் இதுவரை இருந்ததாகக் கருதப்பட்ட பகுத்தறிவாளர்கள் தரப்பு, இந்து மத அமைப்புகள், அவர் இப்போது சேர்ந்திருக்கும் முஸ்லிம்களிலேயே சிலர் என மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் அப்துல்லா.
இது பற்றி...
பகுத்தறிவுத் தரப்பில்... ‘‘அவரைப் பற்றி எங்களுக்கு முன்னமே தெரியும். பெரியார் கொள்கைப் பிரசாரத்தை கூட்டங்களில் பேசுவதைப் பல வருடங்களாக நிறுத்திவிட்டு... தனியார் தொலைக்காட்சிகள், வெளிநாடுகளில் பகுத்தறிவு, தமிழ் உணர்வு என்ற பெயரில் பணம் பண்ணி வந்தார். பல வருடங்களாகக் குரானை ஆழ்ந்து படிக்கிறேன் என்று சொன்னவர்.... இத்தனை வருடங்களாகத் தனது பெரியார்தாசன் என்ற பெயரை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை? இன்னும் சொல்லப்போனால் பெரியார்தாசன் என்ற பெயரே தவறு. தாசன் என்ற அடிமை முறையை ஒழிப்பதே பெரியாரின் லட்சியம். இவரோ பெரியாருக்குத் தாசன் என்று பெயர் வைத்துக்கொண்டார். அதனால்தான் பகுத்தறிவு இயக்கத்திலிருந்து வெகுகாலம் முன்னதாகவே அவர் ஓரங்கட்டப்பட்டார். இப்போது அவர் இஸ்லாமியர் ஆகியிருப்பதன் காரணங்களாகச் சொல்வது எல்லாமே நகைப்புக்கு உரியவைதான். பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம் எல்லாவற்றுக்கும் அடிப்படையே கடவுள் மறுப்புதான். ஆனால், கடவுள் மறுப்பு தவிர மற்ற பெரியாரிய கொள்கைகளில் இப்போ தும் உடன்படுவதாகச் சொல்கிறார். இது எல்லா ரையும் ஏமாற்றும் செயல். பகுத்தறிவுவாதிகள், புத்த மதத்தினர் ஆகியோரை ஏமாற்றிவிட்டு இப்போது இஸ்லாமியரை ஏமாற்ற முடிவுசெய்திருக்கிறார் போலும்’’ என கொட்டித்தீர்த்தனர். பகுத்தறிவு வட்டாரத்தில் இப்படி என்றால்... அப்துல்லாவாக சேர்ந்த இஸ்லாமியர்களிடத்திலும் எரிச்சலைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்.
நம்மிடம் பேசிய இஸ்லாம் மதத்தினர் சிலர்... ‘‘பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை இதயந்தழுவி வரவேற்கிறோம். ஆனால்..., அவர் தர்கா வழிபாட்டையும், முஸ்லிம்களின் சில வழக்கங்களையும் புண் படுத்திப் பேசியிருக்கிறார். அவர் புது முஸ்லிம். நாங்கள் நெடுங்கால முஸ்லிம். எது சரி எது தவறு என இப்போதே பெரியார்தாசன் சொல்ல வேண்டிய அவசரம் இல்லை. அவருடன் இது பற்றி நாங்கள் விவாதிக்கத் தயார். ஆனால்... விவாதம் முடிவதற்குள் வேறு ஏதாவது மதத்துக்கு அவர் மாறிவிடாமல் இருக்க வேண்டும்’’ என்கின்றனர்.
இந்து மக்கள் கட்சி தரப்பில்... ‘‘இந்து மதத்தின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் யாராரோ சொல்லியதாம். ஆனால் குரான் மட்டும் கடவுள் சொன்னதாம். அதனால் நம்புகிறாராம். அப்படி என்றால்.... கடந்த 45 வருடங்களாக மூதாதையர்கள் எழுதிய அறிவுச் செல்வங்களான வேதங்களை ஏன் இவர் எதிர்த்தார்? 45 வருடங்களாக கடவுளே இல்லை என்றவர்.... மனிதர்கள் படைத்த வேதங்களை முழுதும் கற்றுவிட்டுத்தான் எதிர்க்கிறாரா? குரான் படித்து முடிப்பதை விட வேதம் படித்து முடிக்க அதிக நாள் ஆகும். எனவே இரு மத வேதத்தையும் ஒப்பிட்டு இந்தியாவின் பெரும்பான்மை மக்களை புண்படுத்தி இருக்கிறார். அவர் இதுவரை தழுவாத மதமில்லை. அதனால் எதையாவது தழுவட்டும். ஏன் மற்ற மதத்தினரை புண்படுத்த வேண்டும்? இனி இஸ்லாமிய பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் அங்கே போயிருக்கிறார். அந்த வேலையை மட்டும் செய்யட்டும்’’ என்கிறார் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கண்ணன். இனி மேடைகளில்தான் அப்துல்லா இவற்றுக் கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டும்!
.......................
33% இட ஒதுக்கீடு... கனவா? தூக்கமா?
மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் பதினான்கு ஆண்டு காலம் வேண்டுமென்றே தூங்கிவிட்டு.... ராஜ்யசபாவில் பல உறுப்பினர்கள் வெளிநடப்புக்குப் பின் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால்... இதை மறைப்பதற்காக... ‘பதினான்கு ஆண்டு கால கனவு நிறைவேறிவிட்டதாக’ சோனியாவுக்கு புகழாரங்கள், பாராட்டுகள்.
ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மூன்றில் ஒரு பங்குடன் நிறைவேறினால்தான் அது நடைமுறைக்கு வரும். ஆனால்.. காங்கிரசின் நடவடிக்கைகளைப் பார்த்தால் பெண்களுக்கு அது தலையணைக் கனவாக போய்விடுமோ என்ற நிலைதான்.
ராஜ்யசபாவில் கடும் அமளிக்குப் பின்னர் 186க்கு 1 என்ற விகிதத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றிவிட்டனர்.ஆனால்... மக்களவையில் பி.ஜே.பி, லாலு பிரசாத், முலாயம் சிங், புதிய தலைவலியான மம்தா ஆகியோரின் எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்ற முடியாது என காங்கிரஸுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான்... ‘ஒத்த கருத்து உருவான பின்னர் மக்களவையில் தாக்கல் செய்வோம்’ என அறிவித்திருக்கிறது. ஆனால் அத்தைக்கு மீசை முளைத்தால்தான் மகளிர் மசோதாவில் ஒத்த கருத்து வர வாய்ப்புண்டு என்பதுதான் டெல்லி நிலவரம்.
ஏன் என்கிறீர்களா?
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கொடுப்பதை உள்ளபடியே காங்கிரஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் விரும்பவில்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் இப்போது மொத்தமுள்ள 543 மக்களவை எம்.பி.க்களில் 181 பேர் பெண்களாக இருக்க வேண்டும். ஆக, 181 தொகுதிகளில் அனைத்துக் கட்சிகளும் பெண்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இதில் எந்தக் கட்சிக்கும் உடன்பாடில்லை. காரணம்... இத்தனை இடங்களை பெண்களுக்குக் கொடுக்க இப்போது அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு மனதில்லை. நடைமுறையிலும் இத்தனை பெண் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு எந்தக் கட்சியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே பஞ்சாயத்து தேர்தல் போல கணவர்களே பின்னால் இருந்து ஆளும் நிலைதான் உருவாகும். இதை ஆண்கள் விரும்பவில்லை. எனவேதான் வெளியில் ஆதரவளிப்பது போல் வேஷம் போட்டாலும் காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் இதை சொத்தையாக ராஜ்யசபாவில் நிறைவேற்றி தங்கள் பெண்ணிய முகத்துக்கு பவுடர் போட்டுக் கொண்டுள்ளன.
பிரதான பெரிய கட்சிகள் இப்படி என்றால் லாலு, முலாயம் ஆகியோர் உள் ஒதுக்கீடு பற்றி சர்ச்சையைக் கிளப்பி அதன் மூலம் மசோதாவை தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர். அதாவது 33% இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என சாதி, மத ரீதியாக உள் ஒதுக்கீடு செய்த பிறகே மசோதாவை நிறைவேற்றவேண்டும். இப்போது இருப்பது போல பொதுவான 33% இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்கள் நிலைப்பாடு. மசோதாவை தடுத்து நிறுத்த இதுவும் ஒரு சாக்குதான் என்பது முலாயமின் சமீபத்திய பேச்சு மூலம் வெளிப்படுகிறது.
அதாவது, ‘பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால், நாடாளு மன்றத்தில் விவாதம் நடக்காது. விசில் சத்தம்தான் கேட்கும். பெண் உறுப்பினர்களைப் பார்த்து ஆண் உறுப்பினர்கள் எல்லாம் விசில் அடித்துக் கொண்டிருப்பார்கள்’’ என தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் முலாயம் சிங். நேற்றுவரை முலாயமின் நண்பராக இருந்து இன்று எதிரியாக மாறியிருக்கும் அமர்சிங், ‘‘இதற்காகவே முலாயம் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சி.பி.எம்.மின் பிருந்தாகாரத் உட்பட பலரும் முலாயமின் ஆணாதிக்கப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியோ,. ‘33% ஒதுக்கீடு பழம் என்றால், அதில் உள் ஒதுக்கீடு என்பது சுளை... பழத்தை வாங்கினால்தான் அதில் சுளை பற்றி பேசமுடியும்’’ என வார்த்தை விளையாட்டு மூலம் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
உள் ஒதுக்கீடு இல்லாமல் மசோதாவை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என இந்த வகையறாகக்ள் கூற... பெண்கள் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் கடுமையாக எதிர்ப்போம் என கிளம்பிவிட்டது பி.ஜே.பி. எனவே, நாடாளுமன்ற மக்களவையில் 33% இடஒதுக்கீடு மகளிருக்கு கிடைக்க பொதுக்கருத்து உருவாகாது என்பதே இப்போதைய சூழ்நிலை.
நாடாளுமன்றத்தில் 33% பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக வாய் கிழியப் பேசும் அரசியல் கட்சிகள்.. தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும்போது 33% இட ஒதுக்கீடு கொடுத்தாலே நிறைய திறமையான பெண்கள் அரசியலுக்கு கிடைப்பார்கள். அதை விட்டுவிட்டு... அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகள் தங்கள் வேட்பாளர்களில் முதலில் 33% பெண்களை நிறுத்தவேண்டும். அதை விட்டுவிட்டு மொத்த தொகுதிகளில் இத்தனை சதவிகிதம் பெண்களுக்கு என்று சொல்வதால் உண்மையான பெண் பிரதிநிதித்துவம் கிடைப்பது அரிதுதான்.
இமயத்தில் உறையும் சிவன் கூட தன்னில் ஐம்பது சதவிகிதத்தை தன் மனைவி யான உமையாளுக்குக் கொடுத்தான். ஆனால்.. நம் அரசியல் கட்சிகளோ தங்களது வேட்பாளர் பட்டியலில் 33% ஒதுக்க யோசிக்கின்றன. இப்போதுதான் தெரிகிறது அரசியல் கட்சிகளின் பெண்ணுரிமை. இது பதினான்கு ஆண்டுகால கனவு அல்ல. நமது பதினான்கு ஆண்டுகால அலட்சியத் தூக்கம்.
................
ஐ.பி.எல்.லில் அவிழ்க்கப்படும் ஆடைகள்
2009ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட இருந்த ஐ.பி.எல். 20 20 கிரிக்கெட் போட்டிகள், லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதால், தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் 12-_ந் தேதி தொடங்கி, இந்தியாவில் 45 நாட்கள் நடக்கின்றன. அவற்றில் 7 போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.
இந்தப் போட்டிகள் நடக்கும் அதே காலகட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கோடிக்கணக்கான மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகள் அவை. இந்த நேரத்தில் இதுபோன்ற போட்டிகளை நடத்தினால் மாணவ மாணவிகளின் கவனம் படிப்பில் இருந்து சிதறும். அதனால் பெற வேண்டிய மதிப்பெண் குறையும்.
இந்தப் போட்டிகளை தேர்வு முடிந்த பிறகு வேறொரு தேதிக்குத் தள்ளி வைக்க உத்தர விட வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
ஹென்றி
திரைப்பட தயாரிப்பாளர்
ஐ.பி.எல் களியாட்டம், சூதாட்டம், போதை போன்ற மிகப்பெரிய அநீதியை சாதாரணமான விஷயமாக்கி, இதன் மீது ஆர்வத்தைத் தூண்டி, புதிய தலைமுறைக்கு ஒரு பேஷனாக்கி போதிக்கிறது.
ஐ.பி.எல்-லில் விளையாடும் வீரர்கள் ஏலம் விடப்பட்டு, அவர்களை வாங்க மிகப்பெரிய நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றது. முதலாளிகள் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பரபரப்பை ஏற்படுத்தி, மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து அதன் மதிப்பைக் கூட்ட சினிமாத்துறையை இதில் ஈடுபடுத்தி, மக்களை ஏமாற்றி லாபம் சம்பாதிக்கிறது. அதுமட்டுமின்றி, ஏகப்பட்ட ஸ்பான்சர்களைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அதோடு சிக்ஸுக்கு ஒரு ஸ்பான்சர், கேட்சுக்கு ஒரு ஸ்பான்ஸர், மொமெண்ட் ஆஃப் சக்ஸஸுக்கு ஒரு ஸ்பான்ஸர் வேறு.
இந்த வருடம் ஐ.பி.எல். அமைப்புக்கு அதிரடியாக 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல். நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
ஐ.பி.எல்.இன் தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணிகளின் இவ் வருட நிறுவன மதிப்பீடு :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பட்டியலில் ரூ.220 கோடி ரூபாயுடன் முதலிடம் பெற்றுள்ளது.
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.210 கோடி - இரண்டாவது இடம்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ரூ.205 கோடி - மூன்றாவது இடம்.
அடுத்த இடங்களில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் ரூ.190 கோடி - 4ஆவது இடம்.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் ரூ.185 கோடி - 5ஆவது இடம்.
டில்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.184 கோடி - 6 ஆவது இடம்.
நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.164 கோடி - 7ஆவது இடம், டெக்கான் சார்ஜர்ஸ் ரூ.156 கோடி - 8 ஆவது இடம்.
இவற்றை விடவும் சமீபத்திய ஏலத்தில் கொச்சி ரூ.1,533 கோடி, புனே ரூ.1,702 கோடி ஆகிய இரண்டு புதிய அணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸோனி ஒளிபரப்புக்கு 10 வருடத்துக்குக் கொடுத்த தொகை 10.4 பில்லியன் டாலர், டி.எல்.எஃப் டைட்டிலுக்குக் கொடுத்த தொகை 5 வருடத்துக்கு 200 கோடி இப்படி எத்தனையோ ஸ்பான்சர்கள். இதை சூதாட்டம் என்றே சொல்லலாம். அணி மற்றும் வீரர்களின் மதிப்பை கூட்டி லாபம் சம்பாதிக்க சில ரகசிய உடன்பாடுகள், ரகசிய தில்லுமுல்லு நடக்காமலிருக்குமா என்ன? வழிமுறைகளையும் அதை அரங்கேற்ற நடக்கும் போட்டிகளுக்குள் வன்முறையும் கொலைகளும்கூட நடக்க வாய்ப்பிருக்கிறது.
அது மட்டுமின்றி, நாடு வாரியாக நடத்தப்படும் பொதுப்போட்டிகள் மாதிரி இல்லாமல் இந்த ஐ.பி.எல்.லில் மாநில வாரியாக அந்தப் போட்டிகளில் சூதாட்டப் போட்டிகளால் இந்த மாஸ் கிரிக்கெட் மாநிலங்களிடையே நிலவி வரும் பகைமை உணர்வு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அணிகளின் மொத்த விலை 1500 கோடிக்கு மேல் இருக்கும் என்கின்றனர். ஏகப்பட்ட ஸ்பான்சர்கள், பரபரப்புகள், நகரங்களில் கூட்டம் குறைந்து விட்டது. அரங்கத்திலும் டி.வி. முன்பும் அமர்ந்துவிட்டனர் பற்பலர். எந்த வேலையையும் தள்ளி வைக்கும், நிராகரிக்கும் உரிமை இந்தச் சமயத்தில் மட்டும்தான் உண்டு. இந்த கிரிக்கெட்டுக்கு அந்த மவுசு உண்டு.
விளையாட்டை விற்பனை செய்து, லாபம் பார்த்து மோசமான கலாச்சார ரசனையைப் புகுத்தி நடத்தப்படும் சூதாட்டத்தைப் பார்த்து பல மாநில மத்திய ஆட்சியாளர்கள், சமூக காவலர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். எதிர்வினைக் கூட நிகழவில்லை ஏன்?
டி.வி. பார்க்கும் ரசிகர்களே பெட் கட்டிக் கொள்கிறார்கள். வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவரைப் பார்த்து கொக்கரிக்கிறார். இவருக்கே முகம் சிவக்கிறது. கூட இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். அங்கே பகைமை கூடுகிறது. அந்த இடத்திலேயே மோதிக்கொள்ள முற்படுகின்றனர். ஆக, வினையே விளையாட்டாகிறது.
ஐ.பி.எல். அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளனர். இதனால் ஏனைய விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது. தடகளத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
‘தங்க மங்கை’ பி.டி.உஷா
ஐ.பி.எல். என்பது விளையாட்டல்ல, வெறும் வியாபாரம். இதனால் கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
வில்சன் செரியன்
முன்னாள் நீச்சல் சாம்பியன்
கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களின் ஒதுக்கீடுகள் மூலம் ஏர் இந்தியா உள்பட நாட்டின் முக்கிய நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்து விடுகின்றனர். இதனை மாற்றி மற்ற விளையாட்டு வீரர்களை அந்த பணியிடங்களுக்கு நிரப்ப வேண்டும். கிரிக்கெட் தவிர ஏனைய சர்வதேச விளையாட்டுக்களையும் ஊக்குவிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
ஒருவர் கஷ்டப்பட்டு வறுமையையும் தாண்டி பல்லாண்டுகள் கழித்து சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற பின்பு விருதுகள் வழங்கும் வழக்கத்தை விட்டுவிட்டு ஆரம்பக் காலத்திலேயே அவர்களுக்கு அரசு பல வழிகளிலும் உதவ வேண்டும். இது போன்ற ஸ்பான்சர்களை ஏற்படுத்தித்தர முனைய வேண்டும்.
வீரர்களை வெளிப்படையாகப் பணம் கொடுத்து வாங்குவதும், விற்பதும் நல்ல தல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும், ஐ.பி.எல். போட்டிகள் வியாபாரத்துக்காக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வணிகமயமாவதை தடுக்க ஐ.பி.எல். போட்டிகளைத் தடை செய்யவேண்டும்.
நிதீஷ்குமார்
பீகார் முதல்வர்
................................
‘கனவு தேசம்’
நூல் வெளியீட்டு விழா
அமெரிக்கா_உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தால், ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கும் விழாவும், கவிஞர் க.கௌ. முத்தழகன் எழுதிய, ‘கனவு தேசம்’ நூல் வெளியீட்டு விழாவும், 7_3_2010 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாண்டிச்சேரியில் உள்ள அண்ணாமலை ஹோட்டலில் சிறப்புடன் நடைபெற்றது.
தொழிலதிபர், கிரானைட் சக்ரவர்த்தி திரு.மிகு. றி.ரி. பவுல்ராஜ் தலைமையில், அமெரிக்கா உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் / வேந்தர். டாக்டர்.
ஷி. செல்வின் குமார் வி.கி.றிலீ.ஞி அவர்கள் கனவுதேசம் நூலை வெளியிட, இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம் (டிரஸ்ட்) _ மாநிலத் தலைவர் ஞிக்ஷீ.றி. மணிவேல் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம் (டிரஸ்ட்), தலைமை நிலையச் செயலாளரும், உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.வி.பொன்முடி அரசு அவர்கள் வாழ்த்திடவும், கவிஞர். க.கௌ. முத்தழகனின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.
.....................
பொதுத் தேர்வுகளும் அவற்றின் நம்பகத் தன்மையும்
செல்லூர் கண்ணன்
பொதுவாகப் பள்ளிகளின் கல்வித்தர அலகாகப் பொதுத்தேர்வு முடிவுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதனால் அரசுப் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் அதிக விழுக்காட்டுத் தேர்ச்சி எனும் இலக்கை நோக்கிப் பயணிக்கின்றன. மாறாகத் தனியார் பள்ளிகள் நூறு விழுக்காட்டுத் தேர்ச்சி மற்றும் உயர் மதிப்பெண் சாதனை ஆகிய இரு நோக்கங்களுக்காகவும் உழைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பயில்வோரில் படிப்பறிவில் குறைந்த ஏழைப் பெற்றோர்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவை தனியார் பள்ளிகளின் சாதனைகளுடன் போட்டியிட இயலாதவையாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில், வகுப்பின் முதல் மாணவனுக்கும் கடைநிலை மாணவனுக்குமிடையே கற்றல் திறனில் பெருத்த வேறுபாட்டைக் காண முடியும். அதனால் அதிக விழுக்காட்டுத் தேர்ச்சி காட்டவே ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இதைக் கல்வித்துறை நன்கு உணர்ந்தே கடந்த ஆண்டினும் மேன்மையான வெற்றிக்காகப் பாடுபடப் பள்ளித் தலைமையாசிரியர்களையும் ஆசிரியர்களையும் அறிவுறுத்துகின்றது. வறுமையில் உழலும் பெற்றோர்கள், இலவசக் கல்வி தரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் தம் குழந்தைகளின் கல்விமுன்னேற்றம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முன்னேற்ற அட்டைகளில் பெரும்பாலும் தாயே ஒப்பமிடல், கைரேகையிடல் வழக்கம். குறைவான மதிப்பெண் பெறும் குழந்தைகள் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கையொப்பம் பெறுவதையே விரும்புகிறார்கள். தந்தையின் கடுமையான போக்கை எதிர்கொள்ள அஞ்சுபவர்கள் முன்னேற்ற அறிக்கையைத் தந்தையின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்வதும் உண்டு.
கல்வி அக்கறை கொண்ட கடுமையான பெற்றோர் களாயின் அவர்கள் தம் குழந்தைகளைக் கண்டித்தும், தண்டித்தும்; படிப்பின் முக்கியத்துவத்தை அறிய வைக்க முயல்கின்றனர். இவ்விருவகைக் குடும்பச் சூழலில் எதுவாயினும் அது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதில்லை. மாறாகக் குறைகளை மறைக்கும் வழக்கத்திற்குக் குழந்தைகளைத் தூண்டுகின்றன அல்லது அவர்களைக் கல்விச் சூழலின்மீது வெறுப்பு கொள்ளச் செய்கின்றன. அதனால் குழந்தைகளுக்கு ஊக்கம் தரக்கூடிய செயல்களை மட்டுமே பெற்றோர்களும் ஆசிரியர்களும் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த வேண்டும். வற்புறுத்தித் திணிக்கப்படுபவை எப்போதும் எதிர்விளைவைத் தருபவைதாம்.
அண்மைக் காலமாகப் பள்ளிக் கல்வியின் நோக்கு பல்லாற்றானும் பரவலாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அது மேலோட்டமான, தேர்ச்சி அடிப்படையிலான கல்வியாக உள்ளதேயன்றி வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க ஆழ்ந்த கல்வியாக அமையவில்லை. குழந்தைகளை மதிப்பெண் நோக்கில் அணுகுதல் சரியான முறையல்ல.
குறைந்தபட்சக் கற்றல் அடைவுகள் எனும் கருத்தைப் பேராசிரியர் தவே தலைமையிலான கல்விக்குழு பரிந்துரை செய்ததற்கு முன்னிருந்த கல்விச்சூழலுக்கும், இன்றுள்ள நிலைக்குமிடையே பெருத்த வேறுபாடுகள் காணப்படுவதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். பொதுத்தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைக் காட்டுவதற்காகப் பள்ளிகள் தற்காலத்தில் அளப்பரிய முயற்சியை மேற்கொள்கின்றன. இது பாராட்டுக்குரியதுதான் என்றாலும், இதிலுள்ள மதிப்பெண் நோக்கு முதிர்ச்சிபெற்ற ஆழ்ந்த கல்வியின் வரையறைக்குள் வரவில்லை என்பதை மறுக்க இயலாது.
மாணவனை அதிக மதிப்பெண் எடுக்க இயல்பவனாக மாற்றத் துடிக்கும் ஆசிரியர், அவனுடைய ஆளுமை வளர்ச்சிக்குத் தடைநிற்கிறார் எனலாம். தன்னாற்றலுள்ள ஒழுக்கமேம்பாடுடைய மனிதனாக மாணவனை உருவாக்கும் கல்வியே சிறந்தது. மாணவனின் தேர்ச்சிக்கு மட்டுமே உழைக்கும் ஆசிரியர் ஒருக்காலும் சிறந்த ஆசிரிய ராகப் பரிமளிக்க வாய்ப்பில்லை. ஆசிரியரின் தேர்ச்சி விழுக்காட்டு நோக்கானது கற்றல் குறைபாடுள்ள மாணவனின் இடை நிற்றலுக்கு வழி வகுக்கும் அபாயத்தை உள்ளடக்கியதாகும் என்பதையும் மறந்து விடலாகாது. மேலும் தேர்வு நோக்கில் மாணவனின் மனத் தில் திணிக்கப்படும் கருத்துகள் தேர்வு முடிந்தபின் விரைவில் முழுவதுமாக மறந்து போய்விடக்கூடியவை. மாணவனுக்கு இதில் நிலைத்த பயன் எதுவுமில்லை. இருந்தும் பெரும்பாலான பள்ளிகள் தேர்வுநோக்குக் கல்விமுறையையே பின்பற்றுகின்றன.
தேர்வுகளின் நோக்கத்தை நம்மில் பலரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அற்றைக் காலத்துக் குருகுலவாசங்களும் திண்ணைப் பள்ளிகளும் மாணவனின் நினைவாற்றல் பயிற்சிக்கு முதன்மை யிடம் தந்தன. அக்காலத்தில் எழுத்துத் தேர்வுகள் இன்றியமையாதனவாகக் கருதப்படவில்லை. மேனாட்டுக் கல்வி முறை அமலாக்கத்தின் பின்னரே எழுத்துத் தேர்வுகள் பரவலாயின. அப்போதும்கூட ஆசிரியர் கற்பித்த கல்வி, மாணவனுக்கு எந்த அளவு போய்ச் சேர்ந்தது என்பதைக் கணக்கிட ஆசிரியர்க்கு உதவும் ஓர் அளவுகோலாகவே எழுத்துத் தேர்வுகள் அறிமுகமாயின.
குறிப்பிட்ட வினாவிற்குப் பெரும்பாலான மாணவர்கள் தவறான விடை எழுதியிருந்தால், அப்பகுதி ஆசிரியரால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதாகக் கொண்டு அப்பாடப்பகுதியை மீண்டும் கற்பிக்கச் சுட்டும் ஏதுவாக அது கருதப்பட்டது. விடைகள் வரிக்குவரி சரிபார்க்கப்பட்டுத் தரப்படும்; மதிப்பெண் ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவதற்கான அலகாகக் கருதப்பட்டதே அன்றி மாணவனின் தகுதியாகக் கருதப்படவில்லை. ஆனால் இன்றுள்ள நிலை தொடக்கக் கால எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் முரணாக உள்ளது. அன்று ஆசிரியரின் கற்பித்தல் திறனுக்கான மதிப்பீட்டு அலகாக இருந்த தேர்வுகள், இன்று மாணவனின் கற்றல்திறனை நிர்ணயிக்கும் அலகாக மாறியிருக்கிறது.
தற்காலத்தில், மாணவன் பெறும் மதிப்பெண்களை வைத்தே அவனது தேர்ச்சி நிலையும் எதிர்காலமும் அமைகிறது. மிக அதிக மதிப்பெண் பெறுபவர் கள் திறமைசாலிகள் எனக் கருதப்பெறுகிறார்கள். ஆனால் தேர்வில் மதிப் பெண் பெறுவதற்கும், அம்மாணவன் தன் திறமையைப் பறைசாற்றி வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை நிலை. மாணவனின் மதிப்பெண் என்பது அவனுடைய விடைத்தாளில் எழுதப் பட்டுள்ளவற்றிற்கு ஆசிரி யர் தன் மனப்போக்கில் வழங்குகின்ற ஓர் அடை யாள எண்ணேயன்றி மாணவனின் செயல்திறன் மதிப்பீட்டுக்கு அது வகைசெய்வதில்லை.
அதனால்தான் பத்தாம் வகுப்பில் மாநிலத் திலேயே முதல் மதிப்பெண் பெறுபவர்களால் அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பின் நடைபெறும் +2 பொதுத் தேர்வில் தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. இவ்விரு காலங் களிலும் மாணவனின் திறமைகள் சமமானவையாக இருந்தாலும்கூட சம விழுக்காட்டுத் தேர்ச்சி என்பது அரிதாக நடைபெறுகின்ற ஒன்றாகவே உள்ளது. ஆக, நம் ஆசிரியர்கள் வழங்கும் மதிப்பெண்களைத் துல்லியமானவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இத்துல்லியமின்மைக்கு ஆசிரியர் மட்டுமே காரணமாகார். தேர்வுமையச் சூழல், விடைத்தாள் திருத்தும் மையங்களில் பொதுவாகப் பின்பற்றப்படும் நெறிமுறைகள் உள்ளிட்டவையும் காரணங்களாக அமைய வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, அனைத்துப் பள்ளிகளும் பொதுத்தேர்வு நடைபெறும் மையங் களாக அமைய வாய்ப்பில்லை. தேர்வு மையமாக அமையாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதுச்சூழலில் ஒருவித அச்சத்துடன் தேர்வுகளை எழுத நேரும்போது, தேர்வுமையப் பள்ளியின் மாணவர்கள் பழகிய சூழலில் தாம் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வை எதிர்கொள்ளும் வசதியைப் பெறுகிறார்கள். இது இயல்பாக தேர்வு மையப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அமைந்த வசதி என்ற கருத்தாக்கத்தைத் தரக்கூடியது.
மேலும், இவ்வகைத் தேர்வு அச்சத்துக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையால் தேர்வுமையம் எதிலும் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுத முடியாத நிலைமையை ஏற்படுத்தப் பள்ளிக்கல்வித்துறை முனைய வேண்டும். அப்போதுதான் அனைத்து மாணவர்களின் தேர்வுச்சூழலும் ஏறத்தாழ சமஅளவினதாக இருக்கும்.
தேர்வு எழுதும் மாணவர்களைக் காட்டி லும் அவர்களின் பெற்றோர்களிடமும் ஆசிரியர் களிடமுமே தேர்வுப் பதற்றம் அதிகமாகக் காணப் படுகின்றது. இம்மாணவர்களில் பெரும்பாலானோர் தேர்வுக் காலங்களில் தேவையான அளவு தூக்கம்கூடக் கிடைக்காமல் அல்லலுறுகின்றனர். மற்ற சில மாணவர்கள் இவர்கள் அளிக்கிற அறிவுரைகளைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போனவர்களாகத் தம்போக்கில் தேர்வைச் சந்திக்கிறார்கள்.
மேலும், கடந்த ஆட்சியில் காட்டப்பட்ட தேர்ச்சியைக் காட்டிலும் கூடுதலான தேர்ச்சியைக் காட்ட அனைத்து வழிகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சகத்தால் கல்வி இயக்ககம் சில நேரங் களில் வலியுறுத்தப்படுவதுண்டு. அதனால் பாடப்பகுதிகளைக் குறைத்து அறிவித்தல், வினாத்தாளைச் சுலபமானதாகத் தயாரித்தல், தேர்வு நடைமுறைகளின் கடுமையைக் குறைத்தல், பொருத்தமற்ற வினாவை வினாத்தாளில் புகுத்திப் பின் அவற்றுக்கும் மதிப்பெண் வழங்குதல், விடைத்தாள் திருத்தும் பணியை வெற்றுச் சடங்காக்குதல், ஓரிரு பாடங்களில் தோல்வி பெற்றவர்களுக்கு உடனடித்தேர்வு நடத்துதல் போன்ற அவலங்களும் அரங்கேற்றமாகின்றன. மாணவன் தன் தகுதியென எதிர்நோக்கும் மதிப்பெண்ணைவிடவும் கூடுதல் மதிப்பெண்ணைத் தர நம் கல்வி அமைப்பு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் நம் குழந்தைகள் பெறும் மதிப்பெண் குறித்து பெருமைப்படவோ அல்லது சிறுமையுறவோ செய்தால் அது நம் அறியாமையே ஆகும்.
..................
சுயமரியாதை இயக்கப் போராளியும் முதுபெரும் எழுத்தாள ருமான குருவிக்கரம்பை வேலு 03.03.2010 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பது.
இளமைக் காலத்தி லிருந்தே சுயமரியாதை இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் களம் கண்டவர். தியாகங்கள் பல புரிந்து சுயமரியாதை இயக்கத்தையும் திராவிடர் கழகத்தையும் வளர்த்தவர்களில் வேலுவும் ஒருவர். குத்தூசியாரின் முழு வரலாற்றையும் படைத்து சாகா வரம் பெற்றவர்.
குருவிக்கரம்பையில் 26.11.1930-_இல் பிறந்த சு.வேலுவுக்கு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. டேவிட் மூலம் பள்ளிக் கல்வியோடு சமூக உணர்வும், திராவிடர் கழகத்தின் மீது ஈர்ப்பும், பெரியாரின் மீது மதிப்பும் ஏற்பட்டது. மேலும் குத்தூசி குருசாமியின் எழுத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
20.8.1953_இல் இராமாமிர்தம் அம்மை யாரைக் கரம் பிடித்தார். பேராவூரணியில் 1963_இல் தந்தை பெரியாரைத் தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்து, தம் மனைவியின் தாலியை அவரின் விருப்பத்தோடு கழற்றித் தரச் செய்து, பகுத்தறிவு இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1963_ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டபோது வேலு அவர்கள் குத்தூசியாருடன் இணைந்தே பணியாற்றினார். 11.10.65 அன்று குத்தூசி குருசாமி அவர்கள் மறைந்த பின்னர் 1970_இல் குத்தூசியாரின் படைப்புகள், அவரைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியவற்றைத் திரட்டி குத்தூசியாரின் மகள் ரஷ்யா, பாவைச் சந்திரன் போன்றவர்களின் ஒத்துழைப்போடு 1975_இல் குத்தூசி குருசாமி வரலாற்றைப் படைத்தார். இதுவரை தமிழில் 22 நூல்களைப் படைத்துள்ளார்.
இறுதி வரை தான் கொண்ட நாத்திகக் கோட்பாட்டிலும், பகுத்தறிவுப் பாதையிலும் தடம் மாறாதவராக இருந்து தன்னுடைய உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்விற்கு பயன்பட வேண்டும் என்று விரும்பினார் என்றால் அன்னாரின் சிந்தனை போற்றுதலுக்குரியது. அம்மாமனிதருக்கு வீர வணக்கம்!
..................
காலவரையின்றி மூடப்பட்டுள்ள சென்னை கவின் கலைக் கல்லூரி
சசிகுமார் என்பவர் முதலாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர். தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சசிகுமார் சிற்பங்களாக ஆக்கிக் காட்சிப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இனவெறியர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை நினைவிற்கொண்டு, தீயாற் சுட இயலாதவாறு தமிழ் இலக்கியங்களைச் சுடுமண் சிற்பங்களாக ஆக்குதல் என்பதான ஒரு கருத்தமைவுடன் இந்தப் பணியைத் துவங்கியதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
இப்படியான ஒரு திட்டத்திற்கு எவ்வித முன் அனுமதியும் அவர் கல்லூரி நிர்வாகத்திடமோ இல்லை செம்மொழி மாநாட்டுக் குழுவிடமோ பெறவில்லை என்கிறார் கலை பண்பாட்டுத் துணை ஆணையர் மணி. ஆனாலும் பொறுப்பு முதல்வர் மனோகர் நடராஜிடம் தான் வாய்மொழி அனுமதி பெற்றதாக சசிகுமார் கூறுகிறார்.
ஏற்கனவே இருந்த முதல்வர் ஓய்வு பெற்றதை ஒட்டி இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மனோகர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைக் காட்டிலும் பணி மூப்புடையவர்கள் இருந்த போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர் முதல்வராக்கப்பட்டுள்ளதாகப் போராடுகிற மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004ஆம் ஆண்டில் இவர் ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
இவர் பணி ஏற்றவுடன் குமார், நடராசன், சுரேந்திரன், சிங்காரம் ஆகிய நான்கு பகுதி நேர ஆசிரியர்களும் நிதி பற்றாக்குறையைக் காட்டி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இந்த நான்கு ஆசிரியர்களும் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆசிரியரல்லாத பணியாளர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் குடந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். எனினும் தற்காலிக பொறுப்பு முதல்வர் ஜெயபாலிடம் இது பற்றிக் கேட்டபோது அத்தகைய உள்நோக்கம் ஏதுமில்லை. நிதிப் பற்றாக்குறைதான் பணி நீக்கத்திற்குக் காரணம். சுரேந்திரன் எம்.எஃப்.ஏ. சேர்ந்ததால் தொடர்ந்து அவர் பகுதி நேர ஆசிரியராக இருக்க இயலாது. ஊழியர்களை இடமாற்றம் செய்ய நேர்ந்தது நிர்வாகக் காரணங்களுக்காகத்தான், பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை ரத்து செய்தோம் என்றார்.
இப்படியான ஒரு சூழலில்தான் சசிகுமார் தனது குறள் சுடுமண் சிற்பப் பணியைத் தொடங்குகிறார். தேவையான களிமண்ணை மனோகரனின் ஒப்புதலுடன் கொண்டுவந்து கல்லூரி வளாகத்தில் இறக்குகிறார். தான் இதற்கு ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் உரிய தொகையை உடனடியாக வழங்க இயலாது எனவும் மனோகரன் கூறியுள்ளார். வண்டிக் கூலியை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சசிகுமார் மாணவர் களிடம் ரூ.5, 10 எனச் சேகரித்து வண்டிக்காரரை அனுப்பியுள்ளார். இதற்கிடையில் சசிகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை என ‘டிசம்பர் 12, 2010’ என்கிற தேதியிட்டு எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அவர் வீட்டிற்கு கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. தொலைபேசியிலும் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். கலக்கமடைந்த பெற்றோர்கள் சசிகுமாரைத் திட்டியுள்ளனர்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சசிகுமார் சென்ற பிப்ரவரி 26 அன்று வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரது கார் கண்ணாடி (கீவீஸீபீ ஷிநீக்ஷீமீமீஸீ)-ஐ உடைத்துவிட்டு ஓடியுள்ளார். இந்தத் தவறை அவர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
எனினும் இது குறித்து தற்போதைய பொறுப்பு முதல்வர் கூறுவது: ‘‘பிப்ரவரி 16ந்தேதி அன்றே அம் மாணவர் கல்லூரிக் கட்டடத்தில் ஒரு கண்ணாடியை உடைத்தார். நாங்கள் புகார் ஏதும் செய்யவில்லை. 19ஆம் தேதி அன்று களிமண்ணுக்காக ரூ.1600 அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த நாள் தேர்வுக் கட்டணம் கட்ட கடைசி நாள் என அம் மாணவர் கூறியதை ஒட்டி அன்று அப் பணத்தைத் தந்தோம். எனினும் 26ந்தேதி அம் மாணவர் கார்க் கண்ணாடியை உடைத்தார்.
பணம் கொடுக்கப்பட்ட பின்னும் ஏன் அப்படி நடந்து கொண்டாய் என நாங்கள் வினவியபோது, ‘செய்த குறள் பலகைகளைச் சுடுவதற்கு சூளை இல்லை என்பதால் சொந்தமாக ரூ.4200 செலவு செய்து சூளை ஒன்று கட்டினேன். அந்தப் பணம் தரப்படவில்லை. தவிரவும் வீட்டுக்கு ஃபோனில் மிரட்டியதால் ஏற்பட்ட மனப்பாதிப்பினால் அப்படி நேர்ந்துவிட்டது’ என்று பதிலளித்தார்.
ஆசிரியர் மனோகரன் பெரியமேடு காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் ஒன்றை அளித்தார். கூடவே அவரைத் தூண்டிவிட்டதாக 2ஆம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்வந்திரன், நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் கமலஹாசன் என்கிற இரு தலித் மாணவர்கள் மீதும் புகாரளித்தார்.
காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இக் குற்றச்சாட்டை விசாரித்துள்ளனர். தற்போது வேறொரு வழக்கில் கொலையாளிக்கு உதவிய தாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் முருசேன் மனோகரது சாதியைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. எஸ்வந்திரனின் தம்பி ஆனந்தகுமார் அதே கல்லூரியில் நான்காமாண்டு பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டுள்ளார். அவரைப் பிடித்து சாதி சொல்லித் திட்டி அடித்த முருகேசன், அவரைக் கொண்டே அவரது அண்ணன் எஸ்வந்திரனை இரவு 1.30 மணி அளவில் கைது செய்து இருவரையும் கடுமையாக அடித்து, சாதி குறிப்பிட்டு இழிவாகப் பேசி இரவு முழுவதும் சங்கிலியால் பிணைத்து காவல் நிலையத்தில் வைத்துள்ளார். ‘‘தேவர் காரோட கண்ணாடியை உடைத்தவன்’’ என முருகேசன் இவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாங்கள் காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபொழுது, முதல்வரின் காரை கொடூரமாக தாக்கியது குறித்து அளித்த புகாரில் எஸ்வந்த், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாலேயே அவர்களைத் தேட நேர்ந்தது எனவும் யாரையும் சங்கிலியால் பிணைத்து வைப்பது தமக்கு வழக்கமில்லை எனவும் மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார்.
அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு ‘‘கார் கண்ணாடியை உடைத்தவரைக் காட்டிக் கொடுத்தேன்’’ என எழுதி வாங்கிக் கொண்டு ஆனந்தகுமாரை விடுதலை செய்துள்ளனர். எஸ்வந்திரன் ‘ரிமான்ட்’ செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சசிகுமார், கமலஹாசன் ஆகிய இருவரும் முன் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
எஸ்வந்திரனும், ஆனந்தகுமாரும் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். எஸ்வந்திரன் தமிழக அளவில் ஒரு முக்கியமான சிற்பக் கலைஞர். அவரும் கமலஹாசனும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவர்கள் என்பதாலும், சில போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத் திருந்ததால் மனோகரின் கோபத்திற்கு ஆளாகியிருந்துள்ளனர். மனோகரன் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு சிலையை மையமாக வைத்து ஒரு இந்து கோயிலை கட்டியதற்காகத் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே தன் பெயரை குற்றச்சாட்டில் சேர்த்தார் என்கிறார் கமலஹாசன். வளாகத்திற்குள் பழைய கிணறு ஒன்றை தூர்க்கும் முயற்சியையும் இவர் எதிர்த்துள்ளார். இதுவும் மனோகரின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது. தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் ‘‘பறப் பசங்களா’’ எனச் சொல்லி மனோகர் கடுமையாகப் பேசினார் என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எஸ்வந்திரன் இக்கல்லூரி மாணவராயினும் சில சிற்பப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போதைய பிரச்சினைகளில் தொடர்பில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாங்கள் மனோகரிடம் கேட்டபோது ஒரு சதம் கூட இதில் உண்மையில்லை என மறுத்தார். தனிப் பயிற்சி நடத்துவது பற்றிக் கேட்டபோது பதவி உயர்வு பெற்றபின் கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதில்லை எனவும், எனினும் தனது மாணவர்கள் சிலர் அவ்வாறு நடத்துகின்றனர் எனவும் கூறினார்.
வழக்குரைஞர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறையுள்ள சிலரின் ஆலோசனைகளின்படி இவ்வாறு சாதி சொல்லித் தாக்கியதற்காகவும் பொய் வழக்கு போட்டதற்காகவும் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறைக்குத் தந்துள்ளனர். எனினும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததோடு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்த உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்டபோது, ஆனந்தகுமார் முதலில் கொடுத்த மனுவில் அதுகுறித்துப் பேசியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவும் பிறகு அளித்த மனுவிலேயே அதைக் கூறியுள்ள தாகவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க றிக்ஷீவீனீணீ யீணீநீவீமீ சான்றுகள் இல்லை எனவும் கூறினார். மாணவர்கள் கதவைத் தாழிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மிகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் திரும்பும்வரை காத்திருந்த மாணவர்கள் சென்ற மார்ச் 22 அன்று முதல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், மனோகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கிடையில் மனோகர் பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் பொறுப்பு முதல்வராக்கப்பட்டுள்ளார். இவர் நுண்கலைத் துறையைச் சார்ந்தவரல்லர். நிர்வாகத்துறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கிய வுடன் பெரிய அளவில் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். இரவில் மாணவிகள் உள்ளே அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை. 23ந்தேதி மாலை 6 மணி வாக்கில் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேரு ஸ்டேடியம் அருகிலுள்ள திடல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு 9 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கல்லூரி மூடிக் கிடக்கிறது.
எமது பார்வைகள்:
1. கலை பண்பாட்டுத்துறைச் செயலரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான வே. இறையன்பு அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபொழுது தான் பதவி ஏற்றபின் 1.86 கோடி ரூபாய் இக் கல்லூரிக்கென ஒதுக்கி, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார். க்ளெய்ன், மெடல் கேஸ்டிங், கம்ப்யூட்டர்கள், சூளை முதலியன தொடர்பாக வேலைகள் நடந்துள்ளதைப் பொறுப்பு முதல்வரும் குறிப்பிட்டார். மாணவர்கள் தன் கருத்துகளை ஏற்கவில்லை எனவும், இது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் துறையைச் சார்ந்ததால் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கல்லூரியைத் திறப்பது தாமதமாகக் கூடாது என நாங்கள் கேட்டுக்கொண்டபோது சற்று நிலைமை சீரானவுடன் கல்லூரியைத் திறப்பதில் தடையில்லை என்றார். மிகவும் விரிவாக எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.
2. பொறுப்பு முதல்வரும், ஆணையர் திரு. மணியும்கூட மிகப் பொறுமையாக நாங்கள் முன் வைத்த ஐயங்களுக்கெல்லாம் விளக்கமளித்தனர். எனினும் சில ஐயங்களுக்கு உரிய விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.
அவை
(வீ) பொதுவாக அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையிலேயே பொறுப்புகள் அளிக்கப்படும். பணி மூப்புடைய வேறு சிலர் இருக்கையில் ஏன் மனோகருக்குப் பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது? கேட்டோம். மற்றவர்கள் மீது புகார்கள் இருந்தன என்றார் ஜெயபால். மனோகர் மீதும் புகார்கள் இருந்து சட்டமன்றம் வரை அது பேசப்பட்டது குறித்து பதிலில்லை.
(வீவீ) எந்த அடிப்படையில் ஒரு சில பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகவில்லை. சுரேந்திரன் என்பவர் எம்.எஃப்.ஏ. சேர்ந்துவிட்டதால் பணியில் தொடர இயலாது என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எம்.எஃப்.ஏ.யில் சேரவே இல்லை.
(வீவீவீ) மனோகர் சாதி சொல்லித் திட்டியது, தனிப் பயிற்சி நடத்துவது குறித்து எதுவும் தமக்குத் தெரியாது என்று நிர்வாகத் தரப்பில் கூறுப்பட்டது.
(வீஸ்) விடுதி மூடப்பட்டதற்குக் காரணமாக மாணவர்களின் நடத்தை சரியில்லை எனக் கூறப்பட்டது. தவறுகள் இல்லாமல் கண்காணிக் கப்படுதல், முறையான வார்டன் ஒருவரை நியமித்தல் - முதல்வர் என்கிற வகையில்தான் பிரச்சினைகள் சமாளிக்கப்படவேண்டுமே ஒழிய அதற்காக விடுதியையே மூடுவது எப்படி?
3. மாணவர் சசிகுமார், தான் முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஆசிரியர்களும் நிர்வாகமும்தான் எந்தத் தவறையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எமது குழுவில் மூவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். கல்லூரிக் கதவுகளை உடைத்தல், ஆசிரியர்களைத் தாக்குதல், ஆசிரியர்களின் வாகனங்களை உடைத்தல், மாணவர்களுக்கிடையே மோதல் முதலான பல சம்பவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். மாணவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை போல அணுகுதல் அவசியம். பொருளியல் ரீதியாகப் பார்த்தால் ஆசிரியருக்கு ஏற்பட்டது கார் கண்ணாடி சேதமானது மட்டுமே. வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் அந்த மாணவனின் வாழ்வே பாழாகிவிடும் என்கிற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கல்லூரி நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் கூட்டம் முதலியவற்றைக் கூட்டி விவாதித்து, அம் மாணவனை தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக்குழு அமைத்து, குற்றத்திற்குப் பொருத்தமான அபராதம் முதலான தண்டனை அளித்து, எச்சரிக்கை செய்து பிரச்சினையை முடிப்பதே வழக்கம். இங்கோ உடனடியாக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதத்துடன் ஆசிரியர் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டியுள்ளார். தொடர்பில்லாத இரு தலித் மாணவர்களையும் புகாரில் இணைத்துள்ளார். அடுத்து நான்கு நாட்கள் கழித்தே (மார்ச் 1) இது தொடர்பாககக் கல்லூரியில் கூடி விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை முற்றியிருக்காது.
4. மாணவர்கள் போராடுவதை ஒழுக்கக் குறைவாகக் கருத வேண்டியதில்லை. போராட்ட காலங்களில் பேசப்படும் சொற்களையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் அத்தகைய போக்கு நிர்வாகத்திடம் உள்ளது.
5. சசிகுமார் இந்த நிலைக்குத் தள்ளப் பட்டதற்குக் காரணம், இது போன்ற மாணவ முயற்சிகள் குறித்த ஒரே சீரான அணுகுமுறை இல்லாததே காரணம்.
எமது பரிந்துரைகள்:
1. அகமதாபாத்திலுள்ள ழிமிஞி (தேசிய வரைகலை நிறுவனம்) போல பெருமை மிகு நிறுவனமாக வளர்ந்திருக்க வேண்டிய கல்லூரி இது. மாற்றாந்தாய் அணுகல் முறையுடன் அரசு நடந்து கொண்டு வந்துள்ளதே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அக்கறையுள்ள முதல்வர் கலைஞர் மற்றும் நாடறிந்த எழுத்தாளரும் நிர்வாகியுமான இறையன்பு ஆகியோரின் துறையைச் சார்ந்த இந் நிறுவனம் போதிய நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகள் நீக்கப்பட்டு இந்திய அளவில் தரமான ஒரு நுண்கலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட வேண்டும்.
2. ழிமிஞி முதலான நிறுவனங்களின் தரநிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்பட்டு, எல்லோருக்கும் ழிமிஞி ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும்.
3. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் விடுதி திறக்கப்பட வேண்டும். கல்லூரிக்குள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
4. மூடிக் கிடக்கும் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.
5. பிப்ரவரி 26ந்தேதி நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.
6. கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத தலித் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டி, சங்கிலியால் பிணைத்து அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
7. சமீபத்திய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட உள்ளதை வரவேற்கிறோம். அந்த ஆணையத்தின் விசாரணை எல்லை கீழக்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்.
(வீ) 26ந்தேதி நிகழ்வை நோக்கிப் படிப்படியாக இட்டுச்சென்ற சூழல் அடையாளம் காணப் படுதல்.
(வீவீ) பணி மூப்பு புறக்கணிக்கப்பட்டு மனோகர் பொறுப்பு முதல்வராக்கப்படுதலின் பின்னணி.
(வீவீவீ) கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத மாணவர்கள் மீது புகார் சொல்லப்பட்டது மற்றும் அவர்கள் இத்தனை மூர்க்கமாக நடத்தப்பட்டது ஆகியவற்றிற்குப் பின்புலம் ஏதும் இருந்ததா எனக் காணுதல்.
(வீஸ்) மனோகர் மீது 2004இல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தொடர்ந்து அவர் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டார் என மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்தல்.
குறிப்பாக கார் கண்ணாடி உடைக்கப்பட்ட அன்று அவர் சாதி சொல்லித் திட்டியது குறித்த புகாரில் கையொப்பமிட்டுள்ள மாணவர்கள் விசாரிக்கப்படுதல்.
(ஸ்) பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட பணி நீக்கங் களில் பின்னணி ஏதும் உள்ளதா என ஆராய்தல்.
(ஸ்வீ) ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துதல், ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செயல்படுத்துதல் ஆகியன எந்த அளவிற்குக் கல்விப் பணிகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்தல்.
(ஸ்வீவீ) ஆசிரியர்களுக்கிடையே உள்ள குழு மனப்பான்மை மாணவர்களின் கல்வியைப் பாதித்தல் குறித்து ஆராய்தல்.
8. தனிநபர் ஆணையம் அளிக்கும் பரிந் துரையின் அடிப்படையில் குற்றமிழைத்த வர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதற்கு நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.
9. தனிநபர் ஆணையம் அமைக்கும்போது அந்த நபர் சமூகநீதியில் அக்கறையுள்ளவராகவும் நடுநிலையோடு இருப்பவராகவும் இருப்பது அவசியம்.
சென்னை நகரின் பழம்பெருமை மிக்க கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராடுவது, அதைத் தொடர்ந்து காலவரையறையின்றி அக்கல்லூரி மூடப்பட்டது ஆகியவற்றைக் கண்டு கவலையுற்ற சமூக அக்கறைமிக்க மனித உரிமை ஆர்வலர்கள் உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து வெளியிட்ட அறிக்கை.
உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் : பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், முனைவர் பா. சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கல்லூரி. பேரா.மு. திருமாவளவன், முன்னை பொறுப்பு முதல்வர், அரசு கல்லூரி. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி, அயன்புரம் இராசேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே. குட்டி ரேவதி, கவிஞர், உதயம் மனோகரன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், முருகன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், சுகுமாரன், தொழிலாளர் ஒற்றுமை முன்னணி, சென்னை, வெங்கட், ஆய்வு மாணவர், எம்.ஐ.டி.எஸ், சென்னை.
..................
இரண்டு கவிதைகள்
ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு,
தொடர்ச்சியாக கிடைக்கும் குறும்பட விருதுகள், கவிதை மற்றும் மிகப்பெரிய கவிதை வாசிப்பு நண்பர்கள் வட்டம், இயக்குனர் முயற்சி என வேலை பளுவில் இருக்கும் லீனா மணிமேகலை உலகின் அழகிய முதல் பெண் என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த சர்ச்சை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அந்த கவிதைகள் சில இங்கே இடம் பெறுகிறது.
1
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
2.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
நன்றி: மணல் வீடு
...............
தண்டனை மேலும் தண்டனை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றதில் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் நளினி. மேலும் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆயுள் (வாழ்நாள்) தண்டனை என்பதை பதினான்கு ஆண்டுகளைக் கடத்திய கைதிக்கு நீதியின் விதிப்படி கருணையின் அடிப்படையில் விடுதலை அளிக்கலாம் என்கிறது சட்டம். ஆனால் அது பற்றி மனு அளித்தும் கவனிக்கப்படாமல் பதினெட்டு ஆண்டுகளையும் கடந்தும் தண்டனையை அனுபவித்து வருகிறார் நளினி. நளினியின் தண்டனை நீடிப்பது ஏன் என்று தமிழ் சான்றோர்கள், மனித உரிமையினரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
பல்வேறு காரணங்களுக்கிடையிலும், கொலை யுண்ட ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா நளினியைச் சிறையில் சந்தித்தது நளினியின் விடுதலைக் குறித்து சிறிது நம்பிக்கையை அளித்தது என்றே கூறலாம். ஆனால் நடந்தது என்னவோ வேறு.
பதினெட்டு ஆண்டுகளைக் கடந்தும் தண்டனையை அனுபவித்துவரும் நளினி, தன் குழந்தைக்காகத் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தனது விடுதலையை நிராகரித்த ஆலோசனைக் குழு, சரிவர உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சென்ற மார்ச் 11ஆம் தேதியன்று தமிழக அரசால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நளினியை விடுவிக்காததற்கு எட்டு காரணங்களை அடுக்கியுள்ளது குழு. அவை,
1. நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளி களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
2. நளினியின் மனப்பான்மை மாற வில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
3. நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்து தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம்.
4. நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடம். அமெரிக்கத் தூதரகம் போன்ற முக்கிய மானஅலுவலகங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கி னால் சட்டம் _ ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும்.
5. ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
6. 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
7. இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவை களை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியேஅவரை விடுதலை செய்ய முடியாது.
8. அவரைப் பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.
இதில் கூறப்பட்ட காரணங்களுள் ஒன்று ‘நளினியின் மனப்பான்மை இன்னும் மாறவில்லை’ என்று மனநல மருத்துவர் அளித்த சான்று. அவர், நளினியை விடுதலை செய்ய லாம் என்று உறுதியாகக் கூறவில்லையாம். அதோடு மத்திய புலனாய்வுத்துறை விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றவர் பொது மன்னிப்பிற்கு உடையவர் அல்லர் என்றும் தெரிவித்துவிட்டது. எனவே மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம்.
பல லட்சம் தமிழர்களைக் காவு கொண்ட ஈழப்போரைக் கண்டும் காணாது தம் ஆட்சியை ஏகபோகமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு நளினியின் விடுதலையை எங்கே கருத்தில் கொண்டுவிடப்போகிறது?
நளினி விடுதலை என்பது அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து, வேறு எவ்வித வழியும் இல்லாமல் தண்டனையை அனுபவிக்கும் நளினி, மேலும் கடந்த 13ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார். சட்டம் என்ன பதில் சொல்லப் போகிறது?
................
விளிம்பின் மையம் தேடும் மொழி
நூலின் ஆசிரியரான ந.சீனிவாசன் ஒவ்வொரு கவிதையிலும் ஏதோ ஓர் தேடலை உள்ளடக்கியே கவிதை புனைந்துள்ளார். அத்தேடலானது அலையின் தேடலையொத்த அவாவோடு தான் தொக்கி நிற்கிறது. இக்கவிதை நூலினை வாசிக்கும் அனைவரிடமும் தொக்கி நிற்கும் அத்தேடலின் தாக்கத் தினையே ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது ஒவ்வொரு கவிதை வரியும்.
நூலின் தொடக்கத்திலேயே தாம் வணங்கும் கடவுளுக்கு எழுத்துக்களாலான மாலையைச் சூட்டுவதோடு, மாணவர்கள், கல்வியைப் போதிக்கின்ற ஆசிரியருக்குச் சரியான மரியாதையைச் செலுத்தாத இக்காலத்தில் தமக்கு கல்வியும் ஒழுக்கமும் போதித்த குருவுக்கு முன்னுரிமை தந்துள்ளமை கவிஞரின் மீது நமக்கு மரியாதையையே ஏற்படுத்துகிறது.
இக்கவிஞரின் கவிதைகளில் துளிர்த்தோடும் மனிதநேயமும், மாண்பும் நூலை வாசிக்கும் அனைவரையும் அதே உணர் வோடுதான் அக்கவிதைகளை அணுகச் செய்கிறது. வேலை தேடிக் காத்திருப்போராகட்டும், தாம் பிறந்த மண்ணை விடுத்து வாழ்வின் தேவைக்காக அயல்நாடுகளில் வாழ நேர்ந்தவர்களின் துன்பமாகட்டும் எதுவொன்றுமே நம் உணர்வுகளை அசைத்துவிட்டுத்தான் கடந்து செல்ல முடிகிறது.
‘‘உன் உணவில் பங்குபோடும்
காகம் போல்
உன்னோடு பேசிடும்
கிளியைப் போல்
உன்னோடு விளையாடும்
ஆட்டுக் குட்டிபோல்
என்னையும்
சேர்த்துக்கொள்வாயா?’’
என்று பிரிய நேரிட்ட தம் மழலையிடம் இறைஞ்சும் தந்தையின் சோகத்தைக் கவிதையில் காணும்போது இக்கவிஞரின் உணர்வு, அக்குழந்தையைவிட மென்மையானதாக மாறி நம்மையும் சோகமூட்டுவதாகவே உள்ளது.
காதலைப் பற்றிப் பேசும் கவிதைகளும் சில இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கவிஞரின் காதல் மொழி ‘ஒருமுறை வந்தால் திரும்பிச் செல்லாது’ என புதிய கண்ணோட்டத்தோடும் வலியோடும் கடக்கிறது.
ஆங்காங்கே ஓரிரு எழுத்துப் பிழைகள் காணப்படினும் நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் செவ்வனே அமைக்கப்பட்டு இந்நூலுக்கு சிறப்பையே தந்துள்ளது.
கரையைத் தேடும் அலைகள்; ந. சீனிவாசன்; குறிஞ்சி வெளியீடு; வாடிமாநகர், கொத்தமங்கலம் (அஞ்சல்), ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை - 614 624. விலை ரூ.50
...................
தமிழ் சினிமா செய்திகள்
சூர்யா ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார் கமல் மகள் ஸ்ருதி. ஏற்கனவே இந்தி, தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
இந்தி கஜினி வெற்றிக்குப் பின் இப்படத்தை முருகதாஸ் இயக்குவதால் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
தமிழில் முன்னணியில் இருந்த நடிகை அசின் ‘கஜினி’ மூலம் இந்திக்குப் போனார். அப்படம் வெற்றிகரமாக ஓடியதால் ஒரே படத்திலேயே அங்கு நம்பர் ஒன் நடிகையானார். கஜினி ஹீரோ அமீர்கானை அசின் காதலிப்பதாக கிசுகிசுக்களுக்கு இருவரும் அவசரஅவசரமாக மறுத்தனர்.
இதற்கிடையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேசை அசின் காதலிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள பைவ் ஸ்டார் ரெஸ்டாரண்டில் தனியாக சந்தித்து நெருக்கமாக உட்கார்ந்து பேசியுள்ளனர்.
நயன்தாரா தமிழில் ஆர்யா ஜோடியாக ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘சிம்கா’ மற்றும் பெயரிடப்படாத மலையாள படமொன்று என மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபுதேவாவுடனான காதல் ‘கிசுகிசு’க்களும் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் தற்போது பேட்டியளித்துள்ள நயன், காதல் திருமணத்தை நான் எதிர்க்க மாட்டேன். பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு ஒரு வேளை காதல் திருமணம் நடந்தால் அது என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணன் போன்றோரின் சம்மதத்துடன் தான் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்குத்தி அணிந்ததில் கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கினார்கள்.
ஆரம்பத்தில் வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என் பெற்றோர் என்னை நம்புகிறார்கள். சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக்க பழகிக்கொண்டேன் என்றார் தத்துவத்தோடு.
இந்தி ‘காட்டா மீட்டா’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா, கமலின் புதுப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்த தன்னையொத்த பல நடிகைகள் காணாமல் போய்விட்டனர். ஆனால் திரிஷா கடந்த ஒன்பது ஆண்டுகளாக சினிமாத்துறையில் நிலைத்து நின்று புகழை அடைந்து வருகிறார். இதற்கான காரணமாக ‘நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால்தான் பட உலகில் 9 ஆண்டுகள் நிலைத்து நிற்பதாக’க் கூறுகிறார். தன்னைப் பற்றிய கிசுகிசுக்கள் வரும்போது குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து படித்துச் சிரித்துவிட்டு பிறகு அதை மறந்து விட்டு வேலையைத் தொடர்வதால் இத்துறையில் நீடிக்க முடிகிறது என்றும் கூறுகிறார்.
சிக்கல்களில் மாட்டினால் கடவுளையும் அம்மாவையும் மட்டுமே நம்புவதாகவும் அவர்களே அச்சிக்கலில் இருந்து வெளியே கொண்டு வருவார்கள் என்றும் கூறுகிறார். பிழைக்கத் தெரிந்த பிள்ளை.
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் முன்னணி நடிகராக உள்ளார். ‘காஞ்சிவரம்’ படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
பிரகாஷ்ராஜ்_போனிகபூர் இடையே மீண்டும் உறவு வலுத் துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்களாம். விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்துக்கு போனி கபூர் வீட்டில் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சமரசமாகி பச்சைக்கொடி காட்டியுள்ளனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கிறது.
ஸீ
....................
மே 1-15, 2010
தலையங்கம்
சட்டத்தின் துணைகொண்டே நாட்டின் ஒழுங்கமைப்பு நேர்க்கோடென செயல்படுகிறது என்று நம்பப்படுகிறது. அந்த நேர்க்கோடு சற்றே தடம் மாறினாலும் பிரச்சினைகளைத் துணிச்சலாக முன்னெடுத்து மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைப்பவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அண்மையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற சம்பவம் சனநாயகத்தின் மீதான நம்பிக்கை குறித்த சலனத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது.
கடந்த 25.4.2010 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழ்நாட்டின் முதல்வர் உரையைத் தொடங்கியபோது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் சுமார் பத்துபேர் கருப்புக்கொடியுடன் அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது காவல்துறையினர் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அங்கு பார்வையாளர்கள் பலர் எழுந்து காத்திருந்ததைப் போல ஆக்கோரஷமாகத் தாக்குதலில் ஈடுபட்டு சம்பவத்தைப் படம்பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும் தாக்கியிருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தொண்டர் களுக்கும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினருக்கும் இந்தச் சம்பவம் முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற எண்ணம் எப்படித் தோன்றாமல் போயிற்று? அது மட்டுமன்றி தனது கருத்தைப் பலமாகப் பதிவு செய்ய விரும்பிய தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர்கள் மீது அதிரடியாகப் பல பிரிவுகளில் வழக்குகள் தொடர்ந்து சிறையில் தள்ளியுள்ளது காவல்துறை.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட செய்தியைக் கூட ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்ற பெரும்பான்மை ஊடகங்களும் வெளியிட முன்வரவில்லை. பத்திரிகையாளர் சங்கங்களும் எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோசமான சூழ்நிலை பத்திரிகையாளர் மற்றும் மீடியாக்களில் பணிபுரிபவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இது சமூகக்கேடான செயலாகும். இந்த நிலை மாற வேண்டும்.
.......................
அரசின் நரித்தனங்கள்
நல்ல தம்பி
கடந்த ஏப்ரல் 16 அன்று இரவு 10.45 மணிக்கு மலேசிய நாட்டிலிருந்து விமானம் மூலம் மருத்துவச் சிகிச்சைக்காக பார்வதி அம்மாள் சென்னை வந்தார். ஆனால் வந்த விமானத்திலேயே புறப்படும் வரை காத்திருக்கச் செய்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
எவ்வளவு கொடிய செயலைச் செய்திருந்தாலும் குற்றவாளிக்கு மட்டுமே தண்டனை என்று சட்டம் சொல்கிறதே தவிர அவரின் பெற்றோருக்கும் சேர்த்தே தண்டனை என்று கூறவில்லை. பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு தண்டனை என்று சட்டமுள்ள தமிழகத்தில்தான் விடுதலைப் போராளியும் ஈழத்தமிழருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் மருத்துவச் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வந்து, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற கொடிய செயலும் நடந்துள்ளது. இது தமிழராகிய நம் அனைவரையும் எரிச்சல்படுத்திய நிகழ்வு. எத்தனை ஊழல்கள், அராஜகங்கள், கற்பழிப்புகள், கொலைகள் தினம் தினம் நடந்துக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் குற்றமற்றவர்களா என்ன? பயணத்திற்கு அனுமதித்து விசா வழங்கியது ஒரு குற்றம். பார்வதி அம்மையாரின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டது மற்றொரு குற்றம். அதைக் கேடயமாகப் பயன்படுத்தி பெரிய போராட்டமாக மாற்றாமல் பேச்சுவார்த்தையாலேயே சாதிக்கக் துடித்த முறை மற்றொரு குற்றம். (இது பிரபாகரன் கற்றுக் கொடுத்த பாடம் என்பார்கள்).
ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசும் அத்தனை கட்சிகளும் பார்வதி அம்மையாரை அனுமதிக்கச் சொல்லி ஏன் கூட்டாக முதல்வரை வலியுறுத்தவில்லை, நிர்பந்திக்கவில்லை? ஈகோ காரணமா? இல்லை தலைவர் தூக்கம் கெட்டுவிடும் என்ற நினைப்பா? இல்லை தலைவர் தவறாக ஏதும் நினைத்துக்கொள்வார் என்ற காரணமா?
‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெயர் பெற்ற தமிழ்நாட்டில்தான் இத்தகைய அவமதிப்பு ஒரு தமிழ்த் தாய்க்கு நிகழ்ந்திருக்கிறது. இது தமிழர் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்கும் செயல்.
2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் காரணமாகப் பல நாடுகளில் வசித்த ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பினர். அதையொட்டி திருச்சியில் வசித்து வந்த வேலுப்பிள்ளை--_ பார்வதி தம்பதியினர் இலங்கைக்குச் சென்றனர். அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு, இலங்கைச் சென்ற அவர்கள் மீண்டும் தமிழகம் வந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்ற மத்திய அரசு அவர்களுக்கு இந்தியாவில் நுழைய தடையாணை விதித்தது. அந்தத் தடையாணையால் தான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மையாரை தமிழகத்திற்குள் நுழைய மறுத்திருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.
80 வயது வயோதிகத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட ஒருவர் மருத்துவ சிகிச்சைக் காகத்தான் வருகிறார், அவர் பிரச்சாரத்திற்கோ ஆயுதங் களுடனே வரவில்லை. வாத நோய் தாக்கப்பட்டு அவஸ்தைப்படும் அவரைத் திருப்பி அனுப்பியிருப்பது என்பது மத்திய, மாநில அரசுகளின் ஈவு இரக்கமற்ற தன்மையையே காட்டுகிறது.
வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண்ணிலா பக்கவாத நோயுற்று வாடும் ஒரு முதியவரை அலைக் கழித்து, அல்லல்படுத்தி அழவைக்கிறோம் என்ற கேள்வி உறுத்துகிறது.
அயல் தேசமான பாகிஸ்தானி லிருந்தே சென்னை வந்து மருத்துவச் சிகிச்சை பெற்று உடல்நலத்துடன் நாடு திரும்புவதைப் பற்றி புகழ்ந்துகொள்ளும் நாம், தொப்புள்கொடி உறவான ஒரு தமிழ்த் தாய்க்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்திற்குள் அனுமதிக்காமல், அம்மையாரை அவஸ்தைகளுக்கு ஆட்படுத்தும் கொடுமையையும் தமிழ்நாட் டில்தானா நிகழ்த்த வேண்டும்.
முறையான விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பார்வதி அம்மாள் எந்தவிதக் காரணமும் இல்லாமல், விமானத்தை விட்டு இறங்கக்கூட அனுமதிக்கப் படாமல், திருப்பி அனுப்பப் பட்டதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அல்லது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 19 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவரும் நளினி, விடுதலைக்காக மேல்முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்வதிஅம்மையாரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதன் பொருட்டு கண்டனக் கணைகளால் தாக்குண்ட ஆளுங்கட்சியினர், மீண்டும் நளினியின் பிரச் சினையை கையிலெடுத்து பரபரப்பாக்கியுள்ளனர். அவர் சிறையில் செல்ஃபோன் வைத்திருந்ததாகக் கூறி மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி நாமே தொடர் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தால் வெறிபிடித்த ராஜபக்ஷேவின் மனநிலை எப்படி இருக்கும். அவரின் ராணுவம் தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கும் என்ற கேள்வியை இதைச் செயல்படுத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
.......................
தமிழனை வஞ்சிக்கும்
இந்திய சினிமா!
இந்திய சினிமா!
அக்னிகுஞ்சு
‘‘இலங்கை மிகப் பெரிய இதயம் கொண்ட நாடு... அவர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்’’ இப்படியாக இந்த நூற்றாண்டின் மிக அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருப்பவர் யார் தெரியுமா? இந்தி சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன்தான்.
பள்ளிக் குழந்தைகள் மேல் குண்டு போட்டுக் கொன்ற, தமிழச்சியின் கர்ப்பத்தில் இருக்கும் கரு கூட தமிழனாய்ப் பிறந்துவிடக்கூடாது என கொடூர எண்ணத்தில் பிள்ளைதாச்சி தமிழச்சிகளை பார்த்துப் பார்த்துக் கொன்ற, ஒரே நாளில் ஐம்பதாயிரம் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக கொன்று புதைத்துவிட்டு இன்று வரை அதை உலகத்தின் கண்களில் இருந்து மறைத்துக்கொள்ள முயற்சி செய்கின்ற....
இப்பேர்பட்ட ரத்தக் காட்டேரி ராஜபக்ஷேவின் இலங்கையைத்தான் ‘மிகப் பெரிய இதயம் கொண்ட நாடு’ எனச் சொல்லியிருக்கிறார் அமிதாப் பச்சன்.
அமிதாப் சிறந்த நடிகர். இதை அவராக பேசினாரா அல்லது தனது தொழில் புத்திப்படி யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை உச்சரித்திருக்கிறாரா என்றெல்லாம் கேள்விகள் கிளம்பின.
இந்த நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன், ‘இலங்கைக்கு போகக் கூடாது’ என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் இயக்குனர் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர். மும்பையிலுள்ள அமிதாப்பின் வீட்டுக்கே போய் தங்களது எதிர்ப்பை தெரிவித்த அவர்களிடம் ‘நான் தமிழர்களின் உணர்வைப் புரிந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார் அமிதாப். அதையே தனது பிளாக்கிலும் எழுதியிருக்கிறார்.
இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப் போடு இந்தியத் திரையுலகம் சேர்ந்து நடத்தும் மிகப் பெரிய வர்த்தகத் திருவிழாதான் இந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா. ஹாலிவுட்டுக்கு எப்படி ஆஸ்காரோ அப்படித்தான் இந்தியத் திரையுலகுக்கு இந்த விழா. இந்தியாவின் சந்தையையும், இந்திய அரசின் தார்மீக ஆதரவை வேண்டியும் பல வெளிநாடுகள் தங்கள் நாட்டில் இந்த விழாவை நடத்த போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் சென்ற வருடம் இந்த விழா இங்கிலாந்தில் நடந்தது. இதையடுத்து, அந்நாட்டின் குறிப்பிட்ட மாநிலத்தின் சுற்றுலா வருமானம் கணிசமாக அதிகரித்ததாம்.
இந்த நிலையில்தான்... சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் பல நாடுகள் நடத்த போட்டி போட இந்த வருடம் திடீரென இலங்கைக்கு கிடைத்திருக்கிறது இந்த வாய்ப்பு எப்படி என்பதுதான் கேள்வி?
கடந்த வருடம் மே 17, 18 தேதிகளில் பூமி உருண்டையில் எங்கும் நடக்காத வகையில் சுமார் ஐம்பதாயிரம் தமிழர்களை போர் என்ற போர்வையில் ரசாயன மற்றும் நவீன குண்டுகளைப் போட்டு பொசுக்கிக் கொன்றது இலங்கை. கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழர்கள் மீது சிங்களம் ஏவி வந்த கொடூர வன்முறை வெறியாட்டங்களின் உச்சகட்டமாக இந்த எம தாண்டவத்தை இந்தியா உட்பட உலக நாடுகளின் உதவியோடு ஆடி முடித்தார் ராஜபக்ஷே.
எத்தனை நாளைக்குத்தான் இந்த கொடூர மான ரத்தக்கறையை மறைக்க முடியும். பல மனித உரிமை அமைப்புகளாலும் இலங்கையின் போர்க் குற்றங்கள் சர்வதேச அரங்கில் அம்பலமாகி வருகின்றன. இதனால் உலக அளவில் கிடைக்க வேண்டிய பல பொருளாதார உதவிகள் இலங்கைக்குக் கிடைக்காமல் நழுவி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு கொடுத் திருந்த வரிச்சலுகையை ரத்து செய்தது இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.
தனது மனித உரிமை யற்ற கொடூர முகம் உலக அரங்குகளில் கிழிவதால் தான் இதுபோன்ற பொருளாதர உதவிகள் தடைபடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டுள்ள இலங்கை.... ‘நான் நல்லவன் தான். என் நாட்டில் எந்த மனித உரிமை மீறலும் நடக்கவில்லை’ என உலகத் திடம் நடித்து ஷோ காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நடிப்பை எங்கே கற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கைச் சரியாகக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
உலக அளவில் புகழ்பெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவைக் கொழும்பில் நடத்தினால் உலகத்தின் கவனம் தன் பக்கம் திரும்பும். அதன் மூலம் நமது போர்க் குற்றங்களை மறைத்து உலக நாடுகளின் உதவியைப் பெற்றுவிடலாம் என்பது இலங்கையின் கணக்கு. இலங்கையின் இந்த ஆசையை கேட்காமலேயே நிறைவேற்றியிருக்கிறது இந்தியா. அதன் விளைவுதான் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைக் கொழும்பில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் நடத்த இருக்கிறார்கள்.
இதன் விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டிருக்கும் அமிதாப் விழா ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக சமீபத்தில் இலங்கை சென்று ராஜபக்ஷேவை பார்த்துவிட்டுத்தான் ‘இலங்கை மிகப்பெரிய இதயம் கொண்ட நாடு’ என சொல்லியிருக்கிறார். இலங்கையில் மனித உரிமைகள் ஏதும் நடக்கவில்லை எனத் திரும்பத் திரும்பக் கூறும் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கும் அமிதாப்பின் வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைய தமிழ் திரைப்பட உலகத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்தான். அவர்களது பொருளாதார உதவிகளால்தான் தமிழ் நட்சத் திரங்களும், சினிமா அதிபர்களும் செல்வத்தில் கொழிக்க முடிகிறது. வெளிநாட்டு ரைட்ஸ் என பெரும் அளவுக்கு விற்று நிம்மதிப் பெருமூச்சு விட முடிகிறது.
இந்தி சினிமாக்காரர்கள் தான் இந்திய அரசின் எடுபிடியாக மாறி கொழும்புக்கு காவடி தூக்குகிறார்கள். ஆனால் ராமேஸ்வரம் வரை போய் போராட்டம் எல்லாம் நடத்திய தமிழ் சினிமாக்காரர்களுக்கு எங்கே போயிற்று இன உணர்வு. இன்னும் சொல்லப் போனால் இந்தி சினிமா உலகின் டாப் டென் ஒளிப் பதிவாளர்களில் எட்டு பேர் தமிழர்கள்தான். இசை மூலம் இந்தியாவுக்கு ஆஸ்கர் மாலை சூட்டிய ஏ.ஆர்.ரகுமான்கூட தமிழர்தான். அவர்களாவது ஈழத்தமிழர்களின் அவலம் பற்றி பாலிவுட்காரர்களிடம் எடுத்துக் கூறி இந்த விழாவைத் தடுக்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு உணர்த்த போர்க்காட்சிகளை வெளியிட்டுப் பல தமிழர்களைக் கைது செய்த துரோகத்தையும் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்ததைத் தடுக்காமல் இந்திய அரசுக்குத் துணைபோனது போன்ற பழிபாவத்தை சுமந்துக்கொண்டிருக்கிறது அரசு. அந்த பாவத்தின் மேல் இன்னொரு பாவமாக இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளிப் பட்டியலிருந்து விடுவிக்கும் முயற்சியில்தான் இந்த விழாவும் நடக்கிறது. இதற்கும் இந்தியா காரணமாக இருந்தால் நம் தேசத்தில் பிறந்ததால் காந்திக்குத்தான் அவப்பெயர்!
.........................
தி.மு.க.வின் கொடி பறக்கிறதா?
அய்ந்தாம் முறையாக தி.மு.க. கட்சி ஆட்சியில் அமர்ந்து நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றன. ஒரு தனிநபர் கட்சியின் மூலம் முதல்வராக அய்ந்து முறை ஆட்சியில் அமர்ந்து கோலோச்சுவது நினைப்பதற்கரிய காரியம். அதையும் சாதித்திருப்பது தி.மு.க.வின் தலைவர் கலைஞரையே சாரும். கடந்த நான்கு ஆண்டுகளையும் விட இந்த முறை ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி அதன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது கட்சி. அதை நிரூபிக்கும் வகையில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் தொடர் வெற்றிகள் அறிவிக்கின்றன. தி.மு.க. அரசு வழங்கும் பல சலுகைகள் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகவே உள்ளன. அச் சலுகைகளையும் கட்சிக்கு குற்றச்சாட்டுகளாகத் தொடரும் நெருக்கடி களையும் பற்றிய ஒரு கண்ணோட்டம். சலுகைகளாக...
- விவசாயிகளுக்கான கூட்டுறவு சங்கக் கடன் ரூபாய் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் வழங்கி அவர்களின் பஞ்சத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
- சத்துணவுடன் வாரத்திற்கு மூன்று முட்டை வழங்கியது.
- நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என வழங்கி எளியோருக்கு வரப்பிரசாதமாய் விளங்கியது.
- பெரியாரின் கொள்கைகளான சாதி ஒழிப்பு, சமூக நீதிகளை அடைவதற்கு ஏந்திய ஆயுதமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்தியது. அதோடு உயர்சாதி ஆதிக்கத்தைக் கருவறுத்து, தமிழை அர்ச்சனை மொழியாக்கியதோடு சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கியது.
- • பெண்கள் நலனில் அக்கறை கொண்டு ஏற்கெனவே சொத்துரிமை வழங்கியது தி.மு.க.அரசுதான். இப்பொழுதும் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண் களுக்கு உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி ஊக்கப்படுத்துதல் என பெண்களுக்கு சலுகைகள் நீள்கின்றன.
- ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் திட்டமாகிய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியது.
- தம் காலத்திற்குப் பிறகு தான் வாழ்ந்த வீடு எதிர்கால சந்ததிக்கும் உதவும் வகையில் மருத்துவமனையாகச் செயல்பட ஆவன செய்தது.
- இலவசக் கலர் டி.வி.யை வீட்டுக்கு வீடு வழங்கியதோடு இலவச கேஸ் இணைப்பு அடுப்புடன் வழங்கி வருவது.
- ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நிரந்தரப்படுத்தியது.
- இருபத்தியோரு லட்சம் குடிசைகளை நிரந்தரக் குடியிருப்புகளாக மாற்றும் திட்டம்.
- திருநங்கைகள் நலவாரியம் உள்ளிட்ட அதிகப்படியான நலவாரியங் களைத் தோற்று வித்தது. அதேபோல் அருந்ததியருக்கு, கிறித்துவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.
- மாற்றுத்திறனாளிகளுக்குத் தனித்துறையை ஏற்படுத்தியது.
- போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க முக்கியப் பெருநகரங்களில் மேம்பாலங்கள் அமைத்தது.
- குடிநீர் தட்டுப் பாட்டைப் போக்க பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக் கியது.
- நீண்டகாலமாக சவாலாக இருந்த பாப் பாப்பட்டி, கீரிப்பட்டித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது.
- பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஒரு புறமிருந்தாலும் தி.மு.க. அரசைக் கண்டித்து குற்றச் சாட்டுகளாக, மக்களை யோசிக்க விடாமல் இலவச சலுகைகளை வழங்கி வாக்கு வங்கியைத் தக்கவைக்க உபயோகிக்கும் தந்திரங்கள், கண்கட்டு வித்தைகள்தாம் அவை என்னும் குற்றச்சாட்டுகளையும் தாங்கியே தி.மு.க. அரசு செயல்படுகிறது. அவ்விதக் குற்றச்சாட்டுகள் பலரிடையேயும் எழும் பாமலில்லை.
- அந்த விதத்தில் அரசுக்குத் தொடரும் நெருக்கடிகள்...
- இலங்கைப் பிரச்சினையில் தலையிடாமல் தமிழுணர்வுடைய பலரிடையேயும் காழ்ப் புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மின்சாரத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கச் செய்து அனைத்து தரப்பு மக்களிடமும் அரசைப் பற்றிய எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது.
- காவல்துறையை அரசியல்வாதிகளின் பந்தோபஸ்துக்காக பயன்படுத்துவதனால் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாமல் வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பது.
- விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமான பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசில் அங்கம் வகித்தும்கூட பெயரளவில் எதிர்ப்பது மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணமுடியாமல் திக்கித் திணறுகிறது அரசு.
- தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பது.
- தமிழக மக்களை டாஸ்மாக் மூலம் நிரந்தர குடிகாரர்களாக மாற்றி அரசுக்கு அதிகப்படியான வருமானத்தை ஈட்டுவதன் மூலம் குடும்பப் பெண்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானது.
- மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு திடீர்ப்பதவி, உயர்பதவிகள் வழங்குவதன் மூலம் நீண்ட காலமாக கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களிடையே உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தி.மு.க. அரசுக்குப் பல்வேறு தரப்பு மக்களிடையேயும் இருந்து மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சமாளித்து ஆட்சியை நடத்துவது தி.மு.க. அரசுக்கு கைவரப் பெற்ற உபாயமாக கலைஞரின் நீண்டகால அரசியல் பக்குவம் கைகொடுக்கிறது. எனினும் கட்சிக்குள்ளேயே தம் பிள்ளைகள் மூலம் பிளவு ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்ளப் போகிறது தி.மு.க. என்பது கேள்விக் குறியே.
.....................
நேர்காணல்
பேராசிரியர் கல்யாணி
பேராசிரியர் கல்யாணி என்னும் பெயர் ஆசிரியர் பணிக்கே அடையாளமாய் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு மாணவர்களும், சமூகமும் சிறப்படைய வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தையே வாழ்க்கை நெறியாக கொண்டவர் பேரா. கல்யாணி. அரசு, காவல்துறை, உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் என எவற்றையும் விட்டுவிடாமல் சமூக நலன் கருதி எதிர்த்துப் போராடியவர். அவர் ஆசிரியர் பணியை விட்டு விலகி 15 ஆண்டுகளாகியும், மனித உரிமைக்காக்கவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இன்றைக்கும் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இவரின் முன் முயற்சியில், தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக திண்டிவனத்தைச் சேர்ந்த உரோசனை என்னும் இடத்தில் ‘தாய் தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி’ என்கிற பள்ளியை நிருவகித்து வருகிறார். புற்றீசலாய் வளர்ந்து வரும் ஆங்கிலப் பள்ளிகளின் காரணமாக நம் தமிழ்நாட்டு மழலைச் செல்வங்கள் தாய்மொழியான தமிழைக் கற்காமல் வேற்று மொழியை கற்றுக்கொள்வதைக் கண்டு மனம் பொறுக்காமல் கடந்த 2000ஆம் ஆண்டு 25 மாணவர்களுடன் இந்தப் தமிழ்வழிப் பள்ளியைத் தொடங்கினார் பேரா. கல்யாணி. இன்றைக்கு 125 மாணவர்கள் என்று வளர்ச்சி யடைந்து, திண்டிவனத்தில் மக்களால் குறிப்பிடத்தக்க அளவில் அங்கீ காரத்தைப் பெற்றிருக்கிறது.
திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து கொள்ளாமல் தனது வாழ்நாளை சமூக நலனுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பேரா.கல்யாணி. அவர்களுடன் தமிழ்நாட்டின் இன்றைய கல்விச் சூழல் பற்றிய ஒரு சிறப்பு நேர்முகம்.
தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிகள் இவ்வளவு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்ன?
ஆங்கில மோகம் என்பது பண்பாட்டு ரீதியா ஒரு சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலம் பேசுகிறவர்தான் அறிவாளி என்பதான முட்டாள்தனமான சிந்தனை உருவாகி இருக்கிறது. இந்த ஆங்கில மோகம் என்பது இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. என்ன காரணம் என்றால், இந்திக்கு எதிரான போராட்டம் இங்குதான் தொடங்கியது. அப்பொழுது இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தைத்தான் முன் வைத்தார்கள். தமிழை அல்ல. தற்பொழுது கூட பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் இந்தியில் பேசுகிறார் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுக்கவில்லை என்று தான் தமிழ்நாட்டு உறுப் பினர்கள் கேட்கிறார்கள். தமிழில் மொழிபெயர்ப்பு கொடுக்கவில்லை என்றோ தமிழில் பேச வேண்டும் என்றோ கேட்கவில்லை. ஆக, தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கில ஆதரவாக போய்விட்டது.
தமிழ்நாட்டில் எவனால பணம் கட்ட முடிகிறதோ அவனெல்லாம் இங்கிலீஷ் மீடியத்துல கொண்டு போய்தான் பிள்ளையைச் சேர்த்து விடுகிறான். இதற்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது. மக்களிடம் உருவாகியுள்ள ஆங்கில மோகம்தான் காரணம். அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. ஆசிரியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், சம்பளம் வாங்குவதற்கு மட்டும் அரசு பள்ளி, உன் பிள்ளை படிப்பதற்கு மெட்ரிக்குலேசன் பள்ளி என்றால் என்ன கணக்கு. இங்குள்ள ஆசிரியர்கள் மாதிரி மடத்தனமான புத்தியும் மட்டமான சிந்தனையும் வேற எங்கேயும் கிடையாது.
ஒரு குழந்தை தொடக்கக் கல்வியை எப்படி ஆங்கிலத்தில் புரிஞ்சுகிட்டு படிக்கும். அறிவியல் ரீதியா எந்த வகையில் சரியானது? உலகத்தில் தாய் மொழியைத் தவிர்த்து இன்னொரு மொழியில் படிப்பதை எங்காவது பார்த்ததுண்டா? எந்த கல்வியாளராவது சொல்லியிருக்காங்களா?
ஆங்கில அறிவு என்பது வேறு, பாட அறிவு என்பது வேறு. சிறந்த பொறியாளரா இருப்பதற்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ரஷியாவில் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசத் தெரியாததைத் தாழ்வு மனப்பான்மையா பார்க்கப்படுது. ஒரு மாணவனை மனிதனாக மாற்றுவதற்கு தமிழ் இலக்கியம் போதும்.
கல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார்?
மைய அரசில் இருந்து பார்த்தீர்கள் என்றால் கல்விக் கொள்கைகளை கட்சிகள் தீர்மானிப்பதில்லை. காங்கிரஸ் பேரியக்கமோ, பாரதிய ஜனதா கட்சியோ தங்களது பொதுக்குழுவில் இதுபற்றி விவாதிப்பதில்லை. தமிழ்நாட்டில் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும், பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமோ, அண்ணா திமுகவோ தங்களது பொதுக்குழுவில் விவாதிப்பதில்லை. நம்ம மக்களுக்கு கல்வி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது திட்டமாவது வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை.
ஆனால், எல்லா கட்சியை சேர்ந்தவர் களும், கல்லூரிகள் நடத்துகிறார்கள். இவர்கள் கல்விக் கொள்கையை வகுப்பதில்லை. மாறாக அந்த கொள்கையை பயன்படுத்தி எப்படி கொள்ளையடிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்விக் கொள்கை என்பது அதிகார வர்க்கத்தினரால் தீர்மானிக்கப்படுகிறது. இங்கே சுயேட்சையான அதிகார வர்க்கம் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. அவர்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது. பிஜேபி ஆட்சிக் காலத்தில் கல்வியைக் காவிமயமாக்கினார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கொஞ்சமா காவிமயமாகி இருக்குது அதுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாமே ஒன்றுதான்.
செயல் வழிக் கற்றல் என்கிற பாடத்திட்டம் எந்தளவுக்கு மாணவர்களுக்கு பயன் தரும்?
இது வரவேற்க்கக் கூடிய அம்சம். இதை வரவேற்று மாநாடெல்லாம் போட்டிருக்கிறோம். ஆசிரியர் சங்கங்கள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால், கல்வி யில் அக்கறை உள்ளவர்கள், புதிய ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள். இவர்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள். இதுவரை கற்பித்தல் முறையில் மாற்றமே கொண்டு வரவில்லை. இந்த செயல்வழிக் கற்றல் என்பதில் குழந்தைகளே கற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான். பிள்ளைகளும் ஈடுபாடா கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர் மய்யக் கல்வி குழந்தைகள் மய்யக் கல்வியாக மாறி இருக்கிறது.
ஆசிரியர்களில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் கல்வியில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் பாடம் நடத்தாமல் ஓபி அடிப்பார்கள். அதிகாரிகள் மிரட்டினால் பாடம் நடத்துவார்கள். இன்னொரு பிரிவினர் எதையும் ஈடுபாடோடு பாடம் நடத்துவார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால் செயல்வழிக் கற்றல் என்கிற முறையை ஆதரிப்பதோடு ஒரு கோரிக்கையை முன் வைப்பதுதான். அது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற முறையை கொண்டு வர வேண்டும் என்பதுதான். அப்பொழுதுதான் இந்த கல்வி முறை சிறப்பாக இருக்கும்.
பொதுக்கல்வி முறையால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது?
கல்வி என்பது சென்ட்ரலைஸ்டு ஆகும்போது கல்வித்தரம் மோசமாகுது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியோ, பாலிடெக்னிக் கல்லூரியோ தொடங்கு வதற்கு தமிழ்நாட்டில் அனுமதி வாங்கத் தேவையில்லை. டில்லியில் உள்ள கிமிசிஜிணி (கிறீறீ மிஸீபீவீணீ சிஷீuஸீநீவீறீ திஷீக்ஷீ ஜிமீநீலீஸீவீநீணீறீ ணிபீuநீணீtவீஷீஸீ) யில் அனுமதி வாங்கினால் போதுமானது. ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் அந்தக் கல்வி நிறுவனங்கள் சரியாகச் செயல் படவில்லை, மோசடி யில் ஈடுபடுகிறது என்று புகார் வந்தால் உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இன்றைக்குப் பல ஆசிரியர்களும் தனிப் பயிற்சி எடுக்கிறார்களே?
டியூசன் என்பதே கல்வி ரீதியாகவே சமூகக் கெடுதி. எப்படி என்றால் ஒரு மாணவன் என்பவன் இயல்பாகவே கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். காலப்போக்கில் மாணவனாகவே கற்றுக்கொள்ள வேண்டும். மாணவன் தானாகவே கற்றுக் கொள்ள முயற்சிப்பதற்கு முன்னாலேயே டியூசன் என்கிற முறையில் ரெடிமேடா சொல்வதனால் சொந்தமா சிந்திக்கின்ற திறன் குறைகிறது. தனிப் பயிற்சி என்பது சமூகக் கேடு என்பதை வலியுறுத்தி மாநாடெல்லாம் நடத்தி யிருக்கிறோம்.
லெக்சர் பண்ணி மாணவர்களை ஈர்ப்பதற்கு முதலில் ஆசிரியருக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். அதற்கு முதலில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த பணிக்கு வரவேண்டும். கல்வியைப் பொறுத்தவரை வியாபாரமயமாகிவிட்டது. ‘வீக்லி டெஸ்ட்’ என்று வைக்கிறார்கள், அது கூடாது. ‘சென் பர்சென்ட்’ ரிசல்ட் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் உலகம் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை.
இந்த மாதிரி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தனித்திறமை இல்லா மலேயே வளர்க்கப்படு கிறார்கள். இதனால் வாழ்க்கையில் போட்டி போட முடியாமல், மனத்திடம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நல்ல மாணவர்களை உருவாக்குவது என்றால், நல்ல மனிதர்களை உருவாக்குவது, நல்ல சிந்தனையாளர்களை உருவாக்குவது. அப்படித்தான் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது பணிப் பாதுகாப்பு, சம்பளம் ஆகியவற்றில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. எந்த ஆசிரியரும் டியூசன் எடுப்பது தவறு என்றோ, தமிழ்வழிக் கல்விதான் வேண்டும் என்றோ போராடியதே இல்லையே. எந்த ஆசிரியர் சங்கமும் தனிப்பயிற்சிக்கு எதிராக செயல்பட்டதே கிடையாது. அரசு பள்ளியில் கல்லூரியில் 50 ஆயிரம், 60 ஆயிரம் என்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு வகுப்பில் நடத்தாமல் வீட்டில் தனிப்பயிற்சி நடத்தினால் திட்டாமல் என்ன செய்வது?
சமச்சீர் கல்வி என்பதை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. அது எந்த வகையில் சிறப்பாக இருக்கும்?
சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் சமமான கல்வியாகவும், தரமான கல்வியாகவும் இருக்க வேண்டும் என்று கொண்டு வருகிறார்கள். இது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. ‘முத்துக்குமரன் கமிட்டி’ பரிந்துரைத்த பாடத்திட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் பள்ளிக் கல்வி தமிழ்வழியில்தான் இருக்க வேண்டும் என்பதை மட்டும் விட்டுவிட்டார்கள். இதற்குக் காரணம் கலைஞர் சரியில்லை என்று சொல்ல முடியாது. மக்களோட கருத்தாக்கம் என்னவென்றால் எல்லா பாடத்திட்டத்தையும் தமிழில் கொண்டு வந்தா சிஙிஷிணி கூட போவதற்கு தயாராக இருக்கிறார்கள். நமது பெற்றோர்கள் ஆங்கிலத்தில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.
அப்படி மாறிப் போவதற்கானக் காரணம் என்ன?
தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக எந்த இயக்கங்களோ கட்சிகளோ பெரிய அணி திரட்டவில்லை. இதனால் நாளைக்கு எந்த அரசாங்கம் வந்தாலும் கொண்டு வர முடியாது. தமிழ்நாட்டில் 85 விழுக்காட்டு மக்கள் தமிழில்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன்னா இவர்களால் ஆங்கிலக் கல்விக்கு பணம் கட்ட முடியவில்லை. பணம் இருந்தால் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். இயல்பாகவே ஆங்கில வழிக் கல்விக்கான மோகம் அதிகமாக இருக்கிறது. ஆக, தமிழ்வழிக் கல்விக்கான பிரச்சாரம் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா இயக்கங்களுக்கும் இருக்கிறது.
நேர்முகம்: சகா. சசிக்குமார்
..........................
2011ல் அ.தி.மு.க. வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்
திருமங்கலம் தொகுதி உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் அ.தி.மு.க. கடந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியை மீறி டெபாசிட்டையே இழந்துள்ளது அக்கட்சியினரிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் கட்சியின் நிலைப்பாடு பற்றிய கேள்வியையே எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் இரு பிரதானக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. வளர்ச்சி எதை நோக்கிப் போகிறது என்ற எண்ணம் தோன்றாமலில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியின் வளர்ச்சி பின்னோக்கிய சரிவை நோக்கிப் போவது என்பது அரசியலுக்கு நல்லதல்ல.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்று எம்ஜி.ஆரின் மனைவி ஷானகிக்கும் ஷெயலலிதாவுக்கும் போட்டி நடந்த நேரத்தை சாதகமாகப் பயன்படுத்தி தி.மு.க. பத்தாண்டுகளுக்குப் பிறகு 1989இல் ஆட்சியைப் பிடித்தது. 1990இல் தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1991இல் ஷெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ராஜீவ்காந்தி படுகொலை அனுதாபத்தில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது. கட்சியின் வளர்ச்சி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு சற்றே கூடியது என்றே கூறலாம். காரணம் 1991க்குப் பிறகு இரண்டு முறை ஆட்சியை எட்டியுள்ளது. அதற்கும் பின்னான காலங்களிலும் கூட சட்டசபையில் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. ஆனாலும் 2004க்குப் பிறகான கட்சியின் நடவடிக்கைகள் எதிர்கால நிலையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கட்சியினரும் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களும் அ.தி.மு.க.வின் வெற்றிக்குக் கீழ்க்காணும் பல்வேறு ஆலோசனைகளைக் கூறினார்கள். இதைப் பின்பற்றிச் செயல்பட்டால் வரப்போகும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே வெற்றி உறுதியாகும் என்பது சாத்தியமே.
தன்னம்பிக்கை மிக்கவரான ஜெயலலிதா, வெற்றியை நோக்கிய பயணங்களான போராட்டங்களை மட்டுமே ஆயுதமாகக் கொள்ள வேண்டும். பேச்சை மட்டுமே அல்ல. பெண்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் பிரதானமாகக் கொண்டால் அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
கட்சி சீட் அரசியலைத் தவிர்த்து ஏழை, எளிய மக்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரச்சினைகளைக் களைய ஈடுபாடு கொண்டால்தான் எளிய முறையில் தொடர்பு கொள்ளக்கூடிய மக்கள் சக்தியைப் பெற முடியும்.
அ.தி.மு.க கட்சியினர் ஆங்காங்கே கூட்டாக அணி மாறுவதை தடுக்க தமிழ்நாட்டினை மண்டலமாக பிரித்து கட்சிக்காக அலுவலக கட்டிடத்தை கட்ட வேண்டும். கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று குறைகேட்டு உரையாற்றுவதை வழக்கமாக்க வேண்டும்.
அடிமட்ட தொண்டர்களை உற்சாகப்படுத்த கழகம், தொண்டர்கள், அவர்களது குடும்பங்கள் பங்கேற்கும் அளவிற்கு கலை மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நடத்தி பரிசு, ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு உதவித்தொகையையும் வழங்க வேண்டும். (மாவட்ட, வட்டம் தோறும்). இதனால் தேர்தலின் போது தேர்தல் பணியை ஆத்மார்த்தமாக மேற்கொள்வார்கள்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க வேண்டும். இது எம்.ஜி.ஆர் மூலம் பெரும் பலன் கிடைக்கும். மாட்டுக்கார வேலன், நாடோடி மன்னன், இதயக் கனி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற மெகா ஹிட் படங்களை தேர்தலுக்கு முன்பு மீண்டும் மீண்டும் திரையிட வேண்டும். குறிப்பாக தமிழகக் கிராமங்களில் பெரும்பான்மையாக நிகழும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தி.மு.க-வின் குடும்ப சர்ச்சைகளையும் அரசின் குறைபாடுகளையும் கையிலெடுத்து விளக்க கூட்டங்களை ஆங்காங்கே நிகழ்த்த வேண்டும்.
அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களின் வட்டத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளை, பூசல்களை நீக்க அவர்களில் சிலருக்கு இரண்டாம் கட்ட கட்சிப் பொறுப்புகளை வழங்கலாம்.
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இலங்கை விவகாரத்தில் தி.மு.க.வின் மீது மறைமுக கோபத்தில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, தே.மு.தி.க ஏனைய சிறுகட்சிகளை வளைப்பதனால் வெற்றி எளிதில் சாத்தியம். இதற்கு தனது கடினமான அணுகுமுறையை மாற்ற வேண்டும்.
தனது மீடியாவான ஜெயா டி.வியை மற்ற வெற்றிகரமான மீடியாக்களுக்கு இணையாக மிகத்தரமான நிகழ்ச்சிகளை வழங்குவது அ.தி.மு.க.விற்கு பக்க பலமாக இருக்கும். அது தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைப்பதற்கும் தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கும் உதவும்.
ஆரோக்கியமான ஆலோசகர்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும். தேர்தல் சமயங்களில் தி.மு.க.வின் அதிரடி நடவடிக்கைகளை கண்டுணரவும் அதன் எதிர் நடவடிக் கைகளை எதிர்கொள்ள தனி யாக ஒரு துறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய பலமான பத்திரிக்கை துறை யுடனும், நிருபர்களுடனான கட்சி தொடர்பு களையும் அணுசரிக்க வேண்டும்.
கோயில் கும்பாபிஷேகம் மற்றும் முக்கிய பொது நிகழ்ச்சிகளை தலைமை ஏற்றோ அல்லது பொறுப்பு ஏற்றோ நடத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். இரண்டாம் கட்டமாக சினிமாத்துறையில் தி.மு.க. வாரிசு களின் வளர்ச்சி அ.தி.மு.க-பலவீனத்தை கூட்டும். அதனால் தயாரிப்பு மற்றும் முக்கிய பணிகளில் தனது தரப்பு பல ஆட்களை மறைமுகமாக இருக்க வேண்டும்.
ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும்போது வழிநெடுகிலும் உள்ள கிராம மக்களைச் சந்திக்க வேண்டும். கட்யினரைத் தோல்வி தொய்வடையச் செய்யாமல் உற்சாகப்படுத்த வேண்டும்.
தேர்தல் சமய தி.மு.க.வின் அணுகு முறையையும் இனாம்களையும் பணம் கொடுப்பதையும் ஆதாரத்துடன் தகவல் களை திரட்டி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நெருக்கடி கொடுத்து முக்கிய இடங்களில் வீடியோ பதிவுகளுடன் தேர்தல் நடத்த வற்புறுத்த வேண்டும்.
தனக்கு பக்க பலமாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தி லுள்ள எண்ணற்ற அமைப்புகளை பிரிவு களை தன் பக்கம் இழுப்பது. தலித் அமைப்பு பிரிவு களை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க ஏதுவாக இருக்கும்.
அரசியல் வாரிசை அல்லது 2ம் கட்ட தலைமையை அறிவிக்க வேண்டும். சும்மா ஒரு பரபரப்புக்காக...
கிராமங்களிலும், மைய நகரங்களிலும் அ.தி.மு.க ஒட்டுகள் அதிகம் உள்ளன. மற்ற இடங்களில் உள்ள வாக்காளர்களை கவர பயனடைய பல சலுகைகளை வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்/அறிவிக்க வேண்டும்.
பெண்கள் அதிகமான தேர்தலில் நிறுத் தினால் வெற்றி வாய்ப்பு குறையும்.
கணக்கில்லாமல் பணத்தை வாரி இறைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கேற்ப பணம்+மக்கள் ஆதரவுள்ளவர்களைவே வேட்பாளர் களாக நிறுத்த வேண்டும். வழக்கம் போல் இல்லாமல் மிக அதிகப்படியான அளவிற்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
தேர்தலுக்கான திட்டமிடலை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். அதைச் செம்மையாக வழிநடத்தும் தலைவர்களைப் பொறுப் பாளர்களாக நியமிக்க வேண்டும்.
.......................
தொடர்
மாவேயிஸ்ட் பாதையில் ஒரு பயணம்
அருந்ததிராய்
சொற்செறிவுடைய, தட்டச்சு செய்யப்பட்ட காகிதத்துடனான கவர் ஒன்று என் வீட்டு கதவின் கீழ் நழுவி என்னை வந்தடைந்தது. அதுவே இந்தியாவின் மாபெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் உடனான என் சந்திப்பை உறுதிபடுத்தியது. நான் இதற்காகவே பல மாதங்களாக காத்திருந்தேன். அவர்கள் குறுப்பிட்டிருந்த ஏதேனும் இரு நாட்களில், நான்கு வேளைகளில் நான் சட்டிஸ்கர் மாநில தான்தேவாபாவில் உள்ள தான்தேஸ்வரியம்மா ஆலயத்தில் இருக்க வேண்டும். இது மோசமான வானிலை, பஞ்சர், சாலை மறியல், போக்குவரத்து வேலை நிறுத்தம் மற்றும் அதிர்ஷ்டமின்மை ஆகிய வற்றின் அடிப்படையில்தான் தேதி, நேரம் இவ்வாறு விரிவாக வழங்கப்பட்டிருந்தது. அந்த காகிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “எழுத்தாளரிடம் புகைப்பட கருவி, நெற்றியில் பொட்டு மற்றும் தேங்காய் ஒன்று இருக்க வேண்டும். சந்திப்பவர் தலையில் தொப்பி அணிந்திருப்பார். கையில் அவுடலுக் ஹிந்தி இதழும் சில வாழைப் பழங்களும் வைத்திருப்பார். கடவுச்சொல் : நமஸ்கார் குருஜி.”
நமஸ்கார் குருஜி. எனக்கு வியப்பாக இருந்தது என்னை சந்திக்க இருப்பவர் ஒரு ஆடவனை எதிர்பார்த்து காத்திருப்பாரோ, அப்ப நான் ஒரு மீசையை தருவிக்க வேண்டும்.
தானதேவாபாவை பல ரூபங்களில் வர்ணிக்கலாம். அது முரண்களின் நிலம். இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு மாநில எல்லை அமைந்துள்ள நகரம் அது. ஒரு போரின் மையப்பகுதி. அது ஒரு தலை கீழ், உள்ளே வெளியே நகரம்.
தான்தேவாபாவில் காவல்துறையினர் சாதாரண உடை அணிந்திருப்க்ஷிர்கள், போராளிகள் சீறுடை அணிந்திருப்பார்கள். சிறைச்சாலை கண்காணிப்பாளர் சிறையில் இருப்பார். கைதிகள் அனைவரும் சுதந்திரமாக இருப்பர் (இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழைய நகர சிறையிலிருந்து முன்னூறு பேர் தப்பி ஓடிவிட்டனர்.) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் காவல் நிலையத்தில் உள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அனைவரும் கடைவீதியில் உரைநிகழ்த்துகிறார்கள்.
இந்திராவதி நதியின் அக்கரையில் உள்ள நிலப்பகுதி அனைத்தும் மாவோயிஸ்டு களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை காவல்துறையினர் பாகிஸ்தான் என்று அழைக்கிறார்கள். அங்குள்ள கிராமங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால்காடுகள் மக்களால் நிரம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டிய குழந்தைகள் எல்லாம் காடுகளில் துள்ளி ஓடுகிறார்கள். அங்கிருந்த கிராம பள்ளிகள் எல்லாம் ஒன்று தகர்க்கப்பட்டு விட்டன. ஒரு குவியலாய் கிடக்கிறது அல்லது காவல்துறையினரால் நிரம்பி உள்ளது. இந்த காடுகளில் பெருக்கெடுக்கும் ஒரு யுத்தத்தால் இந்திய அரசு பெருமை கொள்ளவும் செய்கிறது. வெட்கி தலை மறைத்தும் கொள்கிறது. பச்சை வேட்டை நடவடிக்கை என இதனை அழைக்கும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இப்படி ஒரு யுத்தம் நடைபெறவில்லை என மறுக்கவும் செய்கிறார் (போரின் தலைமை அதிகாரி) மேலும் இது ஊடகங்கள் உருவாக்கும் ஒரு பிம்பம் மட்டுமே என்கிறார். மறுக்கும் போதும் இதற்கு ஏராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான துருப்புகளும் இந்த நடவடிக்கைக்கு என அணிதிரட்டப்படுகிறது. இந்த போர் நாடகம் இந்தியாவின் மத்திய பகுதி வனங்களில் நடைபெறுகிற போதிலும், இது நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
பேய்கள் சிலருக்க மேலே வட்டமிடும் ஆவியாகவும் அல்லது சிலருக்கு இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். அப்படியயனில் அந்த பேயின் நேர் எதிரானது தான்இன்னு வனங்களை கிழித்துச் செல்லும் நான்கு வழிச் சாலைகள். அது நமக்கு வரப்போவதை முன் அறிவிக்கும் கட்டியக்காரனே.
காடுகளில் எதிர்ப்புணர்வுடன் அணி திரட்டுபவர்கள் சகல வழிகளிலும் முற்றிலும் வேறான சமனற்றவர்களாகவே இருக்கிறார்கள். பணம், ஆயுதங்கள், ஊடகங்களின் பலத்துடனும் ஒரு வளரும் வல்லரசின் இறுமாப்புடன் பெரும் ராணுவப் படை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் மரபான ஆயுதங்களுடன் சாமானிய கிராமமக்கள். மாவோயிஸ்டுகளின் பின்னணியில் அருமையாக அணிதிரட்டப்பட்ட கொரில்லா போர் படை, அது ஆயுத எதிர்ப்பின் நெடிய வன்முறையான வரலாறுடையது. மாவோயிஸ்டுகளும் இந்த துணை ராணுவப்படைகளும் ஒன்றுக்கு ஒன்று எதிராக ஏற்கனவே பல முறை சந்தித்துக் கொண்டவர்களே. 50களில் தெலுங்கானாவில், 60ண்70களில் மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில், அதன்பின் 80களில் ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரம் தொடங்கி இன்று வரை அது தொடர்ந்து வந்துள்ளது. இருசாராரும் தங்களின் யுத்திகஃ, தந்திரங்களை நன்கு அறிந்த வைத்துள்ளன. பல சமயங்களில் மாவோயிஸ்டுகள் கவிழ்த்தப்பட்டு விட்டது போலவும், அவர்கள் முற்றாக அப்புறப்படுத்தப்பட்டதாகவே தோன்றியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் மறைவிலிருந்து மீண்டும் வெளிப்பட்டவர்களாக, அதிகப்படையான ஒருங்கிணைப்புடன், கூடுதல் திண்டத்துடன் முன்பைவிட அதிகப்படியான செல்வாக்கு செலுத்துபவர்களாகவே அணிதிரண்டுள்ளன. இன்று கனிம வளங்கள் மிகுதியான சத்தீஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய நிலப்பரப்புகளில் மீண்டும் ஆட்சி எதிர்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த நிலப்பரப்பு தான் கோடிக்கணக்கான இந்திய பழங்குடியினரின் பூர்வீக நத்தமாகவும், பன்னாட்டு உலகின் சொர்க்க பூமியாகவும் திகழ்கிறது.
காடுகளில் நடக்கும் போர் இந்திய அரசும், மாவோயிஸ்டுகள் ஆகிய இரு சாரார் மத்தியில் நடக்கிறது என்று தாராளவாத மனோபாவத்துடன் புரிந்து கொள்வது சுலபமானது. மாவோயிஸ்டுகள் தேர்தலை மோசடி என்றும், பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்றும், இநதிய அரசை அப்புறப்படுத்துவது தங்கள் லட்சியமென்றும் வெளிப்படையாகவே அறிவித்தவர்கள். மத்திய இந்தியாவின் காடுகளில் வசிக்கும் பழங்குடியினரின் எதிர்ப்புணர்வின் வரலாறு நீண்ட நெடியது. அது மாவோயிஸ்டுவுக்கும் பிந்தயது என்பதை மறதிக்கு உட்படுத்துவது சௌகரியமானது. ஹோ, ஓரான், கோள், சந்தல், முண்டாக்கள், கோண்டுகள் என இந்த பழங்குடிகள் பல முறை வெள்ளையர்கள், ஜமீன்தார்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை செய்துள்ளனர். இந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டன. ஆனால் அவர்கள் முற்றாக கைப்பற்றப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்றபின் உருவான மாபெரும் கிளர்ச்சியில் பழங்குடியினர்தான் முன்னணியில் இருந்தனர். அதனை மாவோயிஸ்டு என கூட அழைக்கலாம். மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் தான் அது நிகழ்ந்தது. (அதிலிருந்து தான் நக்சலைட் என்கிற வார்த்தை புழக்கத்திற்கு வந்தது ண் இப்பொழுது மாவோயிஸ்டு என்றும் அது மாறியுள்ளது? அது முதல் பழங்குடியினரின் எழுச்சிகளும் நக்சல்பாரி அரசியலும் பிரிக்க இயலாது இணையாக மாறிப் போனது.
இந்திய அரசால் தொடர்ந்து திட்ட மிட்டு தனிமைபடுத்தப்பட்டு, விளிம்புக்கு தள்ளப்பட்ட ஒரு பெரும் கூட்டம் தான்இன்று கிளர்ச்சியின் மரபை தனதாக்கி அணிதிரண்டு நிற்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடிநாதமான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அந்த நாள் பழங்குடி மக்களுக்கு அவலமான நாள். காலனிய கொள்கையை அப்படியே பின்பற்றி அது இந்திய அரசை பழங்குடியினரின் பூர்வீக நிலங்களுக்கு பாதுகாவலாக அறிவித்துக் கொண்டது. ஒரே இரவில் பழங்குடியினரை தங்கள்சொந்த நிலங்களில் உரிமையற்றவர்களாக அறிவித்து நிற்கதியில் ஆழ்த்தியது. காடுகளின் வளங்களுடனான மரபான உரிமையை ரத்து செய்து, இயல்பான வாழ்வியல் செயல்களை கூட அது கிரிமினலாக மாற்றியது. வாக்குச் சீட்டை கையில் கொடுத்து அதற்கு மாற்றாக அது வாழ்வுரிமையை, தன்மானத்தை பறித்துக் கொண்டது.
அவர்களின் வாழ்வுரிமையை பறித்து, கொடிய வகையில் நிலத்துரிமையை நிர்மூலமாக்கி அரசு அவர்களின் வறுமையை அவர்களுக்கு எதிராகவே பாவிக்க தொடங்கியது. ஒவ்வொரு முறையும் பெரும் மக்கள் கூட்டத்தை இடம் பெயரச் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ண் அதாவது பெரிய அணை, கனிம சுரங்கம், பெரும் பாசனத் திட்டம் ண் அரசு உடன் பழங்குடியினரை மைய நீரோட்டத்திற்கு அழைத்து வருவது அல்லத நவீன வளர்ச்சியின் பலன்களை அவர்களுக்கு வழங்குவது என்கிற சொற்றொடர்களை பேசத் தொடங்கும். (அதுவும் 3 கோடி பேர் பெரிய அணை திட்டங்களால் மட்டும்) உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள கோடிக்கணக் கானவர்களில் பெரும் பகுதியானவர்கள் பழங்குடியினர். அரசாங்கம் பழங்குடியினரின் நலன் குறித்து பேசத் தொடங்கினால் அது கவலை கொள்ள வேண்டிய நேரமே.
கடைசியாக அப்படிக்ஷின ஒரு விவரனையை வழங்கியவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ண் அவர் பழங்குடியின் அருங்காட்சியாக கலாச்சாரத்தில் வாழ்வதை விரும்பவில்லையாம். ஆனால் இனறு அவர் ஆவலுடன் பேசும் பழங்குடியினரின் நலன் அவர் ஏற்கனவே பல பெரும் கனிம நிறுவனங் களின் கார்போரேட் வழக்கறிஞராக பணி புரிந்தபோது இருந்ததாக தெரியவில்லை. அதனால் அவரது இந்த புதிய ஆர்வத்தின அடிப்படையை பரிசோதிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களை பல பன்னாட்டு நிறுவனங் களுடன் கையயழுத்திட்டுள்ளது. அவை இரும்பாலைகள், மின் திட்டங்கள், அலுமினிய சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள், சுரங்கங்கள் என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. அந்த ஒப்பந்தங்கள் உண்மையாகவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உருமாற பழங்குடியினர் அங்கிருந்து நகர்த்தப்பட வேண்டும்.
அதனால் தான் இந்த போர் :
ஜனநாயக நாடு என பிரகடனம் செய்து கொண்ட ஒரு தேசம் தன் எல்லைகளுள் ஒரு போரை அறிவித்துக் கொள்கிறபோது, அந்த போர் எப்படி காட்சியளிக்கும்? எதிர்ப்பு அங்கு தாக்கு பிடிக்குமா? தாக்கு பிடிக்க வேண்டுமா? மாவோயிஸ்டுகள் யார்? அவர்கள் பழங்குடியினர் மீது காலாவதியான ஒரு தத்துவத்தை சுமத்தும் சூனியவாதிகளா? வெற்று வாக்குறுதிகளை பழங்குடியினர் மீது சுமத்துபவர்களா? கடந்த கால அனுபவங்களிலிருந்து ஏதேனும் பாடங்களை அவர்கள் கற்றுள்ளார்களா? ஆயுதப் போராட்டம் ஜனநாயகத்துக்கு புறம்பானதா? இல்லை பழங்குடியினர் இந்திய அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடுவே நடக்கும் போரில் மாட்டிக் கொண்டவர்கள் என்கிற வாதம் துல்லியமானதா? மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியினர் வேறு ருறு வகையான தன்மைகள், தேவைகள் உடையவர்களா? அவர்களின் நலன்கள் சங்கமிக்கிறதா? அவர்கள் பரஸ்பரம் ஏதேனும் கற்றுள்ளார்களா? ஒருவரை ஒருவர் மாற்றியுள்ளார்களா?
நான் கிளம்புவதற்கு ஒரு நாள் என் அம்மா துக்கச் சடவில் என்னை அழைத்துக் கூறினால், நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன், நம் நாட்டுக்கு தேவை ஒரு புரட்சி.
இந்திய காவல்துறையைச் சேர்ந்த 30 உயர் அதிகாரிகளுக்கு எதிரிகளை கொள்வது குறித்த பயிற்சிகளை இஸ்ரேலின் மோஸாத் அளித்து வருகிறது என இணையதளத்தில் ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. அப்பொழுது தான் மாவோயிஸ்டு அமைப்பை தலை இல்லாது ஆக்க இயலும். இஸ்ரேலிலிருந்து பல புதிய தளவாடங்கள் வாங்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றது: தொலை தூர லேசர் காண் கருவிகள், வெப்ப உருவகக் கருவிகள், அளில்லா விமானங்கள் இவை எல்லாம் அமெரிக்க படைகளில் உள்ள பிரபாக் கருவிகள். ஏழைகளுக்கு எதிராக உபயோகிக்க பொருத்தமான கருவிகள்.
ராய்பூரிலிருந்து தான்தேவாடா செல்ல ஏறக்குறைய 10 மணி நேரம் ஆகிறது. அது மாவோயிஸ்டு நோய்வாய்பட்ட பகுதியின் வழியாக செல்கிறது. இவை போகிற போக்கில் பிரயோகிக்கப்படுகிற வார்த்தைகள் அல்ல. நோய்வாய்பட்ட தாக்குதலுக்கு ஆட்பட்ட என்பது நோயை, பூச்சியை குறிக்கும் சொற்கள். பூச்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்புறப் படுத்தப்பட வேண்டும். இப்படியாக மெல்ல ஊர்ந்து இனப்படுகொலையின் மொழி நம் சொற்தொகுதியை வந்தடைந்துள்ளது.
நெடுஞ்சாலையை பாதுகாக்கும் பொருட்டு காடுகளின் இருபக்கங்களிலும் பெரும் பகுதியை பாதுகாப்பு படைகள் தங்கள் வசப்படுத்தியுள்ளன. இத தாதாக்களின் ராஜ்ஜியம். சகோதரர்கள் காம்ரேடுகள் ராய்பூர் ஊரின் விளிம்பில் ஒரு மிகப்பெரும் விளம்பர வலகை வேதாந்தா (நம் உள்துறை ஒரு காலத்தில் பணியாற்றிய நிறுவனம்) புற்றுநேய் மருத்துவமனை உள்ளதை எடுத்துரைக் கிறது. வேதாந்த நிறுவனம் ஒரிசாவின் பாக்சைட் கனிமத்தை வெட்டி எடுக்கிறது. அந்த ஊரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு நிதி உதவி செய்கிறது. இப்படியான கேடற்ற வழிகளில் தான் இந்த கனிம நிறுவனங்கள் நம் கற்பனைகளில் வந்து அமருகின்றன: நம் மீது கரிசனம் கொள்ள வந்துள்ள மிருதுவான பூதங்கள். இதன் பெயர்தான் பன்னாட்டு சமூகப் பொறுப்பு ண்ண் இது பன்னாட்ட நிறுவனங்களுக்கு நம் தொன்மம் சார்ந்த திரைப்படங்களில் நடித்த என்.டி.ஆரின் வேடத்தை அளிக்கிறது. அவர் ஒரே திரைப்படத்தில் வரும் அத்தனை வேடங்களிலும் நடிப்பார். நல்லவர், தீயவர், வல்லவர் என. இந்த பன்னாட்ட சமூக பொறுப்பு தான் இந்த கனிம வளத்துறையின் பொருளாதாரத்தை கச்சிதமாக இந்தியாவில் குறித்த தருகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் கர்நாடகாவிலிருந்து வெளியான லோகாயுதா அறிக்கையின்படி அங்கு வெட்டி எடுக்கப்படும் ஒவ்வொரு டன் இரும்புத் தாதுக்கு அந்த தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ரூ.27அய் செலுத்துகிறது. அந்த நிறுவனத்திற்கு கிடைப்பதோ ரூ.5000. பாக்சைட், அலுமினியம் துறை சார் கணக்கும் இன்னும் படு மோசமாக உள்ளது. நாம் ஒரு பகல் திருட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அது பல ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்புடையது. இந்த தொகை தேர்தலை, அரசாங்கத்தை, நீதிபதிகளை நாளிதழ்களை, தொலைக்காட்சி சேனலை, தொண்டு நிறுவனங்களை, தொண்டு நிதி நிறுவனங்களை எல்லா விலைக்கும் வாங்க போதுமானது. அங்கும் இங்கும் உள்ள புற்றுநோய் மருத்துவமனை எதற்காக உள்ளது?
சத்திஸ்கர் அரசு கையயழுத்திட்டுள்ள மிக நீண்ட பட்டியலில் வேதாந்தாவின் பெயரை நான் எங்கும் காணவில்லை. ஆனால் புற்று நோய் மருத்துவமனை அங்கு உள்ளது என்றால் அங்கு அருகில் மிகப் பெரும் பாக்சைட் மலை இருக்கிறது என்று மட்டும் என்னால் யூகிக்க முடிகிறது.
தொடரும்...
....................
விமர்சனம்
சிதிலங்களால்
சுழித்தோடும் தெரு
சுழித்தோடும் தெரு
செந்தமிழ் மாரி
செறிவுடன் புனையப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பு எளிதில் உள் நுழைவ தற்கான அத்தனை நல்வரவேற்பையும் வழங்குகிறது எனில் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் அதற்கேயுரிய தனித்துவமான கருத்து அடையாளங்களுடன் பளிச்சிடுவதையே காண முடிகிறது.
பா. சரவணகுமாரின் ‘நாணயக் காரத் தெருவில் சந்தித்த நண்பனின் காதலி’ என்னும் இத்தொகுப்பு அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்புதானா என்ற கேள்வி எழ முடியாதபடி அவரின் எழுத்து நடையும் இலக்கிய வழித்தடமும் விளையாடியிருக்கிறது என்றே கூறலாம்.
தொகுப்பிலுள்ள முதல் கதையான ’ரத்தம்’ கதையின் முடிவு இதயமுள்ள யாவரையும் ஒரு கணமேனும் கலங்கச் செய்யாமல் விடுபட நேராது. கதை சொல்லப்பட்ட விதத்தில் பருவமெய்தாத இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு மன அவஸ்தையையும் புடம் போட்டுக் காட்டும் ஆசிரியர் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளைக்கூட கைக்கொண்டு படிக்கும் நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறார்.
அதேபோல் ‘தையல்’ என்னும் கதையில் வரும் வேலாயுதம் வறுமைப் போராட்டத்தோடு படித்து முன்னுக்குயர நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வான் என்பது உறுதியே.
‘வெந்தனால் வேகாது’ என்னும் கதையில் குறிப்பிட்டிருக்கும் சாதிப் பிரிவினையால் ஏற்படும் சண்டை, சச்சரவு மற்றும் தீ வைத்துக் கொளுத்துதல் போன்றவற்றைக் கூறும்போது ‘உண்மையான அன்பைத் தீ வைத்துக் கொளுத்திவிட முடியாது’ என்று இளம்பிராயத்து நண்பனுக்குத் தம் நட்புக் கணங்களின் மூலம் நினைவுபடுத்துவது சாதியம் பேசித் திரியும் ஒவ்வொரு சமூக அங்கத்தினருக்கும் ஏற்படுத்தும் அன்பின் வழியாகவே தோன்றுகிறது.
மக்கள் இயக்குனர் வி. சேகர் முன்னுரையில் கூறியிருப்பதைப் போல் இப் படைப்பு படிப்பவர்களின் கருத்தில் செழுமையையும் எழுத்தில் செறிவையும் தந்து தரத்தை உயர்த்துவதாகவே உள்ளது என்பதில் எவ்வித அய்யமுமில்லை.
நாணயக்காரத் தெருவில் சந்தித்த நண்பனின் காதலி; ஆசிரியர். பா.சரவணகுமரன்; வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. விலை. ரூ.50
...................
சர்ச்சை
‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை குறித்தான சர்ச்சையாகப் பல இணையங்களிலும் இதழ்களிலும் மிகக் கடுமையாக எதிர்வினைகளாக வந்துக்கொண்டிருக்கின்றன. லீனா மணிமேகலை பதில் கூறாமல் எதிர் தரப்பை பேசவிட்டுக்கொண்டிருப்பது சிறப்பாக இருக்காது. அது அவரின் மீது ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும். அதனால் பலர் தொடுக்கும் கேள்விகளுக்கு சமூக பொறுப்புடன் பதில் சொன்னால் பெண்ணியம், கவிதை குறித்தான அவரின் நிலைப்பாடு என்னவென்று புரியும்.
ம.க.இ.க.வினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் சில கேள்விகளை முன்வைத்தார்கள். லீனா மணிமேகலையின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். 1 வார முடிவில் நேரம் இல்லை என்ற பதில் வந்தது.
லீனா மணிமேகலை தனது தரப்பை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர் கவிதைகளைப் புத்தகமாக்கி பொதுவில் விற்பனை செய்துள்ளார். கவிதைகள் பொதுவிற்கு வந்துவிட்டன. மறு பதிப்பு முயற்சியில் வேறு இருக்கிறார். அதனால் எதிர்வினைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். கேள்விக்குண்டான விளக்கத்தை தருவதே சிறந்ததாக இருக்கும்.
கவிதைக் குறித்தான எதிர்வினைக் கேள்விகள்
ம.க.இ.கவினரின் கேள்விகள் :
- உபரி, மயிர் தொடர்பான அந்தக் கவிதையின் விளக்கமும் பொருளும் என்ன என்று விளக்க வேண்டும்.
- உங்களது இந்தக் கருத்தை தொடரா
- கவோ, கட்டுரையாகவோ விவாத மேடைக்குக் கொண்டு செல்லாமல் கவிதையின் வாயிலாக வெளியிடப் பட்டதன் காரணம் என்ன?
- உலகப் புகழ்பெற்ற, உலகமே மதிக்கக் கூடிய காரல் மார்க்ஸ், மாவோ, லெனின் மற்றும் ஸ்டாலின் போன்ற தலைவர்களை ஆணாதிக்க பிரதி நிதிகளாகக் காட்டியிருப்பது ஏன்?
- உலக நிகழ்வுகள், போராட்டங்கள், மாவோயிஸ்டுகள், போராளிகள், புரட்சிக்காரர்கள், அகிம்சாவாதிகள் எல்லோரும் பெண்களை சிதைப்ப வர்கள் என்று கூறியுள்ளதன் காரணம் என்ன? விளக்கம் தருக.
- உலகில் எல்லாமே பெண்ணை சிதைப்ப தாக உள்ள ஆணாதிக்கம் என்கிறீர்கள். நீங்கள் சார்ந்துள்ள சினிமாத்துறையில் உள்ள பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் பற்றி மட்டும் ஏன் எந்தக் கருத்தும் கூற வில்லை?
- 6. உதவி இயக்குநர் தீபக் என்ற தொழி லாளியைத் தாக்கியது படைப்பாளியின் உரிமை என்கிறீர்கள். ஷோபாசக்தி தாக்கியதை ஆதரித்து இணையத்தில் வெளியிட்டிருந்தீர்கள் எனும்போது, தொழிலாளர்களுக்கும் அதே சுதந்திரம் உண்டா? இல்லையா?
- இலங்கைத் தமிழர் ஒருவர் நடத்தி வந்த இரண்டு எடிட்டிங் ஸ்டுடியோவை அபகரித் தது எந்த சுதந்திரத்தின் அடிப்படையில்? என்ன நியாயம்?
- 8. 15.04.2010 அன்று கூட்டப்பட்ட கூட்டத்திற்கு ம.க.இ.க. மற்றும் வினவு விமர்சனத்திற்கு எதிரான என்று ஏன் பிரகடனப்படுத்தவில்லை, இந்த நேர்மை யற்ற தனத்திற்குக் காரணம் என்ன?
- இந்து மக்கள் கட்சிக்கு மட்டும் எதிர்ப் பான கூட்டம் என்றால் கீழே எங்கள் லேபிளை ஏன் போட்டிருந் தீர்கள்?
- எழுதுவதோ, வெளியிடுவதோ உங்கள் உரிமை எனில், விமர்சனம் செய்வது எங்கள் உரிமை. அதற்கான விளக்கம் கேட்பது எங்கள் உரிமை. பதில் கிடைக்கும்வரை தொடர்ந்து எழுதுவது எப்படித் தாக்குதலாகும்?
- தனிமனிதத் தாக்குதல் என்று சொன்னால், நாங்கள் உங்கள் மீது கொடுத்த தனிமனிதத் தாக்குதல் என்ன?
- 12. ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதிபோல் ஆணாதிக்கத்தைப் பற்றி எழுதியதாக சொல்லிக்கொள்ளும் நீங்கள், பெண்கள், குடும்பத்தார் படிக்க முடியாத கவிதையை எழுதி உள்ளீர்களே. இதுதான் பெண்ணி யமா? இவ்வாறு பெண்களைக் கேவலப் படுத்தலாமா?
- எல்லோரும் பெண் பொறுக்கிகள் என்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சி.பி.ஐ., சி.பி.ம். கட்சிகளில் பெண் பொறுக்கிகள் யார்? யார்? உங்கள் சினிமாத்துறையிலும் யாரெல்லாம் பொறுக்கிகள்?
- 15.04.2010 அன்று நீங்கள் கூட்டிய கூட்டத் தின் உண்மையான நோக்கம் என்ன?
- இந்து மக்கள் கட்சியும் ம.க.இ.க.வும் ஒன்றா? விளக்குங்கள்.
- உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி மான நஷ்ட வழக்கு போடப் போவதாக சொன்னீர்களே, நாங்கள் ஏற்று வழி நடத்திச் செல்லும் கம்யூனிசக் கொள்கைகளை, சித்தாந்தங்களைக் கொச்சைப்படுத்தியதற்கு நாங்கள் உங்கள் மீது வழக்கு தொடுக்கலாமா? விளக்குங்கள்.
- காரல் மார்க்ஸ், புஷ் இருவரும் ஒன்றா? ஜிகாதியும் மாவோயிஸம் இரண்டும் ஒன்றா? விளக்கம் தேவை.
- கேரளாவில் எழுத்தாளர் பால் சக்காரியா மீதான தாக்குதல் சரியா?
- டி. கண்ணன் (இந்து மக்கள் கட்சி) அவர்களின் கேள்விகள்
- இப்படி ஆபாசமாக மதங்களையும், தலைவர்களையும் எழுதுவதுதான் கருத்து சுதந்திரம் என்றால் இன்னும் கருத்து சுதந்திரத்தின் எல்லை எவ்வளவு இருக்கிறது என்பதை வரையறுத்துக் கூற வேண்டும்.
- ஆபாசப் படங்களை வெளியிட்டு விற்பனை செய்வது ஒரு வகை? வார்த்தைகளால் எழுதி விற்பனை செய்வது ஒருவகை? உங்களின் வியாபார உத்திக்கு நாட்டின் கலாச்சாரத்தையா சீரழிப்பது?
கருத்துரிமைக்காக எழுந்த ஆதரவுக் குரல்
அ. மார்க்ஸ், எழுத்தாளர்
எழுத்தாளர் என்ற முறையில் லீனா மணிமேகலைக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே படைப்புரிமை கருத்து சுதந்திரம் இருக்கிறது. அந்த கருத்துக்கு உடன்படாதவர்கள் அல்லது எதிர்கருத்துடையவர்கள் அதேபோல் எழுத்தின் மூலமே தங்களது விமர்சனத்தையோ எதிர்கருத்தையோ முன்வைக்க வேண்டும். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதோ மிரட்டுவதோ உண்மையான ஜனநாயகமாகாது. அதே போல ஒருவரது படைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்பதோ காவல் துறையிடம் புகார் அளித்துத் தடை செய்யக்கோருவதோ எழுத்து சுதந்திரத் திற்கு எதிரானதாகும். இது கண்டனத்திற்குரியது.
ஓவியா, சமூகஆர்வலர்
பெண் உணர்வுகள் எழுதக்கூடாத விஷயமல்ல. பெண்கள் தங்கள் உடல் மொழிகளை முன்வைத்து எழுதும்போது மட்டும் அதிர்ச்சி அலைகளை சமூகம் வெளியிடுகிறது. பெண் உடலும் கருப்பையும் ஆணுக்கே சொந்தமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்ப்பதுதான் கவிதை.
ரஜினி, வழக்கறிஞர்
அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் அத்து மீறல்களைக் கொண்டிருப்பதில் தவறில்லை. பெண்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எல்லா வற்றையும் தாண்டி கருத்து சுதந்திரத்தைக் காக்க முதலில் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.
சுகுமாரன், மனித உரிமை இயக்கம்
எழுதுவது ஒருவரது தனிமனித உரிமை. இதை எதிர்ப்பது என்பது கூடாது. ஜனநாயக ரீதியில் விமர்சிப்பது விமர்சிப்பவர்களின் உரிமை. ஆகவே அவரவர் தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.
........................
வேண்டுதல் வேண்டாமை
கோவன் மகன்
அப்பாடா கடந்த ஒன்ற மாசமா நடந்திட்டு இருந்த நாடகம் ஒரு வழியா முடிஞ்சிருச்சுங்க. இதுக்கு முன்னால இந்த நாடகத்த ரெண்டு தடவ நடத்தியிருக்காங்க. இப்ப நடந்து முடிஞ்சது அந்த நாடகங்களோட மூணாவது பாகம். ஏற்கனவே நடத்திய நாடகத்துக்கு கிடைச்ச வருமானத்தவிட அதிகமான வருமானமும்; வரவேற்பும் இப்ப கிடைச்சிருக்குங்கறதுல இதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ரொம்பவும் சந்தோசந்தான்.
சாதாரணமா நாமா பாக்குற நாடகத்துக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன வித்தியாம்னா சராசரி நாடகங்கள் எல்லாம் ஏதாவது கலையரங்குல நடக்கும். இல்லீனா, டிவியில சீரியல்ன்ற பேருல ஒளிபரப்புவாங்க. ஆனா, இந்த மெகா நாடகம் மட்டும் மைதானத்துல அதாங்க கிரவுண்ட்ல நடக்குது. இந்த நாடகத்தப் பாக்குற பைத்தியங்க மன்னிக்கோணும் ரசிகருங்க இந்தியாவுல (மட்டும்) அதிகங்கறதனால, கலையரங்குல எடம் பத்தாதுனு மைதானத்துல நடத்தறாங்க. இந்த நாடகத்தின் தயாரிப்பாளர் எதிர்பார்த்த மாதிரியே ஏகப்பட்ட கூட்டம். பல பேத்துக்கு டிக்கிட்டே கிடைக்கிலீனா பாத்துக்கோங்க.
அதனால, நேரடியா பாக்க கொடுத்து வைக்காதவிங்களுக்கு நல்ல வாய்ப்பா தொலைக்காட்சிலேயும் காட்டுனாங்கன்னா எந்தளவுக்கு இந்த நாடகத்துக்கு மதிப்பு இருக்கும்னு நீங்களே ரோசன பண்ணிக்கோங்க. அட இவ்ளோ நேரமா அந்த நாடகத்தோட பேரு என்னான்னு சொல்லல பாருங்க. அய்பிஎல் டொண்ட்டி 20 (மிறிலி. ஜி20) என்கிற இந்த நாடகத்து நடிகருங்க ஒவ்வொருத்தரும் கிரிக்கெட் வீரருங்க கணக்கா என்னமா ஆக்டிங் குடுக்கறாங்க. பந்த அடிக்கற மாதிரியே அவுட்டாகறது, ஜெயிக்கற மாதிரி வந்து தோக்கறது, தோக்கற மாதிரியே ஜெயிக்கறதும் அப்பப்பா.... சொல்லும் போதே நமக்கு கண்ணக் கட்டுதே. அந்த கிரவுண்டுல அவிங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
ஆனா, சும்மா சொல்லக் கூடாதுங்க. அவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சாலும் அதுக்கு தகுந்த கூலிய கோடியில வாங்கியிருக்காங்கன்னு தெரிஞ்ச பின்னால நமக்குப் பெருமை தாங்க. அதே மாதிரி இந்த நாடகத்த தயாரிச்ச மோசடி மன்னன் அய்யய்யோ மன்னிச்சிடுங்க லலித் மோடி அண்ணன் ரசிகருங்க எதிர்பார்க்கற மாதிரியும், பைனான்சியருங்க மனங்குளிர்ற மாதிரியும் ரொம்பவுந்தான் சிரமப்ப்பட்டிருக்காரு. அதுக்கு, பலனா அவருக்கும் ஓரளவுக்கு லாபம் கிடைச்சிருக்கு.
இது பொறுக்க முடியாதா அவரோட பார்ட்னருங்க சிலரு தங்களுக்கு லாபத்துல பங்கு தரலைன்னு கோவிச்சுக்கிட்டு அந்த நாடகக் கம்பெனியிலிருந்தே அவர துரத்திட்டாங்க படுபாவிங்க. இருந்தாலும் அய்பிஎல் நாடகக் கம்பெனியின் மற்ற பார்ட்னருங்க சில பேரு இந்த மோசடிக்கு (நாக்குதாங்க கொளறுது) மோடிக்கு ஆதரவாத்தான் இருக்காங்க.
அவிங்கள்ல ரொம்ப முக்கியமானவரு இந்தியக் குடிமக்களோட தாகத்த தீக்கறதுக்காவே ‘தண்ணி’ கம்பெனி நடத்திட்டு இருக்கற விஜய் கொள்ளையாவும் (அடச்சே... என்னடாது இப்படி டங்க் சிலிப்பாகுது) விஜய் மல்லையாவும், சமூக சேவகிகங்க ஷில்பா ஷெட்டியும், ப்ரீத்தி ஜிந்தாவும்னு நெறையப் பேரு லலித் மோடிக்கு ஆதரவா இருக்காங்க. எப்படியோ இந்த அய்பிஎல்ங்கற நாடகக் கம்பெனி நல்லபடியா நடந்து மேலும் சிறப்பான நாடகங்களை நடத்துனா பரவாயில்லினு நெனைக்கிறேன். ஏன்னா, இந்த நாடகம் அரங்ககேற்றத்தின் மூலமா கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடிக்கு மேல் புழங்குது.
இந்த வருமானத்துக் குத்தான் பல உச்சிக்குடுமிங்க கையில துர்ப்பைப் புல்லுக்குப் பதிலா கிரிக்கெட் மட்டைய வச்சுகிட்டு அந்த ஆட்டுஆட்றாங்க. குறிப்பா டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, கும்பளேன்னு அத்தனை பூணூல்களும் (அடக்கருமமே என்னத்துக்குத்தான் இப்படி ஸ்லிப்பாகுதுன்னு தெரியலியே) பிளேயர்களும் இந்த அய்பிஎல் மாதிரியான நாடகத்த நம்பித்தான் கெடக்கறாங்க. அவா ‘நம்ம வாயில மண்ணள்ளி போடற மாதிரி, ‘அவா’ வாயில்லேயும் மண்ணள்ளி போட்றாதீங்க அது ரொம்ப ‘பாவம்’....!
ரொம்ப நாளா பயன்படுத்திட்டு இருக்கற என்னோட பழய செல் பேசிய அதுதாங்க மொபைல மாத்திட்டு புதுசா ஒன்னு வாங்கலாம்னு நெனச்சேன். செல்போனுக் கடக்காரங்க ஒவ்வொருத்தரும் கொடுக்கற விளம்பரத்தப் பாத்தா நமக்கு முழி பிதுங்குது ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்னு ஒரு பக்கம் விளம்பரம். இன்னொரு பக்கத்துல சிம்கார்டு இலவசம்னு ஏகப்பட்டது ஏங்கண்ணுல பட்டுச்சு. நமக்குத் தேவை நல்ல செல்போனு அத எங்க வாங்கறதுன்னு யோசிச்சப்பத்தான் ரவுசு ரமேசு வந்தான். ‘என்னப்பா ஒரே ரோசனைய இருக்கறாப்ல இருக்குது. என்ன விசயம்’னு ரொம்ப அக்கறைய கேட்டான். நானும் விசித்த சொன்னேன். சும்மாவே அவனுக்கு ஏகப்பட குசும்பு. இந்த செல்போன் வாங்கறதப் பத்தி சொன்னதும் கொஞ்சம் கூடுதலாவே ஆரம்பிச்சுட்டான்.
‘ஏனப்பா இதுக்குப் போயி யாராவது இவ்ளோ யோசன பண்ணுவாங்களா.... கௌம்புப்பா’ ன்னு அதிரடியா சொன்னான்.நானும் ‘அடதென்னப்பா திடீர்னு கௌம்புனா எங்க போறது’ ன்னு கேட்டேன்.
“நல்ல செல்போனை வெல கொறச்சலா உள்ளூர் மட்டுமில்லாம, வெளிநாட்டுக்கும் பேசற மாதிரி வசதியோட வேலூர்ல கிடைக்கும் சீக்கிரம் கௌம்புப்பா’’னு அவசரப்படுத்தினான். என்னடாது சென்னையில இல்லாத புது மாடல் வேலூர்ல மட்டும் எப்படி இருக்கும்னு. இதையே அவங்கிட்டையும் கேட்டேன்.
அதுக்கு அவஞ்சொல்றான் “அடப் போடா போக்கத்தவனே ஒரு வாரமா வேலூர்ல புது டெக்னாலஜி கொண்ட செல்போனு இருக்குன்னு சட்டமன்றத்துலேயே பேசிக்கறாங்க உனக்குத் தெரியலியே’ன்னு திட்றான். எனக்கு இன்னும் ஆவலாச்சு, ‘ஏன்டா வேலூர்ல புது செல்போனு கெடைக்கறதப் பத்தியெல்லாமா சட்டமன்றத்துல பேசிக்கு வாங்க’’னு கேட்டுகிட்டே நானும், அவனும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துட்டோம். அப்ப மீண்டும் கேட்«ன். ‘ஏம்பா புது செல்போனு வாங்கப் போறமே வேலூர்ல எந்த இடத்துலேன்னு விசாரிச்சிட்டியா...? அந்த இடம் உனக்கு தெரியுமா...-? என்று கேட்டேன். ‘நீ உம் பேர கோவன் மகன்னு வெச்சகிட்டதுக்கு ‘கோமுட்டி தலையன்’னு வெச்சிருக்கலாம். வேலூர்ல புது செல்போனுங்க கூரு கட்டி விக்கற எடம் வேலூர் சென்ட்ரல் ஜெயில்னு தமிழ்நாட்டு மக்கள்ல பல பேருக்கு தெரியும். உனக்கு இன்னும் தெரியலியே’ன்னு தலைல அடிச்சு கிட்டான்.
அதக் கேட்டதும் யாரோ எங்காதுல வெடிகுண்டத் தூக்கிப் போட்டா மாதிரி இருந்துச்சு. ஆனாஅவன் சிரிச்சுகிட்டே ‘வேலூர் ஜெயில்லதான் செல்போனுங்க ரொம்ப சீப்பா கெடைக்கும். தீர்ந்து போறதுக்குள்ள சீக்கிரம் போய் வாங்கலாம் வாடா’ன்னு சொன்னாம் பாருங்க எனக்குத் தலையே சுத்த ஆரம்பிச்சது. ‘ஜெயில்ல எப்படிடா செல்போனு கெடைக்கும்’னு கேட்டேன்.
“பத்தொன்பது வருசமா ஜெயில்ல ஆயுள் கைதியா வெச்சிருக்காங்களே நளினி அவிங்களுக்கு திடீர்னு ஒரு செல்போன் கெடச்சதுன்னும், அதுமூலிமா லண்டன், கனடான்னு பல வெளிநாடுகளுக்குப் பேசியிருக்காங்கன்னு சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டு புடுச்சு சொல்லியிருக்காரு’ங்கறான்.
‘கைதிகளுக்கு செல்போனு ஈஸியா கெடைக்கற அளவுக்கு ஜெயில்ல செல்போன் விக்கறவிங்க யாருப்பா?’னு நானும் உடமா கேட்டேன் அப்பத்தான் ஆகா இவன் நம்மள ஏதோ வில்லங்கத்துலான் மாட்டிவிடப்போறன்னு நெனச்சுட்டு கழிப்பறை போறதாச் சொல்லிட்டு காம்பவுண்ட எட்டி குதிச்சு அவங்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன். அப்ப எனக்கொரு யோசன வந்தது. என்னமோஅந்தம்மா ரொம்ப ஆபாத்தானவிங்கன்னும் அவிங்கள வெளிய விட்ட சட்டையோ பாவடையோ கிழிஞ்சிரும்னு சொல்லி 19 வருசமா அடச்சு வெச்சு தீவிரமா கண்காணிக்கற விங்களுக்கு தெரியமா நளினிக்கு செல்போன கொடுத்த புண்ணியவான் யாராயிருக்கும்? ஒருவேள கண்டுபுடுச்சவிங்களே வெளையாட்டுத்தானமா ஒளிச்சுவெச்சுருபாங்களோ? என்னமோபோங்க இதெல்லாம் தமிழினத் தலைவருக்குத்தான் தெரியுமோ என்னவோ?
...............................
ஐ.பி.எல். ஜி 20ல் ரெண்டஸ்வன் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனம் ரூ. 1530 கோடிக்கு கொச்சி அணியை ஏலத்தில் எடுத்தது. சசி தரூர் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது காதலி சுனந்தா புஷ்கருக்கு ‘ஸ்வெட்டி ஈக்விட்டி’ என்னும் சேவைப் பங்குகளான ரூ. 70 கோடியைக் கிடைக்கச் செய்துள்ளார். இது சசி தரூரைப் பதவி இழக்க வைக்கும் அளவுக்கும் சுனந்தாவை சேவைப் பங்குகளைத் திரும்ப கொடுக்குமளவுக்கும் நிர்பந்தித்திருக்கிறது என்றால் நெருப்பில்லாமல் புகையுமா?
ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகே ஐ.பி.எல். ஜி 20-இல் கலந்துகொள்ள தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மார்ச், 2010இல் தொடங்கப்பட்ட ரெண்டவஸ் நிறுவனம் இதில் கலந்துகொள்ள எப்படி அனுமதியளித்தார்கள் என்னும் கேள்வி எழுந்தது. அதோடு அந்த சேவைப் பங்கு என்பது 15 (சுமார் 5 கோடி) சதவீதத்தைத் தாண்டினாலே மத்திய அரசின் ஒப்புதலோடுதான் கொடுக்கப்பட வேண்டும் என்பது நியதி. நிபந்தனைகள் இவ்வாறு இருக்கையில் எந்தவித சம்பந்தமும் இல்லாத சுனந்தாவுக்கு அளிக்கப்பட்டிருப்பது என்றால் சசி தரூரின் பதவிச் செல்வாக்கினால் மட்டுமே. பிரதமரின் தலையீட்டினால் மட்டுமே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 26 அன்று முடிவடைந்த ஐ.பி.எல். ஜி 20 பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டு ஓய்ந்துள்ளது. இறுதிப் போட்டி முடிந்த சில நிமிடங்களில் அவற்றின் தலைவரான லலித் மோடி மீது சர்ச்சையை கிளம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது சிரயு அமன் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ப்ரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள்தான் என எந்த முறையான ஆவணமும் இல்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. பல நூறு கோடிகளை முன்வைத்து ஏலமிடப்படும் ஐ.பி.எல். ஜி 20 போட்டி முறையற்று நடப்பது சமூக அளவில் வெறுக்கத்தக்கதாகவே உள்ளது.
.....................
சாமியார்களின்
பாலியல் தேடல்கள்
பாலியல் தேடல்கள்
சகா. சசிக்குமார்
கொலை_கொள்ளை_கற்பழிப்பு_மோசடி போன்றவைகள் ஆன்மீக சேவை புரிபவர் களின் அடையாளமாக இருந்து வருகிறது. அவற்றின் பலனாக சிறைத் தண்டனைகளையும், வழக்குகளையும் சந்திப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்த வரிசையில் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்தா, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்குமாய் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரன், பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த கோயில் அர்ச்சகன் தேவநாதன் என்கிற பட்டியலில் பல்வேறு காவிகளும் இணைந்தவண்ணமாய் இருக்கின்றனர்.
அந்த காம’கோடிகளில் தற்பொழுதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியவர்கள் நித்யானந்தா மற்றும் கல்கி விஜயகுமார். ஆழமான ஊடுருவும் பார்வை, அமைதியான பேச்சு, யோகா, தியானம், மனஅமைதி என்பவற்றில் நிபுணத்துவம் ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு, காசு பொறுக்கி ஊடகங்களின் துணையோடு பிரபலமடையும் இந்த சாமியார்களின் குறிக்கோள் பணம் பண்ணுவது மட்டுமே.
அடுத்த இலக்கு பெண்களுடனான பாலியல் தொடர்பு. இவர்களின் ஆன்மீக சித்து விளையாட்டை உண்மையென நம்பி அகப்பட்டுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது வேதனையானதாக இருக்கிறது.
இந்த சமூக இழிநிலையை கண்டிப்பதற்கோ, சாமியார்களின் அடவடிகளைத் தண்டிப்பதற்கோ ஆட்சியாளர்கள் முனைப்போடு இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால், காஞ்சி சங்கராச்சாரி இப்பொழுது தனது குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோயில் கருவறையிலேயே அருவருக்கத்தக்க முறையில் களியாட்டம் போட்ட தேவநாதன் பினையில் வெளிவந்து சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறான்.
இவர்கள் மீது ஆரம்பத்தில் ஆத்திரப்படும் மக்கள் தங்களது ஞாபக மறதியின் காரணமாக மறந்துவிட்டு வாய்முடி மவுனிகளாகவே இருந்து கொண்டு அடுத்த சாமியாரை நாடிச் செல்கிறார்கள். அதற்குக் காரணம் இந்தியாவின் தலைமை அமைச்சர் முதற்கொண்டு குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், நீதியரசர்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் என்று எல்லா பிரபலங்களும அனைத்து சாமியார்களின் கால்களில் விழுந்து கிடக்கும் மூட பக்தர்களாக இருப்பதுதான்.
அதனால்தான் அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கு இழந்தாலும் மதத்தின் கலாச்சாரக் காவலர்கள் புதிய சாமியார்களை களமிறக்குவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நமது நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழகியிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ‘காமகேடி காவிகள்’. ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளில் பெண்கள் சிக்கி சீரழிவதற்கானக் காரணங்களை அறிவதற்கும், அவற்றில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை உளவியல் மருத்துவர் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களின் கருத்து நம்மை சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.
ஷாலினி, உளவியல் மருத்துவர்
இயல்பாகவே பெண் களுக்கு ஒரு இயலாமை ஒரு பலவீனம் இருக்கிறது. நம்மைப் பாதுகாக்க யாருமில்லை, தனக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை என்கிற நினைப்புதான் காரணம். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை தனக்கு ஆறுதல் சொல்லவோ, பாதுகாக்கவோ யாராவது கிடைத்தால் அவருக்காக எதையும் செய்வதற்குத் தயாராகத்தான் இருக் கிறார்கள். இந்த பலவீனம் பெண்களுக்கு ஏன் இருக்கிறது என்றால், சுயகவுரவம், சுயசார்பு இல்லாதபோது மற்றவர்களை சார்ந்து வாழும் நிர்பந்தத்தில் தள்ளப்படும்போது இந்த மனஅழுத்த நிலைக்கு வந்து விடுகிறார்கள். பெண்களின் இந்த மன அழுத்தத்தைச் சாமியார் போன்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பகடை காய்களாக்கிவிடுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதுபோல் சாமியார்கள் மட்டுமல்ல அதிகாரத்தில உள்ள பல ஆண்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி அல்லது ஒரு துறைத்தலைவர் அல்லது மருத்துவர்கள் என்று யார் வேண்டுமானாலும் பெண்களை தரக் குறைவாக நடத்துவதோ மானபங்கம் செய்வதோ அல்லது பாலியல் வன்முறை செய்வதோ அல்லது அவர்களை ஏமாற்றி அவர்களின் ஒத்துழைப்போடு செயல்படுவதோ நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் என்ன கவனிக்க வேண்டியது என்றால் பெண்களிடம் அதிகாரம் இல்லை ஆண்களிடம் இருக்கு என்பதுதான். அதிகாரம் இருப் பதனால்தான் ஆண்களிடம் பெண்கள் பணிந்து போய் விடுகிறார்கள்.
இப்ப பார்த்தீர்கள் என்றால் உச்சத்தில் இருக்கற எந்த நடிகையும் ‘அந்த’ சாமியாரிடம் போய் விழவில்லை. யாருக்கு தோல்வியோ, யாருக்கு வாழ்க்கையில் விரக்தியோ அவர்கள்தான் போய்விழுகிறார்கள். பெண்களுடையே பலவீனமே இதுதான் என்கிறபோது பெண்களுக்கு அதிகாரத்தை வழக்குவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு ஏன் அதிகாரம் இல்லையென்றால் அது மாதிரியான சமூகச் சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமூகச் சூழலில் இருந்து மாறுபட்டு பெண்களுக்கு கொஞ்சமேனும் அதிகாரம் வழங்கப்படும் என்றால் இந்த மாதிரி சிக்கல்கள் வராது.
சாமியார்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே இருக்கும் பொழுது வாழக்கையில் இதற்குப்பிறகு என்ன என்கிற முயற்சியில் இறங்கி விடு கிறார்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித் தார்கள் என்றால் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் எல்லாம் கட்டி விடுகிறார்கள். மாறாக சிற்றின்பத்தில் அடுத்தது என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தார்கள் என்றால் அது அவர்களுக்கே பிரச்சனையாக மாறிவிடுகிறது. அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்பவர்தான் துறவி. ஆனால் எதையுமே துறக்காமல் அந்த சிஸ்டத்தையே ஏமாற்றுவதால் பொது மக்களுக்கு அவர்கள் மீது கோபம் வந்து விடுகிறது.
சாமியார்கள் பிரம்மச்சரியத்தை நம்பி எல்லாம் வலியுறுத்த வில்லை. அது அவர்களுடைய தொழில் என்ன சொன்ன பொழப்பு ஓடும், என்ன கதை சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதை எல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். அதைப் பின்பற்றுகிறார்கள், இல்லையா என்பதைத் தெரிந்து சொள்ள வேண்டியதுப் பொதுமக்களாகிய நம்ம கடமை. மதம் சார்பா என்ன சொன் னாலும் நம்ம மக்கள் நம்பிவிடுவார்கள். அது எந்த மதமாக இருந்தாலும், அங்க போனால் அது நடக்கும், இங்க போனால் இது கிடைக்கும் என்று சொன்னால் எவ்வளவு செலவழிச்சும் அதை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்தளவுக்க மூடநம்பிக்கைகள் வளர்ந்திருப்பதைத் தடுப்பதற்கு நாம என்ன செய்திருக்கிறோம் என்கிற கேள்விதான் எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாமியார் மாட்டுகிறார். ஆனால் பாலியல் கல்வியை நாம இன்னும் தெளிவடையவில்லை என்றால், பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவில்லை என்றால் நாம இன்னும் பிற்போக்குத் தனமாகத்தான் இருக்கிறோம் என்பது உறுதியாகிறது.
பேராசிரியர் பழனி
தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்திடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். உழைப்பால் உயர வேண்டும் என்கிற தன் நம்பிக்கை பெற வேண்டும். பெண்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் மருத்து வரைத்தான் நாடிச்செல்ல வேண்டுமே ஒழிய சாமியார்களை நோக்கி ஓடக்கூடாது. அப்படி சாமியார்களை தேடிப்போகும்போது பெண்களின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அடிமையாக்குகிறார்கள். எதையும் அறிவு ரீதியா ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
பேராசிரியர்
ராச. பாண்டியன்
தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி
இறை நம்பிக்கை உள்ளவர் களிடம் கூட குறிப்பிட்ட கடவு ளால்தான் லாபம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அந்தக் கடவுளை கும்பிடுகிறப் போக்கு அதிகரித்துள்ளது. பக்தர்களிடம் நிறைந்துள்ள இந்த லாப நோக்கம்தான் கோயிலில் உள்ள மூலவரை விட்டுவிட்டு நவக்கிரகங்களைக் கும்பிடுவதும், அந்த நவக்கிர கங்களுக்கு முன்னால் நிற்கின்ற சாமியார்களை நோக்கிப் போய் பலனடைய நினைக்க வைக்கிறது. மக்கள் சாமியார்களை நம்பி எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் பல சாமியார்கள் உருவாகிவிடுகிறார்கள். இன்னைக்கு இருக்கிற அத்தனை சாமியார்களும் இல்லறதுக்கு போகாமலேயே இளமையிலேயே துறவறத்துக்கு போய் விடு கிறார்கள். பாலூக்கம் என்பது இயல்பாக வரக்கூடிய ஒன்று. பாலூக்கத்திற்கு ஈடுகொடுக்க வில்லை என்றால் தவறான வழிக்குதான் போகச் சொல்லும். நம்முடைய பகுத்தறிவு நெறியையும், திருக்குறள் வாழ்வியல் முறையையும் பின்பற்றி வாழ்வதாக இருந்தால் இப்படிப்பட்ட சிக்கல்கள் வராது.
முனைவர். ஜெயலட்சுமி
இணைப் பேராசிரியர்,
மாநிலக் கல்லூரி
பெண்களுக்கு கடவுள் என்பது ஆழமான நம்பிக்கை. எல்லாமே தனக்கு சுலபமா கிடைக்க வேண்டும் என்கிற சுயநலப்போக்கும் அவர்களிடம் இருக்கிறது. பெண்கள் சாமி வந்து ஆடுவது என்பது கூட உளவியல் ரீதியா தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளவும் அல்லது தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்தான். தங்கள் பிரச்சனைகளை சாமியார்களிடம் போய் சொன்னால் தீர்வு கிடைக்கும்னு நம்புகிறார்கள். இன்னொன்று சாமியார்களுடைய தோற்றமும் பெண்கள் ஏமாந்து போவதற்குக் காரணமாக இருக்கிறது. பெண்ணிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாலே தன்னை மதிக்கிறார்கள் என்பது அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. இவைகள்தான் பெண்கள் சாமியார்களிடம் அடிமையாவதற்குக் காரணமாக அமைகிறது.
காஞ்சி மாமல்லன்,
பொதுச் செயலாளர்
அறிவுச்சுடர் அம்பேத்கர் மாமன்றம்
மதம் என்பது ஆண்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த மதத்தைக் கட்டிக் காப்பாற்றும் வேலையை பெண்கள்தான் செய் கிறார்கள். அதனால்தான் பெண்கள் அதிகமாக மதச் சடங்குகளில் ஈடுபடுவதும், சாமியார்களை நம்பி படையெடுப்பதும். இந்து மதத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுபடாது என்று தெரிந்து கொண்ட சாமியார்கள் புத்த மதத்தில் உள்ள கருத்துகளை எடுத்துக்கொண்டு இந்து மதத்தின் கருத்துக்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது ஆதிசங்கரர் காலத்தில் இருந்தேத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி புத்த நெறியில் இருந்து திருடப்பட்டதுதான் ‘யோகா’. இது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. இந்து சாமியார்கள் யோகா செய்வதை மிகப்பெரிய முதலீடாகக் கொண்டு மோசடி செய்து வருகிறார்கள். இந்த மோசடி சாமியார்களிடம் ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
...................
முயற்சி வெல்லும்
இசையமைப்பாளர் ஆர்.டி. மோகன்சிங்
‘முத்திரை பதிப்பதே இலட்சியம், முயன்றால் வெற்றி நிச்சயம்’ இந்த வரிகளுக்கு சாட்சியாய் விளங்கும் இலட்சிய மனிதர் இசையமைப்பாளர் ஆர்.டி. மோகன்சிங். சஹாராவில் அமர்ந்தாலும் சஹானா பாடும் இசைக்காதல் இவருடையது. திசைகள் தேடி கண்களிலும் இதயத்திலும் சுமந்து கொண்டி ருப்பது ஓர்உன்னதமான திரைக்கனவை! கனவு சுமப்பவன் தன் கண்களை நம்பினால் கனவு நனவாகும். தன்னை நம்பினால் கனவு நனவாகும். இதோ, தன்னம்பிக்கையோடு போராடிய மோகன்சிங் தன் பல்லாண்டு கனவைப் பலவலிகள் கடந்து இன்று நனவாக்கியுள்ளார்.
‘தைரியம்’ என்ற அதிரடித் திரைப்படத்தில் இசையமைப் பாளராகக் களம் கண்டிருக்கும் மோகன்சிங் அப்படத்தின் தலைப்பைத் தன் உழைப்பில் காட்டி வருகிறார்.
அந்த உழைப்பாளியுடன் ஓர் உரையாடல்...
வணக்கம். தங்கள் இசைப்பயணத்தின் அடித்தளம் குறித்துக் குறிப்பிடுங்கள்.
சிறுவயதிலேயே இசை மீது எனக்குக் காதல் உண்டானது. இளமையில் நான் வறுமையில் வாடினாலும் இசையார்வம் என்னை உற்சாகத்துடன் இயங்க வைத்தது. அப்போதெல்லாம் மேடைநாடகங்கள் மிகப் பிரபலம். ஆதலால் நாடகம் நடக்கும் இடங்களுக்குச் சென்று அங்கு இசைக்கப்படும் கருவிகளில் என் விரல் பதித்துக் கலையார்வத்தை வளர்த்துக் கொண்டேன்.
தாங்கள் எந்தெந்த நாடகக் குழுக்களில் பணியாற்றி யிருக்கிறீர்கள்?
ஒய்.ஜி.பி. நாடகக்குழு, மௌலி, விசு நாடகக் குழுக்களில் இணைந்து நான் பணி புரிந்திருக்கிறேன். மிகவும் புகழ்பெற்ற மனோரமாவின் ‘மியுசியோரமா’ இசைக் குழுவில் தலைமைப் பொறுப்பு வகித்த அனுபவமும் உண்டு.
நாடகப் பணி அனுபவத்திற்கும் திரையுலக அறிமுகத்திற்குமிடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டது குறித்து....
ஆம். அந்த இடைவெளி இன்னல் நிறைந்தது. ஆனாலும் நான் மன உறுதியை இழக்கவில்லை. உழைப்பை முதலீடு செய்து தொடர்ந்து போராடி என் கனவை நிறைவேற்றப் பாடுபட்டேன்.
முதல் திரைப்படம்....
கடும் போராட்டத்திற்கு பின்னர் இயக்குநர் & நடிகர் குமரன் அவர்களின் தைரியம் திரைப்படத்தில் இசையமைப்பளராகப் பணியாற்றினேன். அந்தப் படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தைரியம் திரைப்படத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்...
என் அருமைச் சகோதரர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் தைரியம் திரைப்படத்தில் ஒரு கானாப் பாடலைப் பாடினார். பாடலுக்கான அவரது பாராட்டு மழை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னணிப் பாடகர் எஸ்..பி.பி அதே திரைப்படத்தில் ‘ஹேப்பி நியு இயர்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடலைப் பற்றி பிரபல வார இதழொன்றில் அவர் குறிப்பிட்டுச் சொன்னது எனக்கு நெகிழ்ச்சியான அனுபவம். முன்னோடிக் கலைஞர்களின் வாழ்த்துக்கள் என்னை வழி நடத்தும்.
தற்போது பணியாற்றி வரும் திரைப்படங்கள்...
இயக்குநர் எஸ்.என். பிரசாத்தின் கை வண்ணத்தில் உருவாகும் நேர்த்தியான கதைக் களத்திற்குத் தற்சமயம் இசைப் பொறுப்பேற்றுள்ளேன். தொடர்ந்து, இயக்குநர் பழனியின் ‘எங்க ஊரு சோழ வந்தான்’ திரைப்படத்திற்கும் இயக்குநர் கோபியின் ‘கோலி’ திரைப்படத்திற்கும் இயக்குநர் கருணாநிதியின் ‘சித்திரைத் திருவிழா’ திரைப்படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறேன். அனைத்துமே சிறப்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள்.
இசைத்துறையில் தங்களை இடையறாது ஊக்குவித்தவர்கள்...
பெருமதிப்பிற்குரிய அன்பு அன்னை மனோரமா அவர்கள் என்னைப் பாது காத்து என் இசையார்வத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தியவர். இயக்குநர் & நடிகர் குமரன் அவர்கள் என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவரது இதயம் போற்றத்தக்கது! இவர்களே என்னை எப்போதும் ஊக்குவிப்பவர்கள்.
தங்களின் எதிர்கால இலக்கு?
உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இசையில் எனக்கான பணியைத் திறம்படச் செய்ய வேண்டும். தடைகள் பல கண்டுள்ளேன். ஆனாலும்.. என் முயற்சி வெல்லும்! (குரலில் உறுதி தொனிக்கிறது)
சந்திப்பு: கார்க்கோ
.....................
திரை
தி ருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் என். சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்திருக்கும் படம் ‘பையா’. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என்ற கனமான படங்களுக்குப் பிறகு கார்த்தி பக்கா மசாலாப் படக் கதாநாயகனாக வலம் வந்திருக்கும் படம், அவருக்கு இன்னொரு முகத்தையும் தந்திருக்கிறது. ஹீரோயின் தமன்னா.
இளையோரை வசீகரப்படுத்தி மீண்டும் பார்க்கத் தூண்டும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான டூயட் பாடல்கள் (கதாநாயகியின் அரைகுறை ஆடையேற்பு), அடுத்தடுத்து இடம்பெறும் இயற்கையழகு என லிங்குசாமி கலக்கிய ஒரு மசாலா கலவையே இப்படம். சரி கதையைக் கூறுங்கள் என்றுதானே கேட்கிறீர்கள். ம்.... கதை... கேட்கக் கூடாத கேள்வி. படம் பார்த்தோமா, என்ஜாய்மெண்ட் இருந்ததா அதைத்தான் பார்க்க வேண்டும் என்கிறது படம்.
தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பெண்ணுடன் பெங்களூருவிலிருந்து மும்பை செல்ல வாய்த்த இளைஞன், வழியில் எதிர்பாராத சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்ன என்பதைத்தான் தேடியிருக்கிறார் லிங்குசாமி.
கார்த்தி புதுவிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் இரண்டு படங்களைவிடக் கலர் கலரான டீ -ஷர்ட், ஜீன்ஸ் என கலர்புல்லாக வலம் வருகிறார். நடிப்பிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அசத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். உதாரண மாக தமன்னாவை அவரது வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டுப் பிரியும்போது காதலுணர்வை யெல்லாம் தேக்கி ஃபோனில் பேசுவார் பாருங் கள், கொள்ளை கொண்டுவிடுகிறார். சூர்யாதான் குரல் கொடுத்தாரோ என்ற எண்ணத்தையும் இந்த இடத்தில் ஏற்படுத்துவதைத் தடுக்க முடியாது..
லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்குத் தடையாகி விடுவானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு.
தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்று தெரிகின்றபோது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே தடாலென்று கீழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டர் கலகலக்கிறது.
கோடையின் தாக்கத்தைத் தணிக்கும் அழகு தென்றலாக (கவர்ச்சி) தமன்னாவை இரண்டரை மணிநேரம் உலவ விட்டிருக் கிறார்கள். கார்த்திக், விஜய்ன்னு அவங்க மார்கெட் ஏறிக்கிட்டிருப்பதை “அடடா மழைடா அட மழைடா” பாடல் தமன்னா காட்டில் அடைமழை என்பதைக் காட்டுகிறதோ என்றுதான் தோன்றுகிறது.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக வலம் வந்து சுவாரசியம் கூட்டி யிருக்கிறது இப்பயணத்தில் இடம்பெறும் கருப்புநிறக் கார்.
இசை யுவன் ஷங்கர் ராஜா. வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரே ஒரு சோகப் பாடலையும் பாடி மனதில் நிற்கிறார். பாடல் வரிகள் முணுமுணுக்க வைக் கின்றன. மீண்டும் ந.முத்துக்குமாருக்கு ஓர் பெயர் சொல்லும் படம். காட்சிக்கேற்றவாறு மாறுவதில் மதியின் கைதேர்ந்த ஒளிப் பதிவு இப்படத்தை அழகுபடுத்துகிறது.
மற்றபடி, கோடையில் இளைப்பாறக் கிடைத்த நிழல்தான் இப்படம்.
.............
Subscribe to:
Posts (Atom)







